என்பும் உரியர் பிறர்க்கு...


சுந்தரவதனத்தை மாடியிலேதான் தங்க வைத்திருந்தனர். 'எதை நினைத்துகொண்டே சங்கடத்தில் புறப்பட்டு வந்திருந்தாரோ, அது பிரச்னையில்லாமல் நல்லபடியாய் முடிந்தது' என்று நினைத்து திருப்தி அடைந்தார். நேரே மாடி அறைக்குக் கூட்டி வந்து, 'இதுதான் உங்க இடம், இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம்' என்று சம்பந்தி மாசிலாமணி சொன்னபோது, 'நல்லதாப் போச்சு. எனக்குப் பிடிச்ச அமைதி.. தனிமை..' என்றார் இவர்.
ஏற்கெனவே தன் மனதை அறிந்து தீர்மானித்திருக்கவில்லையெனில், 'இந்த இடம்அமைந்திருக்க வாய்ப்பில்லை' என்று தோன்றியது சுந்தரவதனத்துக்கு. ஆளைக் கணக்கிடுவது என்பதற்குத் தனித்திறமையே வேண்டும்தான். அப்படித்தான் தன் பையனையும் அந்தப் பெண் கணக்குப் பண்ணிவிட்டதோ?
ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தன் மனப் போக்கை, தங்கள் மனப் போக்கை எண்ணிப் பார்த்தே ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். 'அதுவே ஒரு பெரிய பண்பாடு' என்று அவர் மனசு சொல்லியது. இணக்கமாக இருப்பதற்கு எத்தனைக்கெத்தனை மரியாதையாக நடக்க வேண்டுமோ, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனைக்கத்தனை கவனமாக இருக்கிறார்கள். மனிதர்களுக்கு மனிதர்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் பண்பாடுதான். ஆனாலும் அதற்கும் ஒரு விரிவான மனசு வேண்டும்தானே! அதிலும் பெண்ணைக் கொடுத்த இடத்தில் அது சந்தோஷமாக, நிம்மதியாக இணக்கமாக வாழ வேண்டாமா? என்கிற எண்ணம் பெற்றவர்களுக்கு இல்லாமலா போகும்? பெண்ணைக் கொடுத்ததா அல்லது அதுவாக வந்ததா? முறைப்படி சந்தித்துப் பேசி முடிவு செய்திருந்தால்தானே கொடுத்ததாக ஆகும்? இங்கு வலது காலெடுத்து வந்ததாக ஆகும்! இனி இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்துப் புண்ணியமில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். அவ்வளவுதான்.
'இந்த முறை நீங்க வாங்க. அடுத்த முறை மாமி வரட்டும்' என்று அவர்கள்தான் சொன்னார்கள். எடுத்த எடுப்பில் மாமி மறுத்துவிடக் கூடும் என்கிற தீர்மானம் இருந்ததோ, என்னவோ? எதிராளியின் மனப் போக்கை துல்லியமாக அறிவது மிகப் பெரிய சாமர்த்தியம். அது பெரிய திறமை என்றே கூடச் சொல்லலாம். சுமுகமாக நகர்வோம் என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். வற்புறுத்தவேயில்லை அவர்கள். 'நீங்க போயிட்டு வாங்கோ?' என்று வைதேகி சொன்னதைக் கேட்டு அமைதியாகிவிட்டார்கள். அதற்கு மேல் ஒரு கேட்புமில்லை. வற்புறுத்தலுமில்லை.
'அப்பாடா.. அவங்க வாயில் இருந்தே வந்திடுத்து. நல்லாதாப் போச்சு' என்று வைதேகி அமைதியாயிருந்து விட்டாள். பல விஷயங்களுக்கு முணுக்முணுக்கென்று பதிலுரைப்பதைவிட, எதிராளியின் மனப் போக்கறிந்து, அமைதி காத்து விடுவது மிகுந்த பலனளிப்பதாக உள்ளது. நாம் பேசுவதைவிட பேசுபவர்களிடமிருந்து கிரகித்து முடிவு செய்வது நிம்மதியாய்ப் போய்விடும். இப்போது அதுதான் நடந்திருந்தது.
