/

திருப்புமுனை!

மறைந்த ரத்தன் டாடா அமெரிக்காவில் 1960களில் வசித்தபோது, அவருக்கு முதல் காதலின் மொட்டு விரிந்தது.

News image
- Picasa
Updated On :9 நவம்பர் 2024, 6:30 pm

பிஸ்மி பரிணாமன்

மறைந்த ரத்தன் டாடா அமெரிக்காவில் 1960களில் வசித்தபோது, அவருக்கு முதல் காதலின் மொட்டு விரிந்தது. தொடக்கத்தில் அது பரஸ்பர காதலாக இருக்கவில்லை. அவரை கரோலின் எம்மன்ஸ் முதன் முதலாகச் சந்தித்தபோது, முதல் பார்வையிலேயே ரத்தனை காதலிக்கத் தொடங்கினார். ரத்தனின் அழகும், கம்பீரமும் கரோலினை திகைக்க வைத்துவிட்டது.

ரத்தன் டாடா 1962இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலைப் பாடத்தில் உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அவர் தனது விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஜோன்ஸ் என்பவரை நேரில் கண்டு நன்றி சொல்ல, தனது ஆய்வறிக்கையுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அந்தச் சந்திப்பு, ரத்தன் டாடா இந்தியாவுக்குத் திரும்பும் திட்டத்தை கைவிடச் செய்தது. இது முதல் திருப்புமுனை.

ஜோன்ஸின் கட்டடக் கலை நிறுவனத்தில் பங்குதாரரான கரோலினின் தந்தை எம்மன்ஸ், ரத்தனுக்கு பொருத்தமான பணியைக் கொடுத்தார். ஒரு சந்தர்ப்பத்தில் மகள் கரோலினை ரத்தனிடம் அறிமுகப்படுத்தினார். அது இரண்டாவது திருப்புமுனை.

கரோலினை ரத்தனிடம் அறிமுகப்படுத்தியபோது, பத்தொன்பது வயது அழகான கரோலின் இருபத்து ஆறு வயதான ரத்தனைப் பார்த்த அடுத்த நொடியில் காதலில் விழுந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உறைந்து நின்றார். ரத்தனைச் சந்தித்த சந்தோஷ மகரந்தங்களிலிருந்து மீள கரோலினுக்குப் பல நாள்கள் பிடித்தன. கரோலினின் பெற்றோர் காதலைப் புரிந்து கொண்டு பச்சைக் கொடி காட்டினர். ரத்தனை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது.

தன்னை வளர்த்த பாட்டியின் உடல்நிலை மோசமாக ரத்தன் டாடா 1962இல் இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று. சில வாரங்களில் கரோலினும் இந்தியா வர தீர்மானித்திருந்தார். அதற்குள் இந்தியசீன போர் வெடித்ததால், கரோலினை இந்தியாவுக்கு அனுப்ப அவர் பெற்றோர் தயங்கவே கரோலின் இந்தியா வரவில்லை.

ரத்தன் கரோலின் காதலில் ஒரு இடைவெளி ஏற்பட்ட நேரத்தில், கரோலின் ஜோன்ஸ் என்ற இளைஞரை சந்தித்தார். ஜோன்ஸ் ரத்தனைப் போலவே தோற்றத்திலும் படிப்பிலும் பண்பிலும் ஒற்றுமை இருப்பதை உணர்ந்த கரோலினோ ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா அமெரிக்காவுக்குச் சென்றபோது, கரோலின் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கரோலின் ஜோன்ஸ் தம்பதியை இரவு விருந்துக்கு டாடா அழைத்துச் சென்றார்.

அப்போது அவர் கரோலினிடம், 'நீ சந்தோஷமாக இருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. இனி உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். உன்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவே மாட்டேன்' என்று சொல்லி விடை பெற்றார். ஆனால் அந்தக் காதல் கருகவில்லை என்பதுதான் உண்மை.

ரத்தனும் அவர் கரோலினிடம் சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார். பல ஆண்டுகள் கழிந்து கரோலினின் கணவர் ஜோன்ஸ் 2006இல் காலமானபோது , கரோலினுக்கு அறுபத்து இரண்டு வயது. அதற்கடுத்த ஆண்டில் கரோலின் தனது தோழிகளுடன் 'தி டார்ஜிலிங் லிமிடெட்' என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்க நேரிட்டது. மூன்று சகோதரர்கள் இந்தியாவுக்கு வருவது குறித்த படக்கதை அது. படம் முடிந்ததும் கரோலின் மனதில் ரத்தனைக் குறித்த நினைவுகள் எழுந்தன.

'எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். அவரைப் பற்றி கூகுள் செய்து பார்க்க வேண்டும்' என்று கரோலின் சொன்னவுடன், தோழிகளுடன் ரத்தன் குறித்த செய்திகளை கரோலின் சேகரித்தார். 'டாடா சன்ஸ்', ' டாடா டிரஸ்ட்' நிறுவனங்களின் தலைவராக ரத்தன் இருப்பதை அறிந்த கரோலின் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். 'விரைவில் இந்தியா வருவேன்' என்ற கரோலின், 2008இல் தில்லியில் ரத்தனைச் சந்தித்தார். தொடர்ந்து கரோலின் சில ஆண்டுகள் இடைவெளியில் மும்பை வந்து சென்றார்.

2017 டிசம்பரில் ரத்தனின் எண்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கும் கரோலின் மறக்காமல் வந்திருந்தார். பின்னர், கரோலின் வந்தது 2021ஆம் ஆண்டில்..! கரோலின் மும்பைக்கு வந்த போதெல்லாம், ரத்தனின் வீட்டில் தங்கினார். பல ஆண்டுகள் பிரிந்திருந்தபோதிலும், ரத்தன் மீது கரோலின் வைத்திருந்த அன்பு ஒருபோதும் மறையவில்லை. ஆனால் அக்டோபரில் ரத்தன் காலமானபோது இறுதியாகப் பார்க்க, கரோலின் வரவில்லை. வந்தால், ரத்தனின் இழப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதினால் கரோலின் வராமல் இருந்திருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.