'தாயை நேசிப்பதுபோல் தாய்மொழியையும் நேசித்தால் உயரலாம். தமிழ் உறவுகளை ஒரு நாடோடியாகச் சென்று தமிழ் அடையாளத்தைப் பெருமையுடன் பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி வருகிறேன்' என்கிறார் பி.ஹெச். அப்துல் ஹமீது.
வானொலி - தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளராக வைர விழாவைக் காணும் அவர் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தவர். அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணனையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர், நடிகர், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழின் அவசியத்தைப் பேசிவருபவர்... என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். இவர் உருவாக்கிய நிகழ்ச்சி வடிவங்களே, பின்னாளில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உந்துசக்தியாக அமைந்தன.
அவருடன் பேசியபோது:
'இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் மின்வசதியில்லாத தோட்டப் பகுதியில் பிறந்தேன். இளம் வயதிலேயே தந்தையை இழந்தேன். அடுத்த வேளை உணவுக்கு வழி என்ன? என்று போராடிய தாய். வருமானத்தை ஈட்ட, கல்வியைத் தியாகம் செய்து உழைக்கச் சென்ற மூன்று அண்ணன்கள். கடைக்குட்டியான எனக்கு மட்டும் கல்வியைத் தொடரும் பாக்கியம் கிடைத்தது.
1961-இல் நான் எனது 11-ஆம் வயதில் 'சிறுவர் மலர்' நிகழ்ச்சி மூலம் வானொலிக்கு அறிமுகமானேன். 1967- இல் 18-ஆம் வயதில், இலங்கை வானொலி அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கினேன். அப்போதுதான் வறுமைச் சூழலில் இருந்து விடுதலையும் கிடைத்தது.
திறமையை அறிந்து ஊக்குவித்த மூத்தோரின் வழிகாட்டலும், புதிதாகப் படைக்க வேண்டும் எனும் உந்துதலும் என் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள். தாயை நேசித்தது போல், தாய் மொழியையும் நேசிப்பதால்தான் நான் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறேன். தமிழை உண்மையாக நேசித்து உச்சரித்தால் அனைவரின் குரலும் இனிமையாக இருக்கும்.
இறைவன்தான் எனக்கு குரு. ஊடகத்துறைப் பயணத்தில், இந்த வழிப் போக்கனுக்கு வழிகாட்டியோரும் உண்டு. எந்த முயற்சியும், நிச்சயம் வெற்றியைத் தரும்.
'கோமாளிகள் கும்மாளம்' எனும் வானொலித் தொடருக்கு நேயர்கள் நல்ல அங்கீகாரத்தை அளித்திருந்தனர். பிற்காலத்தில் இது 'கோமாளிகள்' என்ற திரைப்படமாகி நான் நடித்தபோது, மாபெரும் வெற்றியைப் பெற்றது.
'சிங்களத் திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் வெங்கட் காரோடு எரியூட்டப்பட்டு கொலையுண்டார்' என்ற உண்மைச் செய்தியானது எப்படியோ திரிபடைந்து நான் கொலையுண்டதாக - வதந்தியாக மாறியது. இனக்கலவரத்தின்போது சில நாள்கள் எனது குரல் வானொலியில் ஒலிக்கவில்லை.
அன்றைய பிரதமர் பிரேமதாசா, கொழும்பு மாகாண அபிவிருத்திச் சபைத் தலைவர் அல்மன் பீரிஸ் உள்ளிட்டோர் உண்மையை அறிந்தவுடன் என்னை வரவழைத்து, விசேஷ செய்தி அறிக்கை ஒன்றை வாசிக்க வைத்தனர். இதன்பின்னர், பல நேயர்கள் பாசம்பொங்க எழுதிய கடிதங்களை, பொக்கிஷம் போல இன்றும் வைத்துள்ளேன்.
32 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றும் சூழல் மாசு அடைந்திருந்தமையால், அந்தச் சூழலில் இருந்து விலகினேன்.