கடந்த இரண்டு நாள்களாக ஒரே புலம்பல். மனசு ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அழாத குறை. ஆசை ஆசையாய் வளர்த்த மகன் ராஜேஷ், இப்படிப் பண்ணி விட்டானே என்கிற ஆதங்கம்.
கோயிலில் வைத்தே தாலி கட்டியது. அங்கு பத்துப் பேர். இங்கு பத்துப் பேர். முக்கியப்பட்டவர்கள் மட்டும். அவர்களும் சொந்தங்களை அதிகம் கூப்பிட்ட மாதிரித் தெரியவில்லை. யார் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்களோ, யார் வந்து நின்று வலியக் கலகம் பண்ண விழைய மாட்டார்களோ? அந்த மாதிரி உறவுகளாய்த் தேர்வு செய்வதே பெரும்பாடாய் ஆகிவிட்டது. இணக்கமானவர்கள் என்று யாரைத்தான் நிர்ணயிப்பது? சற்று கஷ்டம்தான். மனிதர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு மாதிரியாய் இருக்கிறார்கள். நெருக்கமானவர்களுக்கே குசும்பு இருக்கிறதே! மடியில் கட்டிக் கொண்ட கதையாய் அவர்கள் பேச ஆரம்பித்தால்? நிறையப் பேருக்குச் சொல்லவேயில்லை. காலப்போக்கில் அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டாயிற்று. லிஸ்ட் போட்டது ஒன்று. அழைத்த எண்ணிக்கை வேறு. சுமுகமாக முடிந்தால் சரி என்பதே நோக்கமாய் இருந்தது.
'வதவதவென்று அழைத்தால் தகவல் டமாரம் ஆகிவிடும். இதுதான் விஷயமா?' என்று கேலி பேசி ஆர்ப்பரித்துப் போவார்கள். போகட்டும். அதற்காக அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்து, ஆளுக்கு ஆள் என்று விளக்கம் சொல்லி, மாய்ஞ்சு மாய்ஞ்சு சமாதானப்படுத்தி, எப்படி வந்து நின்றாலும் திருமணத்தன்று எவனாவது நாவை அடக்க முடியாமல் எதையாவது பேசி, உளறி வைத்தால் பெருத்த ரசாபாசம் ஆகிப் போகுமே என்று பலத்த யோசனைக்குப் பிறகுதான் எண்ணிச் சில பேர் என்று முடிவு செய்தது. எண்ணிச் சுட்டது விண்ணப்பம். நல்லவேளை எல்லாமும் கமுக்கமாய் முடிந்து விட்டதுதான். வாய் பேசாத அப்பாவிகளாய்ச் சேர்ந்தால் அமைதியாய் முடியாமல் என்ன செய்யும்? இயற்கையே கொந்தளித்து என்னமாவது செய்தால்தான் ஆயிற்று. நல்ல காரியத்துக்கு யாரேனும் அப்படி நினைப்பார்களா என்ன? தெய்வாதீனமாய் நடந்தேறிற்று.
கல்யாணச் சாப்பாடு எதிர் ஓட்டலில். கோயிலுக்குப் பக்கத்திலேயே, கோயில் கல்யாணங்களுக்கென்றே நடந்து கொண்டிருந்த ஓட்டலோ என்றுதான் எண்ண வைத்தது.
அவன் போட்டசிறப்புச் சாப்பாடுதான். தின்னதுதான். வந்ததுதான். பாயசம் இலையில் வழிந்தோடிற்று. எல்லாவற்றையும் சரி, சரி என்று பொறுத்துக் கொண்டாயிற்று. மனசு ஆறவேயில்லைதான். ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு. அதுவும் இப்படியா வக்கரிச்சிக்கணும். வைதேகிக்கு மனசு பொறுக்கவேயில்லை.
'ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, ஊஞ்சல், மாங்கல்யதாரணம், பின்னர் மதியத்துக்கு மேல் நலுங்கு, இரவு சாந்தி முகூர்த்தம்.. என்று என்னவெல்லாம் அர்த்தமுள்ள நிறைவான சடங்குகள். ஒன்று கூடக் கைகூடாமல் போயிற்றே? அத்தனையும் கனவு போல் ஆகி விட்டது. எந்த ஜென்மத்துப் பாவம் இது?' என்று சொல்லிச் சொல்லி ஆறவில்லை அவளுக்கு.
'அதெல்லாம் ஒண்ணும் பேசாதே! கம்முன்னு இரு. எல்லாம் காலப் போக்குல சரியாப் போயிடும்' என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தார் சுந்தரவதனம். அவரும் சோகவதனமாகத்தான் திரிந்தார். வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்பில் யதார்த்தமில்லை என்பதை உணர்ந்து அவர் மனது அழுதுகொண்டேயிருந்தது.
எதிர்த்தரப்பில் எதுவும் பேசி சண்டை பிடிக்க முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது. இனி பேசிப் பயனில்லை. சொந்தப் பெண்டாட்டியிடமாவது நாலு வார்த்தை கொட்டி, சற்று வயிற்றெரிச்சலைத் தீர்த்துக் கொள்வோம் என்று முனைந்தார்.
'பையனோட சதா கூடிக் குலாவிக்கிட்டே இருந்தியே? இப்போ எப்படி வந்து நிக்கிறான் பார்த்தியா? இதுதான் நீ அவனை வளர்த்த லட்சணமா? அவன் எப்பயும் என் கன்ட்ரோல்லதான் சொல்வியே? இப்போ எங்கே போச்சு? கட்டறுத்துக்கிட்டு போய் நிற்குது காளை? இல்ல. ஏற்கெனவே இந்த விஷயம் உனக்குத் தெரியுமா? எங்கிட்டச் சொல்றதுன்னு வாயை மூடிக் கிடந்தியா? அல்லது வேணும்னே மறைச்சியா?' என்று ஆரம்பித்தார்.
'ஏன். அவன் உங்க கன்ட்ரோல்லயும்தான் இருந்தான். நீங்க கவனிச்சிருக்க வேண்டிதானே. நான் மட்டுமா பொறுப்பு? ஆம்பளைப் பையன்தானேன்னு அவுத்து விட்டாச்சு. அவன் எதையோ பண்ணின்டு வந்து நிக்கிறான். யாரும் எதையும் வாய் விட்டு, மனசு விட்டுச் சொல்லாமே யாருக்கு என்ன தெரியும். கூடு விட்டுக் கூடு பாய முடியுமா? நல்லாயிருக்கே நீங்க
சொல்றது?'
'நீங்க ரெண்டு பேரும் பேசிண்டிருக்கிறபோது, நா வந்து எதிர்பாராம நின்னா.. நீங்க அமைதியாயிடுவேளே? அதனால கேட்டேன். நல்ல வேளை நமக்கு ஒரு பொண்ணு இல்லை. இருந்திருந்தா அதுக்குக் கல்யாணம் பண்றது திண்டாட்டமாயிடும். பையன் வேத்து ஜாதியில திருமணம் பண்ணியிருக்கான்னு தெரிஞ்சா.. எவன் வருவான் நம்ம பொண்ணைப் பார்க்க? இந்தப் பொண்ணு என்ன லட்சணத்துல இருக்குமோன்னுதானே நினைப்பான்? தப்பிச்சிது. நான் கொஞ்சம் கொஞ்சமா மனசை சரி பண்ணிக்கிடுவேன். ஏன்னா ஏற்கெனவே எங்க குடும்பத்திலே ஒரு முன்னுதாரணம் இருக்கு. அத்தை பையன் வேற்று மதத்துக்குப் பொண்ணைக் கை பிடிச்சது. அது பழைய கதை. அதுபோல இதுவும் நாளாவட்டத்துல சரி ஆயிடும். என்ன ஒண்ணு. உன்பாடுதான் திண்டாட்டம். நீ இதை எப்படி எதிர்நோக்கப் போறியோ அல்லது எண்ணி எண்ணி மனசுக்குள்ளயே மறுகப் போறியோ? யார் கண்டா? எல்லாம் கடவுள் விட்ட வழி! கட்டுப்பாட்டோடதான் வளர்த்தோம் பையனைன்னு வேணும்னா நினைச்சிக்கலாம். ஆனா அவன் வெளில எப்படியிருந்தான்னு யாருக்குத் தெரியும்? பின்னாடியே வா போய் வேவு பார்க்க முடியும்? காலமும், சூழ்நிலையும் எங்க கொண்டுபோய் நிறுத்துது பார்த்தியா? வயசான பெரியவங்களை ஏமாளியா ஆக்கி கை கொட்டிச் சிரிக்குது! அதான் உண்மை! கேட்டா அது என்னோட பூரண சுதந்திரம்னு சட்டம் பேசுவானுக! கட்டினா அந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன். இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்னுல்ல சொல்லிட்டான் உன் பையன்? காவியக் காதலாவுல்ல இருக்கு? கந்தர்வக் காதல்னும் சொல்லலாம். கடைசிக் காலத்துல கொள்ளி வைக்க வந்தாப் போதும்னு பொறுத்துப் போக வச்சுட்டானே பகவான். நம்ம மனசைப் புரிஞ்சிண்டு நமக்குப் பாந்தமா ஆறுதல் சொல்ல ஒரு மனுஷா இருக்காளா பார்த்தியா? எல்லாரும் அப்படித்தான் விலகிப் போயிடுவா? மனுஷனோட அடிப்படை குணமே சுய
நலம்தான். அவுங்கவுங்க காரியம்தான். அதுலதான் கருத்தா இருப்பா? அதுதான் இயற்கை. உனக்கு நானும் எனக்கு நீயும்தான் ஆறுதல் கூறிக்கணும்' என்று கொட்டித் தீர்த்தார் சுந்தரவதனம்.
'எல்லாம் முடிந்து சகஜ நிலை வந்தாற்போல்தான் இருந்தது. தேவையான பேச்சு மட்டும் தடைபடாமல் இருந்தது. கேட்ட கேள்விக்கு பதில். மற்றபடி தோளில் கை போட்டுப் பேசும் அளவுக்கு அந்நியோன்யம் இன்னும் வரவில்லை. அது வருவதற்கு நாளாகலாம். சம்பந்தம் பண்ணி விட்டோமே' என்று ஏதோ பொம்மை போல் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் நாம் போவதும், அவர்கள் வருவதுமாய், ஒட்டியும் ஒட்டாமலும், மனசு விட்டுச் சிரிக்க முடியாமல், பேச முடியாமல்.. வேண்டாத அவஸ்தை! . அசட்டுப் பிசட்டென்று..' என்று மனதுக்குள் இப்படித்தான் சொல்லிக் கொண்டார்.
நாம எப்படிங்க அவுங்க வீட்டுல போய் இருக்கிறது? அவுங்க பழக்க வழக்கங்களெல்லாம் ஒரு மாதிரி இருக்கும். அது இதுன்னு எல்லாமும் மாறுபடும். அங்க போய் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு நிக்கிறதா? நமக்காக சைவம் சமைச்சாலும் அதே பாத்திரப் பண்டங்களைத் தேய்த்துக் கழுவி அதையேதானே பயன்படுத்துவாங்க? வீணா அவங்களுக்கு சிரமம்தானே? பேசாம நீங்க மட்டும் போயிட்டு வாங்க.. என்னை விட்டுருங்க..' என்று புலம்பித் தீர்த்தாள் வைதேகி. எப்படியாவது இதிலிருந்து தப்பித்தால்போதும் என்று மன்றாடினாள். விலகி நிற்கவே விரும்பினாள். மனதுக்குள் அழுது கொண்டிருந்தாள் என்பதுதான் உண்மை.
