அருள்செல்வன்
'திரையுலகில் பல நட்சத்திரங்களுடன் நட்பு உண்டு. பிலிம் சேம்பர் திரைப்படக் கல்லூரியில் படித்த போதே ரஜினிகாந்த் எனக்கு அறிமுகம்.
1970-இல் 'உணர்ச்சிகள்' படத்தில் கமல்ஹாசன் நடித்தபோதிலிருந்தே, அவருடன் நான் பயணம் செய்கிறேன். பத்திரிகையாளராக, பத்திரிகைத் தொடர்பாளராக, உதவி இயக்குநராக, இயக்குநராக, தயாரிப்பாளராகத் தொடர்ந்த பயணம் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் நான் திரைத்துறையில் இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை' என்கிறார் சித்ரா லட்சுமணன்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணியைச் சேர்ந்தவர் சித்ரா லட்சுமணன். இவர் தனது 'டூரிங் டாக்கீஸ் யூடியூப்' சேனல் மூலம் வெற்றிகரமான யூடியூபராகி இருக்கிறார். இவருடைய நேர்காணல்கள் ஆவணத் தகுதி கொண்டவையாக உள்ளன. அவருடன் ஒரு சந்திப்பு:
பத்திரிகைத் துறைக்கு எப்படி அறிமுகமானீர்கள்?
வேலூரில் பள்ளிப்படிப்பை முடித்தேன். எங்கள் ஊரைச் சேர்ந்த தெள்ளூர் தர்மராஜன் நடத்திய பம்பு செட் கடையில் நான் வேலை பார்த்தேன். தர்மராஜன் பாடலாசிரியரும் ஆவார். ஆனந்தன் கதாநாயகனாக நடித்த 'கல்யாண மண்டபம்' படத்தில் பாடல் எழுதியிருக்கும் அவர் சினிமா பாடல்களை அதிகம் எழுத விரும்பி , சென்னை வந்தார். அப்போது அவர் என்னையும் அழைத்து வந்தார். அவர் 'விடிவெள்ளி' என்ற வார இதழை 1967-இல் ஆரம்பித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் தொடர்பும் கிடைத்தது.
அந்தப் பத்திரிகையில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது, திரை விமர்சனங்களை எழுதினேன். நான் விமர்சனம் எழுதிய முதல் படம் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், முத்துராமனும், ராஜஸ்ரீயும் ஜோடியாக நடித்த 'அனுபவம் புதுமை'. இன்று என்னால் எழுதமுடிகிறது என்றால் 'விடிவெள்ளி'யில் பெற்ற பயிற்சிதான் காரணம்.
'விடிவெள்ளி'க்குப் பிறகு 'இந்தியன் மூவி ஸ்டார்', 'மின்னல் கொடி', 'தாயின் மணிக்கொடி' போன்ற இதழ்களில் பணியாற்றினேன். 1970- இல் நானே 'திரைக்கதிர்' என்ற இதழைத் தொடங்கி, 15 ஆண்டுகள் நடத்தினேன். அதில் 32 பக்கங்கள் நாவலும், 32 பக்கங்கள் திரைச் செய்திகளும் இருக்கும். சுஜாதா, லக்ஷ்மி, வாஸந்தி, மகரிஷி, அசோகமித்திரன், மகேந்திரன் உள்ளிட்ட பிரபல நாவல் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
திரைத்துறை அனுபவம்..?
'சினேகிதி' படத்தில் பத்திரிகைத் தொடர்பாளரானேன். கே.ஆர்.ஜி. நிறுவனப் படத்தில் பணியாற்றியபோது, பாரதிராஜா உதவி இயக்குநராக அறிமுகமானார். அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டது.
மக்கள் தொடர்பாளராக 300 திரைப்படங்களில் பணியாற்றினேன். 'அலைகள் ஓய்வதில்லை' படப்பிடிப்பின் போது, இயக்குநர் பாரதிராஜா அழைப்பின்பேரில் அவருடன் உதவி இயக்குநராக இணைந்தேன். அப்போது ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்த நான், பாரதிராஜாவிடம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குச் சேர்ந்தேன். நான் அன்று எடுத்த முடிவுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
பாரதிராஜாவிடம் பலவற்றையும் கற்றேன். அவர் எப்போதும் தன்னுடன் இருப்பவர்களைத் தனது படங்களில் நடிக்க வைப்பார். அப்படியே நடிகனானேன். இதுவரை சுமார் 100 படங்களில் நடித்திருக்கிறேன். அவர்தான் 'மண் வாசனை' படத்தில் என்னைத் தயாரிப்பாளர் ஆக்கினார்.
பின்னர், 'வாழ்க்கை', 'அம்பிகை நேரில் வந்தாள்', 'புதிய தீர்ப்பு', 'ஜல்லிக்கட்டு', 'சின்னப்பதாஸ்' போன்ற படங்களைத் தயாரித்தேன். 'சூரசம்ஹாரம்', 'பெரிய தம்பி', 'சின்ன ராஜா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கினேன்.
திரையுலகில் பெற்ற அனுபவங்கள்...
சிவாஜி கணேசனின் பரம ரசிகன் நான். கதைகளைச் சொல்லாமலேயே சிவாஜியிடம் சம்மதம் பெற்று இரண்டு படங்களைத் தயாரித்தேன். 'வாழ்க்கை' ராஜேஷ் கண்ணா ஹிந்தியில் நடித்த அவதாரின் ரீமேக். இதை அவர் பார்த்திருந்ததால், கதை சொல்லவில்லை. 'ஜல்லிக்கட்டு' படக் கதையை சிவாஜியிடம் வியத்நாம் வீடு சுந்தரம் முன்பே கூறியிருந்தார்.
'ஜல்லிக்கட்டு' படத்தின் நூறாவது நாள் விழாவில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பங்கேற்றார். சிவாஜி நடித்த இத்தனை பட விழாக்களில், எம்ஜிஆர் பங்கேற்றது இது மட்டும்தான்.
நான் தயாரித்த படங்களில் வெற்றியும், தோல்வியும் உண்டு. ஆனால், படுதோல்வி எதுவுமில்லை. ரஜினியைத் தவிர, சிவாஜி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களையும் வைத்து என் சகோதரர் ராமு உதவியுடன் தயாரித்துவிட்டேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தேன். இத்தனை நட்சத்திரங்களுடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் படத்தயாரிப்பு செய்தது மறக்க முடியாத அனுபவங்களை அளித்தது. பல நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன். இதுவே எனக்கு மன நிறைவு தரும் ஒன்று. வாழ்க்கையில் கசப்புகள் வரத்தான் செய்யும். அதைக் கடந்து செல்லவேண்டும்.
'யூடியூப்' ஆரம்பித்த பின்னணி?
திரைத்துறையைப் போல யூடியூபுக்கு வந்ததும் தற்செயலாக அமைந்தது. ராஜ் டி.வி. திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டபோது, என்னை துணைத் தலைவராக்கினர். அப்போது நிறைய கதைகளைக் கேட்டேன். எனக்குப் பிடித்த கதைகள் பின்னர் ' வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஈட்டி' என்று படங்களாக வந்தன.
ஒரு கட்டத்தில் படங்களைத் தயாரிக்கும் முடிவைக் கைவிட்டனர். ஆனாலும், சானலில் பணியாற்ற வைத்தனர். தினசரி மாலை 6 மணிக்கு திரைத்துறை செய்திகளை அமைப்பேன். கே. பி. சுந்தராம்பாள், கண்ணதாசன், சந்திரபாபு உள்ளிட்ட பழைய திரை நட்சத்திரங்களைப் பற்றி 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒவ்வொருவரைப் பற்றியும் நான்கைந்து நாள்கள் நிகழ்ச்சிகளை நடத்தினேன். மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால், மூன்றாண்டுகள் தொடர்ந்தது. அங்கே விதையாக மனதில் தோன்றியதை விரிவாக்கி, நானே சானல் தொடங்கினேன்.
