/

சிங்கப் பெண்கள்..!

கத்தார் நாட்டில் பணிநிமித்தமாக வசிப்போரின் மனைவிகள், குடும்பப் பெண்கள் என 1,750 பேர் ஒன்றிணைந்து நடத்திவரும் 'கத்தார் சிங்கப் பெண்கள்' என்ற வாட்ஸ் ஆஃப் குழு வாயிலாக, அவர்கள் பல்வேறு சமூகச் சேவைகளையும் புரிந்து, நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர்.

News image
Updated On :25 ஜனவரி 2025, 6:30 pm

பாரத்.தி.நந்தகுமார்

கத்தார் நாட்டில் பணிநிமித்தமாக வசிப்போரின் மனைவிகள், குடும்பப் பெண்கள் என 1,750 பேர் ஒன்றிணைந்து நடத்திவரும் 'கத்தார் சிங்கப் பெண்கள்' என்ற வாட்ஸ் ஆஃப் குழு வாயிலாக, அவர்கள் பல்வேறு சமூகச் சேவைகளையும் புரிந்து, நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். இதுதவிர, கல்வி, விளையாட்டு, தொழில், மருத்துவம்.. என பல்வேறு விஷயங்களில் ஒருவருக்கொருவர் வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் கூறிக் கொண்டு அந்தத் தமிழ்ப் பெண்கள் நிஜத்தில் சிங்கப் பெண்கள்தான் என நீருபித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவி சுகன்யா கார்த்திக்கிடம் பேசியபோது:

'2021ஆம் ஆண்டு மே மாதத்தில், சில பெண்களோடு 'கத்தார் சிங்கப் பெண்கள்' என்ற 'வாட்ஸ் ஆஃப் குழுவை தொடங்கினேன். அப்போது கரோனா காலம். இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் மருத்துவக் குறிப்புகள், தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம்.

நாளடைவில் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 1,750 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அத்தனைப் பேர் என்பதைவிட, அத்தனைக் குடும்பங்கள் என்றே கூற வேண்டும்.

வாட்ஸ் ஆஃப் குழுவில் உரையாடும் போதுதான், எங்களில் பல பெண்கள் கல்வி, விளையாட்டுத் துறைகளில் பதக்கங்களையும், சாதனைகளையும் புரிந்தவர்கள் என்று அறிந்தோம். இதை வீணாக வீட்டிலேயே இருந்து கழிக்கவிட வேண்டுமா? என்று பலரும் வினவினர். ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து வழிகாட்டி, திறமைகளை வெளிக்கொணர முடிவு செய்தோம்.

குழுவில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதைப் பதிவிடுவர். இதையறிந்து பல பெண்களும் விளக்கம் அளிப்பர். தொடர்ந்து, கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, மருத்துவ உதவிகள், பாஸ்போர்ட் விசா வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புகள், கத்தார் குறித்த தகவல்கள், பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.. என்று பொதுத் தகவல்களாக ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, உரையாடுவோம்.

நாளடைவில் சுதந்திரத் தினம், குடியரசுத் தினம், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை பெண்களும், குடும்பத்தினரோடும் ஒன்றிணைந்து கொண்டாடத் தொடங்கினோம். இதையொட்டி, கல்வி, விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி, அவர்களின் திறமைகளை வெளிகொணர்ந்தோம்.

பல்வேறு பெண்கள் தங்களது வீடுகளில் தயாரிக்கும் சமையல் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், சேலைகள் விற்பனை குறித்தும் பதிவிடுவர். அவற்றை குழுவில் உள்ள பெண்களே வாங்குவதும், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும் உண்டு.

இன்று எண்ணர்ற பெண்களின் திறமையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அமைப்பாக , கத்தாரில் உள்ள தமிழ்ப் பெண்களாலே நடத்தப்படும் 'கத்தார் சிங்கப் பெண்கள்' குழு இருந்துவருகிறது.

கத்தார் புனே பல்கலைக்கழக அரங்கில் பாரம்பரிய பொங்கல் விழாவை பிரமாண்டமாக அண்மையில் நடத்தினோம். பொங்கல் பண்டிகை குறித்த சிறப்புகள், நாடகங்கள், தம்பதியினர் நடனம், குழந்தைகளின் நடனங்கள், 'ரீல்ஸ்' குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

டாக்டர் கிம்ஸ் ஹெல்த் தலைமை மருத்துவ அலுவலர் நெளஃபல் ரிஸ்வான், , தில்லி பப்ளிக் பள்ளியின் இயக்குநர் கோபி வரதன், ஆசிரியை வாசுகி ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

Story image

இன்று பல தமிழ் பெண்கள் இந்த அமைப்பின் மூலம் விளையாட்டு, கலைத் துறை ஆகியவற்றில் தடம் பதித்துள்ளனர். எதிர்காலத்தில் அனைத்து தமிழ்ப் பெண்களையும் தொழில், அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த உள்ளோம். தற்போது கபாடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளில் அணிகளையும் உருவாக்கியுள்ளோம்.

கத்தார் மட்டுமின்றி, துபை, மஸ்கட், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பெண்களையும் ஒருங்கிணைப்போம். அனைத்துப் பெண்களையும் இணைத்து மிக பெரிய இணைப்பை உருவாக்கி, 'பெண்கள் மாபெரும் சக்தி' என்று உலகுக்கு உணர்த்துவோம்.

இந்தக் குழுவை வழிநடத்துவதற்காக, எனக்கு பத்மபிரியா கார்த்திக், கார்குழலி செழியன், செல்வி செல்வகுமார், கோகிலா சரவணன், சாய் ரக்ஷா உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்.

சாதிக்க வயது தடையில்லை என்பதையும் ஒருவரையொருவர் ஊக்குவித்து முன்னேற வேண்டும். பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரின் திறமைகளையும் மேடை யேற்ற இந்த அமைப்பானது பாடுபடும். உலகில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை நம்மில் ஒருவர் பெறுவதற்கு நாம் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது'' என்கிறார் சுகன்யா கார்த்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.