எனது முன்னோடி, எஸ்.பி.மயில்வாகனனின் ராஜபாட்டையில், தமிழ்நாட்டிலும் என்னாலும் இலகுவாகப் பயணிக்க முடிந்தது.
என்னுள் கலையுணர்வு அதிகரிக்க முக்கிய காரணமானவர் நடிகர் சிவாஜி கணேசன். முதன்முதலாக அவரை நேரில் சந்தித்தபோது, எனது குரலைக் கேட்டு எனது ரசிகரானதாக அவரே குறிப்பிட்டது, எனது வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய அதிசயம். அது இறைவன் நிகழ்த்திய அற்புதம்.
யாழ் மொழி வழக்கில் பேசி நடிக்க ஆசைப்பட்டு என்னைத் தொடர்பு கொண்டார் நடிகர் கமல்ஹாசன். நான் தயாரித்த நாடகங்களின் ஒலியிழைப் பேழைகளையும் கையோடு எடுத்துகொண்டு, தமிழகம் வந்து அவரிடம் கொடுத்தேன்.
ஏற்கெனவே கிரேஸி மோகன் எழுதியிருந்த வசனங்களை தமிழகத் தமிழர்களுக்கும் புரியும் வகையில் யாழ் மொழி வழக்கின் சாயலில் எழுதி, அம்மொழி வழக்கில் 'தெனாலி' படத்தில் அவர் பேச, உதவியும் செய்தேன். திரைப்படத்திலும் அப்துல் ஹமீதாகவே தோன்றி நடித்தேன்.
அதுமட்டுமன்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலில் கமல்ஹாசன் யாழ் மொழிவழக்கில் பாடுவதாக அமைந்த வரிகளையும் இயற்றினேன். அந்த ஒரு மாதம் அவரோடு நெருங்கிப் பழகியபோது, அவருக்குள் இருந்த, பன்மொழிப் புலமையையும், அறிவின் விசாலத்தையும் கண்டு வியந்தேன்.
'அபிராமி அந்தாதி'யில் எந்தச் சொல்லில் முடியுமோ அந்தச் சொல்லில் அடுத்த பாடல் ஆரம்பமாவதுபோல், திரைப் பாடல்களில் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் போட்டியாக, விநோத நிகழ்ச்சியை அமைத்தேன்.
அந்த நாளில் வெளிவந்த 'படகோட்டி' படப் பாடலின் பல்லவி நிகழ்ச்சியின் தலைப்புக்கு அடியெடுத்துகொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் நடத்திக் கொண்டிருந்தபோது, என்னுடன் பணியாற்றிய ஹிந்தி மொழி அறிவிப்பாளர் ஒருவர் விவரம் கேட்டறிந்தார். அவர், ஒப்பந்தக் காலம் முடிந்து மும்பை திரும்பிய பின்னர், இதே நிகழ்ச்சியை 'அந்தாக்ஷரி' என்ற பெயரில் விவித்பாரதியில் அறிமுகப்படுத்தினார்.
நான் வாழ்ந்த பகுதியிலே அமைந்திருந்த 'தேவபால' பாடசாலையில், கே.எஸ். ராஜா விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் எனது நண்பர். நான் அறிவிப்பாளராவதற்கு ஓராண்டுக்கு முன்பே பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவாகி குறுகிய காலம் பணியாற்றி, ஒரு சிக்கல் காரணமாக இடை நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பகுதிநேர அறிவிப்பாளராக என்னோடு இணைந்தவர்.
அறிவிப்புப் பாணியில் புதுமையைப் புகுத்திய அவர், குறுகிய காலத்திலேயே நேயர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றவர். அவர் இருக்குமிடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. அவரது இழப்பு துரதிருஷ்டமானது.