'இதெல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னாடி உன் பையனுக்குத் தெரிஞ்சிருக்கணும்ல. அவனுக்கு அறிவு எங்க போச்சு? இந்தப் பிரச்னையெல்லாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் நம்மளால அப்பா, அம்மாவுக்கு எதுக்கு சங்கடம்னு அவன் யோசிச்சானா? சிவப்புத் தோலைப் பார்த்தவுடனே படக்குன்னு விழுந்திட்டான்ல. இவன் கொஞ்சம் நிறம் மட்டும்தான்னு அந்தப் பொண்ணாவது நினைச்சிச்சா ?ஆணுக்கு அதுவே அழகுன்னுஅதுவும் மனப்பூர்வமா சம்மதிச்சுதானே இந்தக் கல்யாணமே நடந்திருக்கு. வயசும் இளமையும் ரெண்டு பேருக்கும் கண்ணை மறைச்சிருச்சு. வேறே எதுவுமே கருத்துலே நிற்கலே. இப்பப்போய் இதையெல்லாம் பேசி என்ன பயன்? வீணா சண்டை வர்றதுக்கா. நீ வேணா இரு. நான் போயிட்டு வர்றேன். நான் ஆபீஸ் வேலையா எத்தனையோ இடத்துக்குப் போயிருக்கேன். வந்திருக்கேன். என்னென்னவோ இடத்துல தங்கியிருக்கேன். சாப்பிட்டிருக்கேன். எனக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது. அவுங்க மனசு கோணாம ரெண்டு நாளைக்குப் போய் இருந்திட்டு வந்திடுறேன். பிற்பாடு யோசிக்கலாம் நீ வர்றதைப் பத்தி...சரிதானா?' என்ற நீண்ட லெக்சர் கொடுத்து சுந்தரவதனம் சொல்லி முடித்தபோது, 'உங்களுக்குக் கோடிப் புண்ணியம்...' என்று கையெடுத்துக் கும்பிட்டு வணங்கி அனுப்பி வைத்தாள் வைதேகி.
இந்த விஷயம் அவர்கள் காதுக்கு எப்படிப் போனதோ தெரியாது. அவர்களாகவே சொல்லி விட்டார்கள். 'அடுத்தவாட்டி மாமி வரட்டும்' என்று. அதுவே இவருக்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. 'இவர் சொல்லிட்டாரு? இவுங்க வீட்டுல உள்ள அம்மணிகளெல்லாம் சம்மதிக்கணுமே?' என்று பயந்து கொண்டிருந்தார்.
'மாமி ஏன் வரலை? மாமி ஏன் வரலை?' என்று நேரடியாக முகத்துக்கு முகம் வந்து நின்று கேட்டால்? அப்படியெல்லாம் நடக்கவும் வாய்ப்பில்லைதான். இதுநாள் வரை நடந்த நிகழ்வுகளில் அவர்கள் வீட்டுப் பெண்கள் அதிகம் பேசியதாகவே தெரியவில்லையே?
'அவர்கள் நம் வீட்டுக்கு வருவதாயிருந்தால் எப்படியிருக்கும்?' என்று கற்பனை ஓடியது சுந்தரவதனத்துக்கு. தோன்றிய ஜோரில், 'ஐயோகடவுளே. அது வேண்டவே வேண்டாம். வைதேகி அவர்களை எப்படிக் கவனிப்பாளோ, மாட்டாளோ?' என்று மனதில் ஐயமும், பயமும் ஒருங்கே சேர்ந்தது. அத்தோடு வீடு அத்தனை பெரியதும் இல்லைதான். இருக்கும் மூன்று அறைகளில் இரண்டில் தட்டு முட்டுச் சாமான்கள் நிரம்பி வழிகிறது. ஹாலில் படுத்துக் கொண்டால் எல்லோரும் கால் மாடு தலைமாடாக - நெடுஞ்சாண்கிடையாக முடியாது - படுத்து உருள வேண்டியதுதான். அது ஒத்து வருமா? அழகாயிருக்குமா? ஒரு ஏ.சி. கூட இல்லை. ஒரு அறைக்காவது போட்டிருக்கலாம். போட நினைத்ததுதான். பையனின் காதல் கல்யாணம் இடியாய்த் தலையில் இறங்கியபோது எதுவுமே வேண்டாம் என்று வெறுத்துப் போய்விட்டது. தனியே நகரில் வேறு எங்காவது ரூம் போட்டுத்தான் தங்க வைக்க வேண்டும். அல்லது ரெண்டு நாளைக்கு ஒரு சிறிய கல்யாண மண்டபமாவது பிடித்துத்தான் ஆக வேண்டும்.
