/

ஹீரோயின் ஸ்பெஷல்!

மீண்டும் தமிழில் கங்கனா ரணாவத் 'தலைவி'  படத்துக்குப் பிறகு கங்கனா ரணாவத்துடன் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.  

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

டெல்டா அசோக்


மீண்டும் தமிழில் கங்கனா ரணாவத் 'தலைவி' படத்துக்குப் பிறகு கங்கனா ரணாவத்துடன் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அவர் தற்போது அருண் விஜயை வைத்து 'மிஷன் 1', 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தின் மூலம் எமி ஜாக்சன் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடந்திருக்கிறது.

இதற்கிடையே 'ரங்கோலி' என்ற படத்தைத் தயாரித்திருந்தார். இதில், ஏ.எல்.விஜயின் தங்கை மகன் ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமானார். 'தெய்வத் திருமகள்', 'மாநகரம்' எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர். 'ரங்கோலி'யை அடுத்து இன்னொரு படத்தையும் தயாரித்து வருகிறார் விஜய்.

'கிளாப்' படத் தயாரிப்பாளர் ராஜசேகர், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இன்னமும் தலைப்பு வைக்கப்படாமல் இருக்கும் இந்தப் படத்தை 'ரங்கோலி' இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார். இதில் பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதற்கிடையே ஏமி ஜாக்சன் படமான 'மிஷன் 1' படத்தை அடுத்து இயக்குநர் விஜய், அனுஷ்காவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்துக்கு அடுத்து அனுஷ்கா நேரடி தமிழுக்கு வருகிறார். அதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார் என்ற பேச்சு இருந்தது. அதில், விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் 'தலைவி' படத்துக்கு பின்னர் கங்கனா தமிழில் 'சந்திரமுகி 2'-இல் நடித்திருந்தார். தென்னிந்தியப் படங்களின் ஒர்க்கிங் ஸ்டைல், உணவுகள் கங்கனாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், தமிழில் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

விஜய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் மாதவன் திடீரென கமிட்டானதும், இதை பான் இந்தியா படமாகக் கொண்டு போக நினைத்த விஜய், உடனே கங்கனாவிடம் பேசினார். இப்போது அதன் படப்பிடிப்பு பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது, அருகே ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் 'தலைவர் 170' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பக்கத்துத் தளத்தில் கங்கனாவின் படப்பிடிப்பு நடக்கிறது எனக் கேள்விப்பட்ட ரஜினி, உடனே நேரில் சென்று கங்கனாவைச் சந்தித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போதும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

சஷிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், நயன்தாராவுடன் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வரும் மாதவன், விஜயின் படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் பங்கேற்பார் என்று தகவல். அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என்றும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.

பாலிவுட்டை குறி வைக்கும் நயன்தாரா

சினிமாவில் 20-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறார் நயன்தாரா. 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து இருக்கிறார். தற்போது திரைக்கு வந்துள்ள 'அன்னபூரணி' அவரது 75-ஆவது படமாகும். 'மாயா', 'அறம்', 'கனெக்ட்' உள்பட பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் ஸ்கோர் செய்த நயன்தாரா, இப்போது கதாநாயகிக்கான கதைகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறார். திருமணத்துக்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் நயன்தாரா.

அவரது 75-ஆவது படமான 'அன்னபூரணி'யை ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெய், சச்சு, ரேணுகா எனப் பலரும் நடித்துள்ளனர்.

இதற்கிடையே மாதவன், சித்தார்த் நடிக்கும் சஷிகாந்தின் 'டெஸ்ட்' படத்திலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'கோலமாவு கோகிலா' கூட்டணியான யோகி பாபுவுடன் இதில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுகிறது.

இதே நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு படம் பண்ணுகிறார் நயன்.

'நெஞ்சுக்கு நீதி', 'கனா' படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அதை இயக்குகிறார். இதுவும் ஹீரோயின் சென்ட்ரிக் கதையாகும். இதனை அடுத்து 'கொடி', 'பட்டாஸ்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்திலும் நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் சென்ட்ரிக்.

நயனின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடக்கிறது. துரை செந்தில்குமார் இப்போது சூரியை வைத்து 'கருடன்' படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் படமான 'ஜவான்' வெற்றியினால் ஹிந்தியிலிருந்தும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட் விஷயத்தில் பொறுமையாகப் படங்களைத் தேர்வு செய்யுங்கள் என அட்லி அறிவுறுத்தியிருப்பதால், தற்போது அங்கே கதைகள் மட்டும் கேட்டு வருகிறார்.

மீண்டும் பிஸியாகும் சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தற்போது வெப் சீரிஸ், டிவி நிகழ்ச்சி, சினிமா என மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் திருநங்கையாக நடித்துள்ள 'தாலி' என்ற வெப்சீரிஸ் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிரேக் எடுத்துகொண்டது குறித்தும், ஒடிடி தளம் திரைப்படத் துறையில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்தும், 'தாலி' வெப் சீரிஸில் திருநங்கையாக நடித்த அனுபவம் குறித்தும் நடிகை சுஷ்மிதா சென் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் சின்னச் சின்ன விஷயங்களுக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. திருநங்கைகள் பற்றிய 'தாலி' படம் தங்களுக்கு பலன் தரும் என்று தெரிந்தாலும், அதில் நடிக்க சிலர் தயங்கினார்கள்.

அவர்கள் மீது குறைசொல்ல விரும்பவில்லை. நான் திருநங்கை சமுதாயத்துக்காக மட்டும் இந்த வெப்சீரிஸில் நடிக்கவில்லை. கௌரி சாவந்த் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இத்தொடரில் நடித்தேன். அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் 1990 கால நடிகை. எங்களது பீக் காலம் 28 வயதில் முடிந்துவிட்டது. பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்கள் எடுபடாது போன்ற உரையாடல்கள் வேதனையளிக்கும்.

ஒடிடி தளத்துக்காக, கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது எங்களுக்குப் புதிய வாழ்வை கொடுத்திருக்கிறது. நடிகர்களை மீண்டும் கொண்டு வந்ததோடு புதிய திறனையும் வளர்த்துள்ளது.நான் திரைப்படத்துறையில் இடைவெளி எடுத்துக் கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சலிப்பு ஏற்பட்டதால் நடிப்பில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார். சுஷ்மிதா சென் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் எந்த ஓர் உறவும் திருமணம் வரை செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.