
ஒரே இடத்தில் 99, 99, 999 சிலைகள்!
மிகப் பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கிய பகுதியாகக் கருதப்படுகிறது உனகோடி.

மிகப் பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கிய பகுதியாகக் கருதப்படுகிறது உனகோடி. ஹிந்தி, வங்க மொழிகளில் உனகோடி என்பதற்கு கோடி எண்ணிக்கையில் ஒன்று குறைவு என்பது பொருள். அதாவது 99, 99, 999.
இந்தியாவில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் ஒரே இடத்தில் அடர்ந்த மலைக்காடுகள் இடையே 99,99,999 சிலைகள் அமைந்துள்ளன. இது 'ரகுநந்தன் மலை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தச் சிலைகள் 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. இந்த மாபெரும் சிலைகள் ஏன் இங்கு முற்றுப் பெறாமல் இருக்கின்றன?
புராணங்களின்படி, ஒருமுறை சிவன் அனைத்து தேவர்கள், பிரதிநிதிகளுடன் கயிலாயத்தில் இருந்து புறப்பட்டு வாரணாசியை நோக்கிச் சென்றார். அவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு கோடி. இரவு நேரத்தில் இடையில் இளைப்பாற அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் இப்போதைய உனகோடி.
'அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னர் அங்கிருந்து கிளம்ப வேண்டும்' என்பது சிவன் கட்டளையாக இருந்தது. ஆனால், விடியற்காலையில் சிவனைத் தவிர எவரும் கண் விழிக்கவில்லை. கோபமடைந்த சிவன் அவர்களை அந்த இடத்திலேயே சிலையாக இருக்க சாபமளித்தார். சிவன் மட்டும் திரும்பிச்சென்றதால் மீதம் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு ஒன்று குறைவானது. மையப்பகுதியில் பைரவரின் 33 அடி உயரமான சிலை உள்ளது. அது சிவனின் திருவுருவமாகப் பார்க்கப்படுகிறது. அதன் இருபுறமும் இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று துர்கா தேவி எனச்சொல்லப்படுகிறது. நந்தியின் பல்வேறு உருவச்சிலைகள் பாறைகளிலும், பூமியில் பதிந்த நிலையிலும் காணப்படுகின்றன.
எந்த நவீன இயந்திரங்களும் இல்லாத பழங்காலத்தில், எந்த மனிதர்களால் மலையைக் குடைந்து இத்தகைய சிலைகளை உருவாக்கியிருக்க முடியும்? விடை தெரியாத ரகசியமாகவே உனகோடி இன்றும் நிற்கிறது. சிலைகள் அமைந்துள்ள இடத்தை 'சுப்ரைகுங்' என அழைக்கின்றனர். 'சுப்ரை' என்பதற்கு சிவன் என்பது பொருள். 'குங்' என்பது இடத்தைக் குறிக்கிறது. சிவத் தலம் எனப் பொருள் கொள்ளலாம். யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் அசோகாஷ்டமி மேளா என்ற விழா இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் இந்த இடத்தின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் ஏற்றுள்ளது. திரிபுரா தலைநகரான அகர்தலா விமான தளத்திலிருந்து சுமார் 180 கி.மீ. தொலைவில் உனகோடி அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





