15 நடிகர்களுக்கு ரெட்?: கோலிவுட் சலசலப்பு!
தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத 15 ஹீரோக்களுக்கு ரெட் கார்டு போடுவது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத 15 ஹீரோக்களுக்கு ரெட் கார்டு போடுவது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்று படப்பிடிப்பு, டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் ஐந்து நடிகர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ‘அவர்களை வைத்துப் படம் தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்ட பிறகே ஒப்பந்தம் செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்தனர். இதில் சிம்பு, தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, ரெடின் கிங்ஸ்லி, விஜய் சேதுபதி எனப் பலரது பெயர்கள் அடிபட்டன. இந்தப் பிரச்னை குறித்து இரு சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளளனர் என்று அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நடிகர்கள் சங்கத்திலிருந்து அதன் தலைவர் நாசர் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட இரு சங்கத்தினரும் பங்கேற்ற கூட்டம், சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் வெளிவந்த தகவல்கள்:
'கூட்டம் ஒரு பரஸ்பர புரிதலுக்காக நடத்தப்பட்ட ஒன்றுதான். இதில் இரு சங்கத்தினருக்கும் இடையேயான பொதுவிதிகள் குறித்துப் பேசினோம். சில நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். நடிகர் சங்கத் தலைவரான நாசர் சார், தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் என்பதால், முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நாங்கள் சொன்ன பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்டதுடன், சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் தெரிவித்து அவர்கள் தரப்பு பதில்களையும் அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்தடுத்த கூட்டங்கள் இன்னும் நடக்கவிருக்கின்றன.
சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அவர்களின் சம்பளம், இதர விஷயங்கள் குறித்து ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கக் கூடிய நன்மைகள், தீமைகள் குறித்தும் கலந்து பேசியிருக்கிறோம். நடிகர், நடிகைகளின் சம்பளத்திலிருந்து அவர்களின் உதவியாளர்கள் ஹேர்டிரெஸ்ஸர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன் ஆகியோரின் ஊதியங்கள், தேதி குளறுபடிகள், நேரம் தவறாமை எனப் பல விஷயங்கள் இந்தப் பொதுவிதியில் அடங்கும். அத்தனையுமே கலந்து விவாதித்துள்ளோம். நடிகர்களுக்கு எங்கள் பக்கம் இருந்து எத்தகைய ஆதரவு தேவைப்படுகிறது, நடிகர்கள் அவர்கள் பக்கமிருந்து எங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது போன்ற விஷயங்களையும் இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கோம்' என்ற தகவல் வெளியாகியுள்ளது என்று தகவல்கள் வெளியானது.
'வெளியிலும் அப்படித் தகவல்கள் இருக்கின்றன. தயாரிப்பாளர்களோட பணம் பெரிய அளவில் முடங்கியிருக்கு! அந்தப் பணத்துக்கு வட்டியும் சேர்த்தால் இன்னும் பெரிய தொகையாக வந்து நிற்கும். தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். சமீபத்தில் நடந்தது முதல் கூட்டம்தான். சம்பந்தப்பட்ட நடிகர்களின் பதில்களை வைத்து, அடுத்தடுத்த வாரங்களில் நடக்கும் கூட்டங்களுக்குப் பின்னரே, நடிகர்களின் பெயர்களை அறிவிப்பது குறித்து முடிவு எடுப்போம். முடங்கிக் கிடக்கும் பணத்தையும், படங்களையும் பேசித் தீர்த்துக் கொண்டு வரத்தான் விரும்புகிறோம். நடிகர்கள் சங்கத்தினர், பிரச்னைகளைச் சரி பண்ண நேரம் கேட்டிருக்காங்க. அவங்க சரி பண்ணினாலே, தயாரிப்பாளர்களின் பிரச்னைகளும் சரியாகிவிடும்' என்றார் ஒரு தயாரிப்பாளர் சங்க நிர்வாகி.
இந்த நிலையில் நடிகர் சங்கம் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறது. அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது.
நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழ் திரைத் துறையுலகின் முக்கிய இரு சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்னைகளைக் கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்துவிடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமுகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்னைகளும் விரைவில் களையப்படும். இதைவிடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...