'சொல்லி வைத்தாற்போல எல்லாமும் இப்படிச் சிக்கலில் வந்து மாட்டிக் கொண்டதே?' என்று மருகினாள் வைதேகி.
'இந்தப் பயல் காதலிச்சாலும் காதலிச்சான். நம்மட வகைப் பொண்ணு எதையாச்சும் பிடிச்சு இழுத்திட்டு வந்து நின்னிருந்தாக் கூடப் பரவால்லியே? நெட்டையோ, குட்டையோ?இருந்துட்டுப் போறதுன்னு முடிச்சி வச்சிருக்கலாமே. ரெண்டு பக்கமும் ஆள்கள் வந்து போனாலும் ஒரு பங்கமும் வராதே! வேறு ஜாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணின்டு வந்து நின்னுட்டானே பாவிப்பயல். சொல்லவும் முடியாமே, மெல்லவும் முடியாமே! சேர்த்துக்கவும் முடியாமே, விட்டு உதறவும் ஏலாமே. இதென்ன பிராணாவஸ்தை?' என்று எல்லாமும் நினைத்து நினைத்து உருகி, அழுது, புரண்டு, அரற்றி ஓய்ந்தாயிற்று. ஆனாலும் அதையும் விடவில்லை சுந்தரவதனம்.
'அப்படி மட்டும் அவன் நம்ம ஆள்கள்ல ஒரு பெண்ணை இழுத்திட்டு வந்து நின்னிருந்தான்னு வச்சிக்கோ? உடனே ஓ,கே சொல்லிடுவியோ? என்ன ஆட்டம் ஆடுவே? எவ்வளவு பந்தா பண்ணியிருப்பே? இவ்வளவு நகையும், இத்தனை பணமும் கீழ வச்சாத்தான் ஆச்சுன்னு கச்சை கட்டி நின்னிருக்க மாட்டே? இப்போ எதுவும் வாயைத் திறக்காமயே நீ நினைச்சதுக்கும் மேலேயே எல்லாமும் வந்து சேர்ந்திருக்கு. வெள்ளிப் பாத்திரங்களும், வெண்கலப் பாத்திரங்களும், குத்து விளக்கும் கோமேதகமுமா அதுவே உன் வீடு தேடி வந்ததுனாலே உன் வாய் அடைச்சுப் போச்சுன்னு நான் சொல்றேன். மறுக்க முடியுமா உன்னாலே?' என்று போடு போடென்று போட்டார் சுந்தரவதனம். ஆனாலும் வேற்று ஜாதிப் பெண்தானே? என்கிற புள்ளியில் இருந்து நகர மறுத்தாள் வைதேகி. பெற்ற தாயின் மனது தவியாய்த் தவித்தது. சீதனமாய் வந்த எதுவும் அவளைத் திருப்திப்படுத்தவில்லைதான். ஒவ்வொன்றுக்கும் காலும் கையும் முளைத்தாற்போல் அவளைப் பிடுங்கியெடுக்கிறதோ என்னவோ? ஒரு நாள் கூட அவைகளைத் தொட்டுப் பார்க்கவில்லையே அவள்? இனி அதையெல்லாம் மூட்டை கட்டி மூலையில் போட வேண்டியதுதான். எதை? அந்த சம்பிரதாயங்களை, சித்தாந்தங்களை! மனிதர்கள் எல்லோரும் சமம். அவ்வளவுதான். கதை முடிந்தது.
'நான் வேணுமா வேணாமா உங்களுக்கு?' என்று கடைசியாய் ஒரு கேள்வியைக்கேட்டு வாயை அடைத்து விட்டானே?
