/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எந்த உணவை அதிகம் சாப்பிடுவது?

உணவு வகைகளில் எதை அதிகமாக எடுத்துகொண்டால் நல்லது என்பதைப் பற்றி ஆயுர்வேதம் குறிப்பிடுள்ளதா?

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:15 pm

எஸ். சுவாமிநாதன்

உணவு வகைகளில் எதை அதிகமாக எடுத்துகொண்டால் நல்லது என்பதைப் பற்றி ஆயுர்வேதம் குறிப்பிடுள்ளதா?

ஞானப்பிரகாசம்,
புதுச்சேரி.

'சரக ஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில் நல்ல உணவு வகைகளைப் பற்றி வர்ணனை காணப்படுகின்றது. அது பற்றிய விவரம்.

அறுபது நாளில் விளையக் கூடிய அரிசியும் சிவப்பு வர்ணத்தில் காணப்படும் அரிசியும், பச்சைப்பயறும், இந்துப்பும், நெல்லிக்கனிகளும், பார்லியும், மழைநீரும், பாலும், நெய்யும், தேனும் சாப்பிடக் கூடிய சிறந்த வகைகளாகும்.

கேரளத்தில் 'செந்நெல் அரிச் சோறு' என்ற பெயரில் சிவப்பு அரிசியை வேகவைத்து உண்பது வழக்கத்திலுள்ளது. 'அரிசியின் மேல் படிந்திருக்கும் இந்த சிவப்பு நிறத்தில் மிகவும் சிறந்த தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அறுபது நாளில் விளையக் கூடிய அரிசி எளிதில் வெந்துவிடும். செரிமானம் எளிதில் ஆகி உடலை வலுவாக்கும் என்பதால், மற்ற அரிசி வகைகளைவிட இந்த இரண்டும் சிறப்பானவை' என்கிறார் சரகர்.

புரதச் சத்து நிறைந்த பச்சைப் பயறு உணவாகக் கொள்வதில் மிகவும் சிறந்தது. இரவில் பச்சைப்பயிறும் சின்ன வெங்காயம் வேக வைத்த கூட்டுடன் சப்பாத்தி சாப்பிடுவது மிகவும் நல்லது. கோதுமையை மட்டுமே எடுத்துச் செய்த சப்பாத்தியே நல்லது. மைதாவினுடைய கலப்பு இருக்கக் கூடாது.

பச்சைய்பயறு கூட்டில் வரமிளகாயும், இந்துப்பும், பெருங்காயமும் சேர்த்து வெதுவெதுப்பாக உள்ள நிலையில், சப்பாத்தியுடன் சாப்பிடுவதே சிறந்தது. கோதுமை வகை உணவுகளை உட்கொள்ளும்போது, வெந்நீர் அருந்தக் கூடாது. சாதாரண தண்ணீரே சிறந்தது. உளுந்தை அடிக்கடி சாப்பிடக் கூடாது என்றும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

செரிப்பதில் மிகவும் கடினமானது. ஆனால், நாம் தமிழகத்தில் அதிக அளவு உளுந்து சேரும் இட்லி, தோசை, வடை ஆகியவற்றையே சாப்பிடுகிறோம். மற்ற மாநிலங்களில் இவை குறைவாகவே உண்ணப்படுகிறது. 'சிறிது இனிப்பும், விந்தணுப் பெருக்கத்தைச் செய்வதில் சிறந்ததும், இதயத்துக்கு உவந்ததும், மூவகை தோஷத்தின் சீற்றத்தை அடக்குவதும், லேசானதும், அதிக சூடற்றதும், கண் பார்வைக்கு நல்லதும், உட்புற காந்தலை ஏற்படுத்தாததும், பசியைத் தூண்டிவிடுவதுமாகிய இந்துப்பையை நாம் உணவில் சேர்க்க வேண்டும்.

மற்ற உப்பு வகைகளைவிட இந்துப்பே சிறந்தது' என்று குறிப்பிடுகிறார் சரகர்.

மூன்று ஆரஞ்சு பழங்களுக்குத் துல்லியமான ஒரு நெல்லிக்கனியை நாம் உணவாக ஏற்றால் உடலைக் குளிர்ச்சியாக்கி, பித்தகப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி, புத்தியை விசாலமாக்கி, இளமையைத் தக்க வைத்துத் தரும். நல்ல மலமிளக்கி, சர்க்கரை உபாதையைக் கண்டிக்கும். குடல் கிருமிகளை வெளியேற்றும். தலை, கண், இதயம், கல்லீரல் சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்தும்.

வறட்சி, குளிர்ச்சி, கனம், இனிப்பு, மலமிளக்கி, குடல் மலம், வாயு உற்பத்தி, ஆண்மை வலுவாக்குதல், சிறுநீர், மேதஸ், பித்த கபசீற்றம், ஜலதோஷம், மூச்சிரைப்பு, தொடை விரைப்பு, தொண்டை தோல் ஆகியவற்றைச் சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்தும் பார்லியை நாம் நன்கு பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

மழைத் தண்ணீரை அண்டாவில் நிரப்பிக் குடிக்கும் வழக்கம் இன்றும் தமிழக கிராமங்களில் உள்ளது. இந்த நீருக்குச் சமமாக எந்த நீரும் கிடையாது. ஜீவனம், திருப்தி, இதயத்துக்குச் சிறந்தது., மனக்களிப்பூட்டுவது, புத்திகூர்மை, லேசான தன்மை உடையது.

பாலும் நெய்யும் தேனும் குளிர்ச்சியும் நெய்ப்பைத் தருவதும், ஓஜஸ் எனும் சத்தான சாரபாகத்தை வளர்ப்பதில் சிறந்தவை. தினமும் சாப்பிட உகந்தவை.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.