/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குறைய என்ன வழி?

என் வயது 37. நாள் முழுவதும் வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு இரவு படுக்கும் வரை இடுப்பு வலி, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது இடுப்பு முதல் பின்தொடை முட்டிவரை இரு பக்கமும் சுண்டி இழுக்கிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 37. நாள் முழுவதும் வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு இரவு படுக்கும் வரை இடுப்பு வலி, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது இடுப்பு முதல் பின்தொடை முட்டிவரை இரு பக்கமும் சுண்டி இழுக்கிறது. கைகளைப் பக்கவாட்டில் ஊன்றிக் கொண்டு மெதுவாக எழுந்து அடிமேல் அடி எடுத்து ஜாக்கிரதையாக நடந்தால் வலி சிறிது, சிறிதாகக் குறைகிறது. இது என்ன உபாதை? எப்படி குணப்படுத்தலாம்?

-மோகனசுந்தரி, தி.நகர்,
சென்னை.

''ஆவரண வாயு'' என்று இந்த வலிக்குப் பெயர். அதாவது ஓய்வின்போது, நரம்புகளில் செயல்படும் வாயுவைச் சுற்றி வளரும் நெய்ப்பு, கனம், குளிர்ச்சி, மந்தம் போன்ற குணங்கள் அனைத்தும் போர்வைபோல மூடிக் கொள்வதால், வாயுவின் சீரான ஓட்டமானது நரம்புகளில் தடையை ஏற்படுத்துகின்றன.

தடையைத் தகர்க்க வாயு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகும் நிலையில், 'என்னை விடுவித்துத் தாருங்கள்' என்ற நிலைக்குத் தள்ளப்படுவதால் வலியை ஏற்படுத்தி உணர்த்துகிறது.  

சிறைபிடிக்கப்பட்டிருக்கும் வாயுவை, வெளிக்கொணர வேண்டிய நிர்பந்த நிலையில் நீங்கள் இருப்பதால், 'வாலுகாஸ்வேதம்' எனப்படும் ஆற்றுமணலைக் கொண்டு வியர்ப்பித்தல் முறையில் விரைவில் குணமடையலாம். ஆற்று மணலை காடாத்துணியில் போட்டு மூட்டைக் கட்டி, தவாவில் சூடாக்கி வலி உள்ள கீழ் இடுப்புப் பகுதி முதல், பின் தொடை முட்டி வரை ஒத்தடம் கொடுத்து, அப்பகுதிகளை சூடாக்குவதால், வாயுவைச் சுற்றியுள்ள குணங்கள் அனைத்தும் நெகிழ்ந்து, இளகி,  வாயுவைவிட்டு விலகி விலகுவதால் நரம்பில் ஏற்படும் வலியானது நன்றாகக் குறைந்துவிடும். இதனால் சிறையிலிருந்து விடுபடும் வாதமானது, தன் செயலை மறுபடியும்  திறம்பட செய்யும் வேலையைச் செய்கிறது.

நீங்கள் குறிப்பிடும் வகையில் காலையில் தொடர்ந்து வலி ஏற்பட்டவாறு இருந்தால், ஆற்றுமணல் ஒத்தடத்தை காலையிலும், கீழ் இடுப்பு, பின்தொடை முட்டி வரை மூலிகைத் தைலங்களில் ஒன்றிரண்டை மருத்துவர் ஆலோசனைப்படி, தேர்ந்தெடுத்து, வெதுவெதுப்பான பஞ்சில் முக்கி ஊறவைப்பதை மாலையிலும் செய்துகொள்ள வேண்டும்.

அதன்பிறகு, மூலிகை இலைகள், தழைகள் போட்டுக் காய்ச்சிய வென்னீரில் துணியைப் போட்டுப் பிழிந்து ஒத்தடம் கொடுப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நரம்புகள் வலுப்படுவதுடன், கீழ் இடுப்பு, தொடை, முட்டி ஆகிய பகுதிகளில் நிறைந்திருக்கும் தசைநார்கள், எலும்புகள், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவையும் வலுப்படும்.

எண்ணற்ற வாயு- நரம்பு உபாதைகள் இதுபோன்ற 'ஸ்நேகஸ் வேத'  (நெய்ப்பு- வியர்வை) சிகிச்சை முறைகளால் குணமடைவதைக் காண நேரிடுகிறது.

சுக்கு மற்றும் சித்தரத்தைக் குடிநீராலும் நீங்கள் பயனடையலாம். சுக்கு ஐந்து கிராம், சித்தரத்தை பத்து கிராம் என்ற கணக்கில் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அரை லிட்டராகச் சுண்டியவுடன் வடிகட்டி, சிறிது சிறிதாக ஒரு நாளில் குடித்துவர, வாயு- நரம்பு உபாதை குணடையும். 

இரவில் அடுப்படியில் கவனிக்க வேண்டிய சமாசாரங்களில்- ஈரமான தரையில் வெகுநேரம் நின்றுகொண்டு பாத்திரம் துலக்குவது, ஈரமான தரையில்லாமலிருந்தாலும் சில்லிட்ட தரையின் மீது, காலில் காலணி அணியாமல் நின்றுகொண்டிருப்பது, இடுப்பை வளைத்து உடலை முன்னோக்கிக் குனிந்து, தட்டிலுள்ள ஆறிப்போன பருப்பு சாம்பார், சாதம், பொரியல், தயிர் போன்றவை சாப்பிடுவது, ஈரக்கால்களுடன் படுப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.

அஷ்டவர்க்கம் கஷாயம், ஸஹசராதி கஷாயம், யோகராஜகுக்குலு மாத்திரை, கைசோரகுக்குலு மாத்திரை, குக்குலுதிக்தகம்க்ருதம் எனும் நெய் மருந்து, பலாரிஷ்டம், தான்வந்தாரிஷ்டம் போன்ற மருந்துகள் நீங்கள் குறிப்பிடும் வகையில் ஏற்படும் உபாதைகளுக்கு நலல் தீர்வை தரக் கூடியவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.