டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலவசப் பயணம்...

லக்ஸம்பர்கில் 2020 மார்ச் முதல் அனைவருக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி உள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2025, 6:34 pm

சக்ரவர்த்தி

லக்ஸம்பர்கில் 2020 மார்ச் முதல் அனைவருக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி உள்ளது. இந்த வசதியை மக்களுக்கு அளிக்கும் உலகின் முதல் நாடான இங்கு ரயில்கள், ரோப் கார்கள், டிராம்கள், பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இந்த வசதி சுற்றுலாப் பயணிகளுக்கும்தான். உடன் எடுத்து செல்லும் லக்கேஜுகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் கட்டணம் இல்லை.

பொதுமக்களின் செலவுகளைக் குறைக்கும் விதத்திலும், ஆளுக்கு ஒரு காரில் பயணிப்பதால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கவும், சாலைகளில் வாகனங்களின் நெரிசலைக் குறைக்கவும், பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் கட்டணமில்லா பயணத்தை அந்த நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.

லக்ஸம்பர்க் நாட்டில் சுமார் 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். சிறிய ஐரோப்பிய நாடான இந்த நாடானது பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியால் சூழப்பட்டுள்ளது. கிராமியச் சூழலில் சுற்றுலாவுக்குப் பெயர் போனது. வடக்கில் அடர்ந்த காடுகள், இயற்கை பூங்காக்கள், கிழக்கில் பாறைகள், பள்ளத்தாக்குகள், தென் கிழக்கில் மொúஸல்லே நதி பள்ளத்தாக்கு போன்றவை அமைந்துள்லன. செங்குத்தான பாறைகளின் மீது கட்டப்பட்டிருக்கும் கோட்டை பிரசித்தி பெற்றது.

நாட்டின் தலைநகரத்தின் பெயரும் லக்ஸம்பர்க்தான். இங்கே லக்ஸம்பர்கிஷ், ஜெர்மன், ஃபிரெஞ்சு என மூன்று மொழிக் கொள்கை இருந்தாலும் ஆங்கிலம்தான் பெரும்பாலோருக்குப் பேச வரும்.

இங்கு ரயில் போக்குவரத்தைவிட, பேருந்துகளின் தடங்கள் அதிகம். 250 வழித்தடங்கள் உள்ளன. பல பகுதிகளை எளிதாக இணைக்கும்படியான சாலைகள் அமைந்துள்ளன. அதனால், சுமார் 550 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் பல பாகங்களுக்குப் பேருந்து மூலம் இலவசமாகச் சென்று வரலாம். தற்போது லக்ஸம்பர்க்கில் ஒரே ஒரு டிராம் பாதை மட்டுமே உள்ளது. விரைவில் நான்கு டிராம் வழித்தடங்கள் போடப்பட உள்ளன.

லக்ஸம்பர்க்கில் வசிப்பவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. ஊதிய முறையில் ஏற்றத் தாழ்வுகள் குறைவு. குடிமக்களுக்கான மருத்துவச் செலவுகளின் பெரும்பகுதியை அரசு வழங்குகிறது. ஓய்வூதியம், வேலையற்றவர்களுக்கு நிதிஉதவி, ஊனமுற்றோருக்கு பண உதவி...அனைத்தையும் அரசு கவனித்துகொள்வதால், வலுவான சமூகப் பாதுகாப்பு குடிமக்களுக்கு கிடைக்கிறது. பள்ளிப் படிப்பு முற்றிலும் இலவசம். உயர்கல்விக்கு மானியம் கிடைக்கும்.

இதர ஐரோப்பிய நாடுகளைவிட லக்ஸம்பர்க் நாட்டில் வசிப்போர் அதிகளவில் கார்களை கொண்டிருக்கிறார்கள். காலை வேளைகளில் அனைத்து கார்களும் சாலையில் இறங்கும்போது, கடுமையான போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதால், ஒரே இடத்தில் நிற்கும் பல ஆயிரம் கார்கள் புகையை வெறுமனே வெளியேற்றுகிறது. அதனால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடைகிறது.

சொந்த கார்களின் பயன்பாட்டை எப்படி குறைப்பது என்று சிந்தித்த அரசு, பொது போக்குவரத்தைப் பிரபலப்படுத்த இலவச போக்குவரத்தை அறிமுகம் செய்தது. போக்குவரத்துச் செலவு செய்யும் பணம் மிச்சமாவதால், பொது வாகனங்களில் பயணிக்க ஆரம்பிக்க, இலவசப் பயணம் பெரிதும் வெற்றிபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.