/

இளம் வயதில் கின்னஸ் சாதனை!

வெண்ணிற சீருடை, இடுப்பில் கருப்புப் பட்டையுடன் கெத்தாக நிற்கும் எட்டு வயது சிறுமி சம்யுக்தா, உலகில் குறைந்த வயதில் 'டேக்வாண்டோ' பயிற்றுவிப்பாளராகி, கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2025, 6:35 pm

பிஸ்மி பரிணாமன்

வெண்ணிற சீருடை, இடுப்பில் கருப்புப் பட்டையுடன் கெத்தாக நிற்கும் எட்டு வயது சிறுமி சம்யுக்தா, உலகில் குறைந்த வயதில் 'டேக்வாண்டோ' பயிற்றுவிப்பாளராகி, கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் ஸ்ருதி - நாராயணன் , 'மதுரை டேக்வாண்டோ அகாதெமி'யை 2015-இல் இருந்து நடத்திவருகின்றனர். வாரத்துக்கு மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பள்ளியில் 120 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் குடும்பமே 37 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளது.

'என் பெற்றோர் எனக்கு உற்சாகம் அளித்தனர். நான் தவறுகள் செய்தாலும் அதை புரியவைத்து எப்படி சரியாகப் பயிற்சி செய்ய வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள். எங்கள் வீட்டில் சுவர்களில் தொங்கும் அப்பா, அம்மாவின் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்களை நான் தினமும் பார்த்து ரசிப்பேன். அந்த இடத்தில் எனது கின்னஸ் சான்றிதழும் மாட்டப்பட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அது இப்போது நிறைவேறியுள்ளது'' என்கிறார் சம்யுக்தா.

தனது மகள் சம்யுக்தாவின் சாதனை குறித்து நாராயணனிடம் பேசியபோது:

'நான் பொறியியல் படித்துவிட்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போதே 'டேக்வாண்டோ' பயிற்சி பெற்று பயிற்றுவிப்பாளராகப்' பகுதி நேர வேலையில் பணிபுரிந்தேன். தீவிர ஈர்ப்பால் டி.சி.எஸ். பணியில் இருந்து விலகிவிட்டு, சொந்த ஊரான மதுரையில் எனது வீட்டின் முதல் தளத்தில் 'டேக்வாண்டோ' பயிற்சி நிலையத்தைத் தொடங்கினேன்.

திருமணமானவுடன் என் மனைவி சுருதிக்கும் பயிற்சியை அளித்தேன். அவரும் இரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். வீட்டு மாடியில் நடக்கும் பயிற்சி வகுப்புகளைப் பார்த்து, அதில் பயிற்சி பெற சம்யுக்தா மூன்றாம் வயதில் ஆசைப்பட்டார்.

'டேக்வாண்டோ'வில் பயிற்சியாளர் மட்டுமல்ல; இந்தக் கலையில் 34 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 'டேக்வாண்டோ' சர்வதேசப் போட்டியில் இந்தியாவின் சார்பில், நான் பங்கேற்று காங்கிரீட் பாலங்களை ஒரு நிமிடத்தில் உடைத்து 34-ஆவது கின்னஸ் சாதனையைப் புரிந்தேன்.

'டேக்வாண்டோ' கலையில் ஆரம்பக் கட்டத்தில் பத்து கட்ட தேர்வுகள் உள்ளன. 10-ஆவது கட்ட தேர்வு பெற்றால் கருப்பு பெல்ட் கிடைக்கும். இதற்கு எட்டு நிலைகள் உள்ளன. நான் கருப்பு பெல்ட்டில் நான்காவது கட்ட தேர்வில் தேர்வு பெற்றுள்ளேன். 'டேக்வாண்டோ' பயிற்சியாளராக குறைந்தபட்சம் கருப்பு பெல்ட் பெற்றிருக்க வேண்டும். பயிற்சியாளராக 30 வகுப்புகள் எடுத்திருக்க வேண்டும். உலகில் 16 வயதுக்கு குறைந்த 'டேக்வாண்டோ' பயிற்றுவிப்பாளர் என்ற கின்னஸ் பெருமையைப் பெற பல நாடுகளின் 'டேக்வாண்டோ' கருப்பு பெல்ட் பெற்ற சிறார்கள் கலந்து கொண்டனர்.

மகள் சம்யுக்தாவுக்கு மூன்று வயதில் ஏற்பட்ட ஆர்வம்தான் கருப்பு பெல்ட் வரை தேர்ச்சி பெற வைத்தது. கருப்பு பெல்ட் பெற கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டிவரும்.

முதலில் அவள் பயிற்சி பெற வேண்டும் என்று என்னைக் கேட்டார். 'உடலில் வலி ஏற்படும். கால்களைத் தரையில் தொடும்படி , எதிர்திசைகளில் நீட்டி தரையில் அமர வேண்டும். கைகளை மடக்கி மாறி மாறி வேகமாகக் குத்த வேண்டும். கால்களைக் கொண்டு எகிறி எத்த வேண்டும். இதையெல்லாம் செய்ய விருப்பம் இருந்தால் பிளாக் பெல்ட் பெற பயிற்சி தருகிறேன்' என்று சம்யுக்தாவிடம் சொன்னேன். இதற்கு அவள் சம்மதித்தார்.

சம்யுக்தாவின் 'டேக்வாண்டோ' பயிற்சிகள் அடங்கிய காணொலியுடன், இதர சிறார்களுக்கு பயிற்றுவிக்கும் முறை அடங்கிய காணொலியையும் அனுப்பி வைக்க 'உலகில் குறைந்த வயதில் டேக்வாண்டோ' பயிற்றுவிப்பாளர்' என கின்னஸ் அங்கீகரித்தது.

சம்யுக்தாவிற்கு ஏழே முக்கால் வயது. கருப்பு பெல்ட்டில் முதல் நிலையில் இருக்கும் சம்யுக்தா சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு இரண்டாம் நிலைக்கு தேர்ச்சி பெற பயிற்சி செய்வார். ஆக, எங்கள் குடும்பம் 37 கின்னஸ் சாதனைகளை சாதித்துள்ளது.

அடுத்ததாக இரண்டரை வயதாகும் மகனுக்கும் மூன்றரை வயதில் 'டேக்வாண்டோ' கலையில் பயிற்சி அளிப்போம்'' என்கிறார் நாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.