'இந்தியாவில் இதுவரை 8 வாழை ரகங்களுக்கு புவிசார் குறையீடு கிடைத்துள்ளது. கூடுதல் ரகங்களை புவிசார் குறியீட்டில் கொண்டுவந்தால் உலக நாடுகள் அனைத்துக்கும் அந்த ரகங்களைக் கொண்டு சேர்க்க முடியும்'' என்கிறார் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சரஸ்வதி.
அவரிடம் பேசியபோது:
'வேளாண் பயிர்கள் அல்லது உணவுப் பொருள்கள், நாட்டின் பிரத்யேகமாக ஓர் குறிப்பிட்ட பகுதியில் பயிரிடப்படுகிறது என்பதை காட்டும் அடையாளக் குறியீடே புவிசார் குறியீடாகும். அறிவுசார் சொத்துரிமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.
இந்தியாவில், 2003 செப்டம்பரில் புவிசார் குறியீடு முறை (ஜிஐ டேக்) அமல்படுத்தப்பட்டது. இதற்காக தனியே பதிவு, பாதுகாப்பு சட்டமும் உள்ளது. இந்த குறிச்சொற்கள் மத்திய அரசின் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
நாட்டில் பாரம்பரிய வாழை ரகங்களின் உற்பத்தியைப் பெருக்குவதால், இணைய வழி விற்பனையையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கலாம். இதற்கு புவிசார் குறியீடு மிகச் சிறந்த வகையில் பலனைத் தருகிறது. புவிசார் குறியீடு பெறுவதால் அந்த வாழை ரகத்தை எளிதில் உலகெங்கும் கொண்டு செல்லமுடியும்.
வாழை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு சுமார் 34.9 மில்லியன் டன் இந்தியாவிலும், அதில் 4.30 மில்லியன் டன் தமிழ்நாட்டிலும் உற்பத்தியாகிறது. நூற்றுக்கும் அதிகமான வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் சுமார் 30 வகையான வாழை ரகங்கள் மட்டுமே வணிகரீதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
சில ரகங்கள் பிரத்யேகமாக, ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் பயிர் செய்தால் மட்டுமே அதன் தனித்துவம், சிறப்பம்சங்கள் (நிறம், சுவை, நறுமணம் மற்றும் அதிக வைப்புகாலம்) முழுமையாக வெளிப்படும். நாட்டில் இதுவரை 8 பாரம்பரிய வாழை ரகங்கங்களுக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
நஞ்சன்கோடு ரசபாலே
(ஜிஐ குறியீட்டு எண்.35 - 2005)
கர்நாடக மாநிலத்தின் மைசூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. 18 மாதப் பயிர். வாழைத்தாரின் எடை 15 முதல் 20 கிலோ வரை இருக்கும்.
பழங்கள் தனிப்பட்ட சுவை, மணம் கொண்டது. அதிக வைப்புகாலம் உடையதால் ஏற்றுமதிக்கு உகந்தது. 2005-ஆம் ஆண்டு முதல் முறை கண்டறியப்பட்ட இந்த ரகத்தில், வாடல் நோயின் தாக்கம் அதிகம் உள்ளதால் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
மலை வாழை- சிறுமலை
(ஜிஐ குறியீட்டு எண்.126 - 2008)
திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட சிறுமலையில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிக இனிப்புச் சுவை கொண்ட இந்தப் பழங்கள் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பழங்களில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் நரம்பியல் நோயாளிகளுக்கு உகந்த ரகமாக கருதப்படுகிறது.
விருப்பாச்சி
(ஜிஐஐ குறியீட்டு எண். 124 - 2008)
தமிழ்நாட்டில் கீழ் பழனி, சேர்வராயன் மலைகளில் பயிரிடப்படுகிறது. இனிப்பு, அதிக மணம் கொண்டது. இதன் வைப்புக்காலம் 10 முதல் 12 நாள்கள் ஆகும். இந்தப் பழங்களும் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஏற்றுமதிக்கு உகந்தது. சிறுமலையும், விருப்பாச்சியும் மலைவாழ் மக்களின் அடையாளமாகும்.
கமலாபூர் செவ்வாழை
(ஜிஐ குறியீட்டு எண்.133 - 2009)
கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில் பயிரிடப்படும் தனித்துவமான வாழை ரகமாகும். அதிக சத்துகள் (கால்சியம், இரும்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் (சி, பி6) நிறைந்துள்ளன. மருத்துவக் குணம் கொண்ட இப்பழங்கள் குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது.
சிப்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
செங்காலிக்கோடன்
(ஜிஐ குறியீட்டு எண்.479 - 2014)
ஓணம் பண்டிகையின்போது, படைக்கப்
படும் காழ்ச்சகுலா தயாரிக்கப் பயன்படும் தனித்துவமான வாழை ரகமாகும். கேரள மாநிலத்துக்குள்பட்ட திருச்சூர் மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதிக்கு உகந்தது.
ஜல்கான் வாழை
(ஜிஐ குறியீட்டு எண்.498 - 2016)
மகாராஷ்டிர மாநிலத்துக்கு உள்பட்ட ஜல்கான் மாவட்டத்தின் தப்தி நதி நீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. துபைக்கு ஏற்றுமதியாகிறது. 25 கிலோ முதல் 35 கிலோ எடை கொண்டவை. இந்த ரகம் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
மின்டோலி
(ஜிஐ குறியீட்டு எண்.680 - 2021)
கோவாவில் அதிகம் பயிரிடும் இந்த ரகமானது இனிப்பு நிறைந்த சிறிய வாழைப் பழமாகும். ஹல்வா உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிக்க ஏற்ற ரகமாகும். வாடல் நோயை தாங்கி வளரும். ஏற்றுமதிக்கு உகந்தது.
மட்டி
(ஜிஐ குறியீட்டு எண்.785 - 2023)
நாகர்கோவில், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் ரகமாகும். அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தனித்துவமான சுவையும், நறுமணமும் கொண்டது. எளிதில் ஜீரணிக்க கூடியது. உடனடி ஆற்றலை அளிப்பதால் கைக்குழந்தைகளுக்கு மிகவும் உகந்த உணவாகும்.
ஏற்கெனவே புவிசார் குறியீடு பெற்றுள்ள கமலாபூர் செவ்வாழையைப் போன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் ரஸ்தாளி வகை ரகம் ஒன்றும் உள்ளது. இதேபோல, தமிழ்நாட்டின் மலைப் பகுதிகள், குறிப்பிட்ட வட்டாரங்கள் என அங்கு மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய பிரத்யேக ரகங்களை அந்தப் பகுதி விவசாயிகள் கண்டறிந்து புவிசார் குறியீடு பெற முயற்சிக்கலாம்.
தனித்துவமான வாழைகளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெரிதும் உதவுகிறது.
புவிசார் குறியீடு பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், ஆராய்ச்சிக்கு உதவவும் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர். செல்வராஜன் தலைமையில் விஞ்ஞானிகள் குழுவினர் பிரத்யேக கவனம் செலுத்தி வருகின்றனர். 0431-261825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்கிறார் சரஸ்வதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிபிஎஸ்இ ஆங்கிலத் தோ்வு கேள்வித் தாள் விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு! மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், பார்மா பங்குகள் உயர்வு!!
தெரியுமா?
வீடியோக்கள்

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

