கண்டது
(சிவகங்கையில் கார் ஒன்றில் கண்ட வாசகம்...)
'அசையாச்சொத்து, அசையும் சொத்து எல்லாம் உடம்பு அசையும் வரைதான்.'
-வ.மீனாட்சி சுந்தரம்,
உலகம்பட்டி.
(வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள ஊரின் பெயர்கள்...)
நாகக்குடையான்
செம்போடை.
-ப.விஸ்வநாதன், அறந்தாங்கி.
(நெல்லையில் டீக்கடை ஒன்றில் கண்ட வாசகம்...)
'நீங்கள் உங்கள் மாமியார் வீட்டில் முதன் முதலாக குடித்த காபியை போன்று நாங்கள் தினசரி வழங்கு
கிறோம்...'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
கேட்டது
(கோவையில் ஒரு நிறுவனத்தில் மேனேஜரும், பியூனும்...)
'குறைவான சம்பளம் வாங்கி கட்டுப்படியாகல சார்... அதனால ராத்திரி ஆட்டோ ஓட்டப் போயிடறேன்... !'
'அப்படியா ரொம்ப சந்தோசம்... பாசஞ்சரை கூட்டிட்டுப் போகும்போதெல்லாம் நாலு முக்குல இருக்குற என்னோட ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு வந்துருங்க!'
-எம்.பி.தினேஷ், கோவை - 25.
(செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இரு பெண்கள்...)
'ஏங்க... விளம்பரம் பண்ணியிருக்கிற இந்த
நகைக்கடைக்கு எப்படிப் போகணும்?'
'ஏம்மா இந்த விலையிலயா நகை வாங்கப் போறீங்க?'
'இல்லீங்க... நல்ல விலைக்கு பழைய நகையை வித்துடலாம்னு!'
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
(விழுப்புரம் துணிக்கடை ஒன்றில் கடைக்காரரும், வாடிக்கையாளரும்...)
'எங்க கடையில வாங்குற துணிகளுக்கு ஒரு வருஷம் கேரண்டி தருவோம்...'
'அதுக்குப் பிறகு நாங்க துணியை பாத்திரக்கடைக்காரன்கிட்ட போட்டு கரண்டி வாங்கிக்கணுமா?'
-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
யோசிக்கிறாங்கப்பா!
முன்னேற்றத்தின் இரு எதிரிகள்
சோர்ந்து போவதும் சார்ந்து இருப்பதும்!
-சிவம், திருவள்ளூர்.
மைக்ரோ கதை
அந்தத் தொழில் அதிபர், தெருவில் கிடந்து எடுத்த ஒரு லட்ச ரூபாயை காவல் நிலையம் சென்று ஒப்படைத்து, 'இதை உரியவரிடம் சேர்த்துவிடுங்கள்!' என்று கேட்டுக்கொண்டதை ஊரே பாராட்டிக்கொண்டு இருந்தது.
காவல்துறை உயர் அதிகாரி அந்தத் தொழில் அதிபரின் வர்த்தக நிறுவனத்துக்கே சென்று பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்திச் சென்றார்.
அனைத்து நாளிதழ்களும் அவரது செயலைப் பாராட்டி செய்திகள் வெளியிட்டன.
'எதிலும் ஆதாயம் இல்லாமல் இதைச் செய்யமாட்டாரே?' -தொழில் அதிபரின் மனைவிக்கு மட்டும் ஏதோ சந்தேகம் எழ, 'எப்படிங்க உங்களால் இப்படிச் செய்ய முடிந்தது?' என்று வினவினார்.
'உனக்கு மட்டும் அந்த ரகசியம் சொல்றேன்... பண்டிகைகள் வருது. நம்ம சூப்பர் மார்கெட், ஜவுளி ஸ்டோர் விளம்பரம் செய்ய ஏராளம் செலவாகும்... இப்ப பார்த்தியா ஒரு லட்ச ரூபாயில தமிழ், இங்கிலீஷ் என, எல்லாப் பத்திரிகையிலும் நம்ம பெயர் இலவசமாய் வந்துடுச்சு?' என்றார்.
அதிர்ந்து போய் நின்றார் தொழில் அதிபரின் மனைவி.
- ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
எஸ்எம்எஸ்
'நடிகர்கள் திரையில் மட்டும் இல்லை; உறவினர்களிடமும் காணப்படுகிறார்கள்.'
-நெ.இராமகிருஷ்ணன்,சென்னை.
அப்படீங்களா!
குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கோப்புகள் ஆகியவற்றை பகிர மட்டும் பயன்பட்டு வந்த வாட்ஸ்ஆப் வெப்பில் ஆடியோ மற்றும் விடியோ சேவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக கணினி முன்பு அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது அறிதிறன்பேசியில் அழைப்பு வந்தால், அதைத் தேடி எடுப்பது பெரிய சவாலாக இருக்கும்.
இதனால் பணியில் பாதிப்பு ஏற்படுவதுடன், கவனமும் சிதறும். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாட்ஸ்ஆப் வெப் தளத்திலேயே நேரடியாக ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் பயனர்கள் தங்கள் அறிதிறன்பேசியைச் சார்ந்து இருப்பது குறைக்கப்படும். மேலும், இது ஜூம், கூகுள் மீட் போன்ற தளங்களுக்குப் போட்டியாக அமையும் என்று மெட்டா கருதுகிறது.
இந்தச் சேவையைப் பயன்படுத்த கணினியில் வாட்ஸ்ஆப் வெப் பக்கத்தைத் திறந்து, குறிப்பிட்ட நபரின் சாட் பகுதிக்குச் சென்றால், வலதுபுறம் மேலே கேமரா மற்றும் போன் போன்ற குறியீடுகளைத் தேர்வு செய்து, தேவையான சேவையைப் பயன்படுத்தலாம்.
இதற்காக புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. தற்போதைக்கு ஒருவருக்கு மட்டும் அழைப்பை மேற்கொள்ளும் சேவை வழங்கப்பட்டுள்ளது. குழு அழைப்புகளுக்கு அனுமதி இல்லை.
முதன்முறை இந்த சேவையைப் பயன்படுத்தும்போது, கணினியின் மைக்ரோஃபோன் மற்றும் கேமராவைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். கணினியில் உள்ள பெரிய திரை மற்றும் சிறப்பான இணையத்தின் வேகத்தைப் பொருத்து வீடியோ கால்களின் தரம் இருக்கும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