'சொல்லுங்க? இல்லன்னா வேறே எங்கேயாவது டிரான்ஸ்பர் வாங்கிண்டு உங்க முன்னாடி நிற்காம, கண் காணாத இடத்துக்குப் போயிடுறேன். சம்மதமா? நான் அவளோட சேர்ந்து வாழுறதா, இல்ல எதுவும் வேணாம், யாரும் வேணாம்னு உங்கள விட்டுப் போறதா? யோசிச்சுச் சொல்லுங்க? நடந்தது நடந்து போச்சு..எனக்கும் ஒரு வகைல உங்கள் நிலைமையைப் பார்த்தா சங்கடமாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக என்னை நம்பி வந்தவளை நான் கைவிட முடியாது. அதுல உங்களுக்குச் சம்மதமா? அந்தப் பழி வேணுமா? ஆகையினால இனி ஆகப் போறதைப் பத்தி யோசிக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது' என்று முடித்து விட்டான் பையன். அதன் பின்தான் இந்தப் பயணம் வாய்த்தது சுந்தரவதனத்துக்கு.
பணியில் இருக்கும் காலங்களிலேயே அலுவலக ஆய்வு என்று வெளியூர் செல்கையில் முதலில் தங்குமிடத்தை உறுதி செய்து கொள்வார். அது சரியாய் இருந்தால்தான் மற்ற வேலைகள் தடைபடாமல் நடைபெறும் என்பது அவரது எண்ணம். ஆனால் இங்கு கிளம்பி வருகையில், அதை வாய்விட்டுக் கேட்க முடியாத நிலை. அப்படிக் கேட்கப்போக சகஜநிலை மாறிவிடக் கூடாதே என்று பயந்தார்.
'எங்க வீடு என்ன வெறும் குச்சில்னு நினைச்சீங்களா? பங்களா மாதிரி சார். நீங்க வசதியாய்த் தங்கலாம்' என்று மாசிலாமணி உரத்துச் சொல்வது போலவே இருந்தது இவருக்கு. அவரது குரலே ஓங்கித்தான் இருக்கிறது. எதிரெதிர் உட்கார்ந்து கொண்டு பேசும்பொழுது, எதற்காக இத்தனை சத்தமாக உரையாடுகிறார் என்று தோன்றியது. அதிகாரத் தொனியோ என்கிற சந்தேகமும் வந்தது.
'காது கேட்காதவர்கள்தான் உரத்துப் பேசுவார்கள். அப்படி எதுவும் இவருக்குக் கோளாறோ?' என்று நினைத்தாலும் மௌனம் காத்தார் சுந்தரவதனம். வார்த்தைகள் தடித்து வம்புச் சண்டை வந்ததாகிவிடக் கூடாது. ஒன்றைப் பேசுவதை விட, அமைதி ஆயிரம் நன்மைகளைச் செய்துவிடும்.
காபி வந்தது. சம்பந்திதான் எடுத்து வந்தார். சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.
'அடடா..நீங்க ஏன் சிரமப்படுறீங்க?' என்றவாறே வரவேற்றார்.
'லைட்டா குடிப்பீங்களா.. ஸ்ட்ராங்கா? இந்தாங்க டிகாக்ஷன். தேவைன்னா விட்டுக்குங்க?' என்று சொல்லியவாறே டேபிளில் வைத்தார் மாசிலாமணி.
ரொம்பவும் குறிப்பறிந்து நடப்பதாய்த் தோன்றியது. புத்தம் புது எவர்சில்வர் வட்டாவும் டம்பளருமாய் காபி பளபளத்தது.
'இவ்வளவு வேண்டாம். கொஞ்சம் குறைச்சிக்கலாம்' என்றவாறே எடுத்து ஆற்ற ஆரம்பித்தார். கொஞ்சம் டிகாக்ஷனையும் எடுத்து விட்டுக் கலந்து கொண்டார். திக்காகக் காபி குடிப்பதே அவர் வழக்கம். அவர் நினைக்கும் கலர் அப்போதுதான் கிடைத்தது. கொஞ்சம் ஜீனி போட்டால் தேவலைதான். இன்னும் ருசி கூடுதலாக இருக்கும். சொன்னால் திரும்பவும் அவர் கீழே இறங்கிப் போக வேண்டும். தன் வயதொத்தவர்தான் அவரும். எனவே அவரை அலைகழிக்க மனது வரவில்லை சுந்தரவதனத்துக்கு. இங்கிருந்து கத்தினால் யாரும் வருவார்களோ என்னவோ? அப்படியென்ன நாக்கு ருசி? பரவால்ல என்று டிகாக் ஷன் கசக்க காபியைத் தொண்டைக்குள் ஊற்றி இறக்கினார்.