பரபரப்பு சாராமல் முழு நீள நேர்காணல் என்று எப்படி முடிவெடுத்தீர்கள்?
யூடியூபர்கள் பலரும் திரைத்துறைக்கு வெளியில் இருந்தவாறு விமர்சிப்பவர்கள். அதனால் எல்லை தாண்டிச் செல்கின்றனர். நான் திரைத்துறையில் இருந்தவாறு பேசுகிறேன். நாகரிகமாக விமர்சிக்கவும் செய்கிறேன். எனக்கு அனைவரும் நண்பர்கள். எனக்கு கண்ணியமும் பொறுப்புணர்ச்சியும் இருக்கிறது. எனது சானலை அன்றாடப் பரபரப்பு, அவதூறு செய்திகள் என்றில்லாமல் நிரந்தர ஆவணமாக இருக்கும்படி நினைத்தே எனது 'டூரிங் டாக்கீஸ்' தொடங்கினேன். பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
'சாய் வித் சித்ரா' நிகழ்ச்சியில் முதலில் ஏவி.எம்.சரவணனை நேர்காணல் செய்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. முதலில் சனி, ஞாயிறு மட்டும்தான் போடுவோம். பின்னர், தினமும் காலை 8 மணிக்கு 'சாய் வித் சித்ரா' நிகழ்ச்சியைப் பதிவிட்டேன்.
இப்போது ரீல்ஸ் காலம். 20 நிமிடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் இருக்காது. அதை நான் உடைத்து, யூடியூபில் 4 மணி நேரம் தாண்டியும் நிகழ்ச்சியைப் பார்க்க வைக்க முடியும் என்பதை நிருபித்தோம். பத்து நாள்கள் தொடர்ந்தும்கூட ஒரு நேர்காணலைப் போட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். எனது சானலின் வெற்றியைப் பார்த்துவிட்டு, பலரும் பல பாகங்கள் என்று நேர்காணல் செய்கிறார்கள். இப்படியாக அச்சு ஊடகத்திலிருந்து மெல்ல மின்னணு ஊடகத்துக்கு வந்து என்னை அதற்குத் தயார் செய்துகொண்டேன்.
மனநிறைவு அளிக்கும் அனுபவங்கள் உண்டா?
இயல்பாகவே பேசித் தொடரும்போது பேச்சில் சுவாரசியம் வளரும். அதற்கான திசையை அதுவே தீர்மானித்துக் கொண்டு செல்லும். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மனம் திறந்து பேசவேண்டும் என்பதால், அதன் போகிற போக்கில் விட்டு இப்படி ஒரு நேர்காணலாகச் செய்வேன். எல்லாமே சிறப்பாக வந்துள்ளன.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரை நான் நேர்காணல் செய்தபோது, காலையிலிருந்து இரவு வரை பேசிக் கொண்டே இருந்தோம். அது நாலு பாகங்களைக் கொண்டது. அதை 28 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். வெளிநாட்டிலும் அதைக் கேட்டுக் கொண்டு, நீண்ட நேரம் பயணம் செல்வதாகக் கூறுகின்றனர்.
உங்கள் திரையுலக அனுபவங்கள் எந்த அளவுக்கு உதவுகிறது?
நான் நேர்காணல் செய்யும்போது, விருந்தினர்களின் மனதைப் புண்படுத்தும்படியாகவோ, அவதூறுகளாகவோ, சர்ச்சைக்குரியதாகவோ வேண்டும் என்று நான் கேள்விகள் கேட்பதில்லை. சர்ச்சைக்குரியதாக மாற்றித் தலைப்பிட்டு நான் விளம்பரப்படுத்துவதோ, பரபரப்பைத் தேடுவதோ இல்லை. எனக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நானும் அவர்களைப் புரிந்து வைத்திருக்கிறேன். அவர்களுக்கும் என் மேல் நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் என்னிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். இந்த வகையில் எனது அனுபவங்கள் உதவியாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51

பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