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளனர். அவர்களுக்கு எனது யோசனைகளைச் சொல்ல வேண்டும். சுமார் 7.5 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 'தமிங்லிஷை 'வளர்த்து வருவதைக் காணும்போது அச்சமாக இருக்கிறது.
ஒரு தலைமுறை சாதித்ததை விட, அடுத்தடுத்த தலைமுறை இன்னும் அதிகமாக சாதிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். இது காலத்தின் நியதி. இளையத் தலைமுறையினரே! பயனற்ற, உங்கள் மூளையை மழுங்கடிக்கும் கவர்ச்சிகளில் உங்கள் இளமையை வீணடித்து விடாமல், உங்களது ஆற்றல்களைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே ...' என 12-ஆம் நூற்றாண்டிலேயே பவனந்தி அடிகள் எழுதிவைத்துள்ளார். காலமாற்றங்களைப் புரிந்து கொண்டு, இனிவரும் தலைமுறையினர் தாய்மொழி அடையாளத்தை இழந்து விடாது, இருக்கின்ற தமிழையாவது காத்திட, அறிவுபூர்வமாகவும் செயல்முறைச் சாத்தியமாகவும் சிந்தியுங்கள்.
சிறிய நாடுகள் கூட உயர்கல்வித் துறையில் தமது மொழிகளை வளர்த்து வந்துள்ளன.
'அமெரிக்க மிஷனரி மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பவர் இலங்கைக்கு வந்து, தமிழைக் கற்றார். மருத்துவத் துறையின் அடிப்படை நூல்களை தமிழில் மொழிபெயர்த்ததோடு, யாழ்ப்பாணத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை தமிழில் பயிற்றுவித்து சாதனை படைத்துள்ளார்' என, வரலாறு கூறுகிறது.
வட்டெழுத்திலிருந்து மாறியது போல், உயர்கல்வித்துறைக்கு ஏற்புடையதாக, தமிழும் விஞ்ஞானத் தேர் ஏற வேண்டும். உலக அங்கீகாரம் பெற வேண்டும். இதற்காக, தமிழறிஞர்கள், ஒன்றுகூடித் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
1970- களின் பிற்பகுதியில் காயல்பட்டிணத்தில், ஒரு திருமணத்தில் பங்கேற்றேன். மதுரையை நெருங்கியபோது, தாகத்துக்காக மோர் விற்கும் கடையருகில் ஒதுங்கியபோது, பக்கத்து உணவக வாசலில், ஒலிபெருக்கியில், இலங்கை வானொலியில் ஏற்கெனவே நான் ஒலிப்பதிவு செய்துவிட்டு வந்திருந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. கடை வாசலில் பலர் ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தனர்.
அவர்களை அணுகி, 'என்ன கேட்கிறீர்கள்? இது யாருடைய குரல்?' என்று கேட்டபோது, 'என்ன சார்! சிலோன் ரேடியோ அப்துல் ஹமீத் குரலைத் தெரியாதா?' என்று கூறி, என்னை அடையாளம் கண்டு கொள்ளாமலேயே, என்னைப் பற்றி புகழ்ந்தனர்.
இதுவரை பல நூறு விருதுகள் பெற்றிருந்தாலும், இந்த நிகழ்வையே உயர்ந்த விருதாக மதிக்கிறேன். அச்சு வாகனம் ஏறிய படைப்புகளோ காலம் கடந்தும் நிலைத்திருக்கும். ஆனால் வானலைகளில் நாம் படைத்த அற்புதமான படைப்புகள், காற்றலைகளில் கலந்து மறைந்து, மறந்தும் போயின.
எனக்கு மனைவியும், மகனும் உண்டு. இல்லற வாழ்வுக்கு இது, பொன்விழா ஆண்டு' என்கிறார் ஹெச். அப்துல் ஹமீது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பண்டரிபாய் - நான் சந்தித்த பிரபலங்கள் - 46

கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: அா்ஜுன்சம்பத்
நாவல்கள் பிறந்த விதம்...

ரேகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 44
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