'எத்தனையோ விஷயங்களைக் கடித்து, மென்னு முழுங்கியாச்சு. இன்னும் எத்தனை விஷயங்களை எதிர்வரும் நாள்களில் சகித்து இறக்கி கிரஹிக்கப் பழகிக் கொள்ள வேண்டுமோ?' என்று தோன்றியது அவருக்கு.
நண்பர்கள் வீட்டில் போய் தங்கியதில்லையா? வேலை நிமித்தம் வெளியூர் போய் அங்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போய் சாப்பிட்டதில்லையா? அவர்கள் நம்மை விருந்தினர்களாகக் கருதி சிறப்பான சைவச் சமையல் ஆக்கிப் படைத்து மகிழ்வித்ததில்லையா? அவர்களென்ன வலிய மீனைப் பொறித்து சாப்பிடாத்தான் ஆச்சு என்று நிற்கப் போகிறார்களா? மரியாதை தெரியாதவர்களா? கெüரவமான குடும்பம்தான். கண்ணியமான நடத்தைகள்தான்.
'சாப்பாடு பரிமாறுகிறபோது அதில் அன்பும் அக்கறையும் வழிகிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்' என்று தோன்றியது சுந்தரவதனத்துக்கு. அதற்கு மேல் இந்த விஷயத்தை மேலும் எதுவும் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர்.
மகனின் சந்தோஷம்தான் முக்கியம் என்கிற ஒற்றைப் புள்ளியில் தன்னை நிறுத்திக் கொண்டு சிந்தித்தார் சுந்தரவதனம். தன் உடலின் இந்த உள்ளமும், உயிரும் தன் மகனுக்கே என்று எண்ணி நிறைவடைந்தார். வைதேகிக்கும் அதுதானே என்று அவர் மனசு திடப்பட்டது. மனிதர்கள் அன்பு என்கிற வலையினால் பின்னப்பட்டிருக்கிறார்கள் அதுதான் அவர்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை நிலை நிறுத்தி, சந்தோஷத்தை நிரந்தரமாக்குகிறது என்கிற சுமுகமான சிந்தனையில், இணக்கமான சூழலில். அன்றைய தினசரியை எடுத்து செய்திகளைப் புரட்டலானார்.
கொஞ்ச நேரத்தில் அவர் குளித்து விட்டு, மாடியில் இருந்தமேனிக்கே வானத்தில் சூரியனைப் பார்த்து கண்மூடி நமஸ்கரித்து நின்றபோது , 'அப்பா... டிபன் சாப்பிட வர்றீங்களா?' என்று கேட்டுக் கொண்டே மருமகள் ஐஸ்வர்யா வந்து நின்றபோது, அந்த 'அப்பா!' என்கிற புதிய பெண் குரல் அழைப்பினில் உடம்பே சிலிர்த்துப் போக ஒரு கணம் உரைந்து போனார் சுந்தரவதனம்..
'உங்களுக்கு சிரமம்னா இங்கேயே கொண்டு வரட்டாப்பா!' என்று ஐஸ்வர்யா மீண்டும் ஒருமுறை கேட்டபோது 'ஐஸ்வர்யா' என்று அவர் வாய் சேர்த்து முணுமுணுத்தது.
'நானே கீழே வர்றேம்மா..அப்பா ரெடியாயிட்டாரா?' என்று கேட்டுக் கொண்டே மாடிப் படிகளில் நிதானமாக சகஜ பாவமாக இறங்க ஆரம்பித்தார் சுந்தரவதனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...