மலர்ச்சி..!
'வாழ்வில் அடுத்த நிலைக்கு உயர வேண்டும்' என்று வேட்கை கொண்டவர்களுக்கு தனது'மலர்ச்சி' வாழ்வியல் பயிற்சி வகுப்புகளின் வாயிலாக வழிகாட்டுகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் பரமன் பச்சைமுத்து.


'வாழ்வில் அடுத்த நிலைக்கு உயர வேண்டும்' என்று வேட்கை கொண்டவர்களுக்கு தனது'மலர்ச்சி' வாழ்வியல் பயிற்சி வகுப்புகளின் வாயிலாக வழிகாட்டுகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் பரமன் பச்சைமுத்து.
குடும்பத் தலைவிகள் தொழில் முனைவோர்களாவது, கல்லூரி மாணவர்கள் ஆளுமைகளாக உருவாகுதல், இளம்தொழில் முனைவோர்கள் மிகச் சிறந்த முறையில் உயர்வடைதல்... எனப் பலருடைய வாழ்க்கையில் மாற்றங்களை செய்திருக்கிறது 'மலர்ச்சி'.
இந்தச் சிறப்புமிக்க தன்னம்பிக்கை பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவிடம் பேசியபோது:
'சிதம்பரம் அருகேயுள்ள கீழமணக்குடி எனது சொந்த ஊர். மயிலாடுதுறையில் உள்ள ஏ.இ.இ. பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியலில் டிப்ளமோவை 1991இல் முடித்தேன். பின்னர், பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தேன். மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். பின்னர், பெங்களூரிலும் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.
ஐ.டி. நிறுவனப் பணி வெறுத்தது. 2005இல் மனித வாழ்வை மேம்படுத்துதல் குறித்து'அல்மாடி' எனும் அமைப்பு நடத்திய தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயிற்சி பெற்றேன். பின்னர், தன்னார்வலராக 'சின்மயா மிஷன்' நடத்தும் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளியில் பயிற்சி அளித்தது எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அன்றோடு வாழ்க்கை வாழ்வதற்கே என்று முடிவு செய்து, சொகுசு வாழ்க்கையை புறக்கணித்தேன். தன்னம்பிக்கை பேச்சாளராக முழுநேரமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.
அன்றுமுதல் 2011ஆம் ஆண்டு வரையில், பல்வேறு தரப்பட்ட மக்களுக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்கத் தொடங்கினேன். நிறைய நூல்களைப் படித்தேன்.
2015ஆம் ஆண்டு ஜனவரியில்'மலர்ச்சி' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். சக மனிதன் வாழ்க்கையில் வளம் பெற வேண்டும், சுய வளர்ச்சி ஆகிய இரண்டும்தான் தாரக மந்திரங்களாகக் கொண்டேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள தனித்திறன்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.
இன்றைய இளையதலைமுறையினர் 40 விநாடிகளுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்தத் துறையில் அவர்கள் அங்கம் வகித்தாலும் அதில் நிபுணத்துவம் பெற்றவராய் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உடல், உள்ளம், கற்றல் ஆகிய மூன்றையும் நாள்தோறும் மேம்படுத்திக் கொள்வது சிறப்பு.
மனிதக் குலத்தில் மாற்றம் வர இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் மலர்ச்சி பெற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேறினால்தான் நாடும் முன்னேறும். இதற்காகவே, உடல், உள்ளம், உணர்ச்சி, அறிவு, உயர்வு என்ற பயிற்சிகளை மலர்ச்சி சார்பில் அளிக்கிறோம்.
தம்பதிகளுக்கு இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணையவைத்தல், குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளைக் களைந்து நல்லதொரு கல்வியை மேம்படுத்துதல், அலுவலகச் சூழ்நிலையை நலமாக உருவாக்குதல், உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இடையே நல்வழிப்படுத்துல், திறன் மேம்பாடு, உறவுகள் மேலாண்மை, ஆரோக்கியமான வாழ்வு .... போன்றவற்றுக்காகத் தன்னம்பிக்கை பயிற்சிகளைஅளிக்கத் தொடங்கினேன்.
6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு'அரும்புகள்' எனும் பயிற்சியில், தன்னம்பிக்கை, உணவு, மன மகிழ்ச்சி, சக மனிதர்களைப் பாராட்டுதல் குறித்தப் பயிற்சிகளும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு'மொட்டுகள்' எனும் பயிற்சியில் நற்பண்புகள், எதிர்பாலின கவர்ச்சி குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதுதவிர,'மலர்ச்சி' என்ற பெயரில் அனைத்துத் தரப்பினருக்கான பொதுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
தம்பதிகள் வாழ்வில் ஒன்று சேர ஒரு வாரம் பயிற்சி, ஆளுமைத் திறன் வளர்ப்புக்காக ஒரு நாள் பயிற்சி, பிள்ளைகள் வளர்ப்புக்கு இரு நாள் பயிற்சி, தொழில் மேம்பாட்டுக்காக ஒரு நாள் பயிற்சி என்று பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் இருக்கின்றன.
தன்னம்பிக்கை பயிற்சிகள் மட்டுமல்ல; மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, உடலும் உள்ளமும் உறுதி பெற பயிற்சி என வாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சிகள் அடங்கியுள்ளன.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பொள்ளாச்சி, கோவை என ஐந்து இடங்களில் பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. மாதம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என எட்டு நாள்கள் வகுப்புகள். இதுவரையில் 75க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்தி, ஐந்து லட்சம் பேருக்கு தன்னம்பிக்கை பயிற்சிகளை அளித்துள்ளேன். சிஷெசல்ஸ் தீவு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயிற்சிகள் நடத்தியுள்ளேன்.
ஒற்றை பெற்றோராக வந்த பலர் ஆறு மாதங்களில் தொழில் முனைவோராக மாறி, தம்பதி சமேதராய் என்னிடம் வந்து வாழ்த்து பெறுவதைப் பார்க்கும்போது எனது மகிழ்ச்சிதான்.
மனநல ஆலோசகர்கள் சிலரே தங்களிடம் வரும் சில நோயளிகளை மலர்ச்சி வகுப்புகளுக்கு பரிந்துரைப்பது அண்மைக்காலமாக நிகழ்ந்துவருகிறது. மன அழுத்தம் கொண்ட 150க்கும் மேற்பட்டோர் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, மாத்திரைகள் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டிருப்பதும் பயிற்சி வகுப்புகளுக்கு கிடைத்த வரவேற்புதான்.
மலர்ச்சியில் வாழ்வியல் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானவர்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள்; இணைப்பிலேயே இருந்து தொடர்ந்து வளர்கிறார்கள்.
எனது நேரடிப் பார்வையில் தொழில் முனைவோர்களானவர்களைப் பாராட்டியும், அவர்களை முன்னேற்றம் அடைய வைத்த குடும்பத் தலைவிகளைப் பாராட்டியும் ஆண்டுதோறும் ஜன. 22இல்'சிறந்த தொழில் முனைவோர் விருது','சிறந்த குடும்பத் தலைவி விருது' ஆகியவற்றை வழங்கி வருகிறேன். பெண்களைப் போற்றினால்தான் நாமும் முன்னேற முடியும்.
'தொடங்கு தொடர் தொடுவாய் உச்சம்','அச்சம் தவிர் ஆளுமை கொள்' ,'வெற்றி வாகை' உள்ளிட்ட 13 தன்னம்பிக்கை நூல்களை எழுதியுள்ளேன். 'வளர்ச்சி' என்ற பெயரில் மாத இதழையும் நடத்திவருகிறேன்'' என்கிறார் பரமன் பச்சைமுத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...