/

ஹீரோயின் இல்லாத கோலிவுட்!

ஒரு திரைக்கதை முழுமையடையும்போது,  அதன் காட்சி வடிவமான திரைப்படமும் முழுமையடைகிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

டெல்டா அசோக்

ஒரு திரைக்கதை முழுமையடையும்போது, அதன் காட்சி வடிவமான திரைப்படமும் முழுமையடைகிறது. ஒரு திரைக்கதை முழுமையடைய, அதிலிருக்கும் கதாபாத்திரங்களும் அவர்களின் நோக்கமும், அந்த நோக்கம் நிறைவேறும் வழிமுறைகளும், அந்த வழிமுறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தேவை. இதுவே ஒரு திரைக்கதையின் அடிப்படை இலக்கணம்.

இந்த இலக்கணத்தைப் பின்பற்றுவதே ஒரு திரைப்படத்துக்கு அதன் படைப்பாளி செய்யும் பெரும் மரியாதை. அதே திரைக்கதையில் தேவையில்லாத ஒரு கதாபாத்திரமோ, நிகழ்வோ, சிக்கலோ, காட்சியோ எழுதப்பட்டால், அது அந்தப் படத்தோடு ஒட்டாமல் போய்விடும். அதனால் அந்தத் திரைப்படம் முழுமையும் பெறாது. இங்கே பல திரைப்படங்களில் வலியத் திணிக்கப்படும் கதாநாயகி கதாபாத்திரமும் அத்தகைய முழுமையற்ற தன்மையைத்தான் உருவாக்குகின்றன. 'கதாநாயகி இல்லையென்றால் ஒரு திரைப்படம் ஓடாது' என்ற மாயை வணிகக் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்கார்த்தி கூட்டணியின் 'கைதி' அந்த மாயையை உடைத்திருக்கிறது. பொதுவாக, ஒரு படத்தின் திரைக்கதை அதன் முதன்மைப் பாத்திரம் யாரோ அந்தப் பாத்திரத்தைச் சுற்றித்தான் எழுதப்படும். வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் படங்களில் பல முதன்மைப் பாத்திரங்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே இலக்கோ, வெவ்வேறு இலக்குகளோ இருக்கும். ஆங்கிலத்தில் இதற்கான சிறந்த உதாரணம் 'அவெஞ்சர்ஸ்'. ஒருவரோ, பலரோ... இந்த முதன்மைப் பாத்திரங்களைத் தவிர திரைக்கதையின் மற்ற எல்லா பாத்திரங்களுமே படத்தின் வெவ்வேறு அங்கங்கள்தானே ஒழிய அவர்கள் முதன்மை பெறுவதில்லை.அந்த வகையில், ஓர் ஆண் முதன்மை பெறும் படத்தில் வரும் பிற ஆண்கள், பெண்கள், என எல்லோருமே சார்புப் பாத்திரங்கள்தாம்.

இது பெண் முதன்மைப் பெறும் படத்துக்கும் பொருந்தும். ஆனால், இந்தச் சார்புப் பாத்திரங்கள் எல்லோரும் அந்தத் திரைக்கதையில் எப்படிப்பட்ட முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் கலை நேர்மை வெளிப்படும். இங்கே பல படங்களில் அதிலிருக்கும் பெண் கதாபாத்திரத்தை அப்படியே நீக்கிவிட்டாலும் படத்தின் ஓட்டத்தை எந்த விதத்திலும் அது பாதிக்காது என்ற அளவில்தான் திரைக்கதைகள் எழுதப்படுகின்றன.

'பேட்ட', 'பிகில்' போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் அவர்களுக்கு ஜோடியாக திரைக்கதையில் இருந்த கதாநாயகி கதாபாத்திரங்கள் எல்லாமே இப்படிப்பட்ட நீர்த்துப்போன நிலையில்தான் இருந்தன. 'பேட்ட' படத்தில் சிம்ரன், த்ரிஷா இருவர் நடித்த கதாபாத்திரங்களை நீக்கிவிட்டாலும் அது கதை மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதுவே 'பிகில்' நயன்தாரா பாத்திரத்துக்கும் பொருந்தும்.

ஒரு கதாநாயகிக்கு எத்தனை காட்சிகள், எவ்வளவு திரைநேரம் ஒதுக்கப்படுகிறது என்பதைவிட, கொடுக்கப்படுவது குறுகிய அளவாக இருந்தாலும் அதில் அந்தப் பாத்திரம் திரைக்கதைக்கு என்ன பங்காற்றுகிறது என்பதே அவசியம்.

முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அந்தப் படத்தில் காஜல் அகர்வாலின் பாத்திரம் தமிழ் சினிமாவின் பொதுவழக்கில் 'ஹீரோயின்' எனக் கூறப்பட்டாலும், படத்தில் அந்த 'ஹீரோ'வின் பயணத்தில் ஒரு சிறிய பகுதிதான்.

எண்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரையில், நீண்ட காலத்துக்கு நகைச்சுவை நடிகர்களுக்கு ஒருவகை விதி இருந்தது. அவர்களுடைய காட்சிகள் படத்திலிருந்து தொக்கி, தனித் தடத்தில் இருக்கும். அவர்களுடைய காட்சிகள் எல்லாம் படத்தின் மூலக்கதை ஓட்டத்துக்குத் தொடர்பில்லாத வண்ணத்திலிருக்கும். பின்னர், சுந்தர் சி, பி.வாசு போன்ற பல இயக்குநர்கள் அந்த தனி 'காமெடிட்ராக்' வழக்கத்தை உடைத்து நகைச்சுவை நடிகரைப் படத்தின் அங்கமாக மாற்றிப் படமெடுக்கத் தொடங்கினர். இப்போது 'காமெடிட்ராக்' முறையே இல்லாமல் போய்விட்டது.

இன்று ஹீரோயின் பாத்திரமும் பல படங்களில் தனி ட்ராக்காகத்தான் இருக்கிறது. ஹீரோவைக் காதலிக்க வேண்டும், படத்துக்குக் கவர்ச்சி சேர்க்க வேண்டும், இறுதியில் வில்லனால் கடத்தவோ கொல்லவோ படவேண்டும் எனப் பல முன் முடிவுகளோடே இங்கே பெண் பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. ஏதோ அவ்வப்போது 'நீலாம்பரி', 'சந்திரமுகி' எனப் பெரும் ஹீரோ படங்களில் பெண் கதாபாத்திரம் முதன்மை பெறுகின்றன. அது எதோவொரு அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது. அதைவிட்டால் காதல் படங்களில் மட்டுமே நடிகைக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.

ஆனால், பெரும்பான்மையான மசாலாப் படங்களில் பெண் பாத்திரங்கள் மற்றுமொரு உதிரி அங்கமாகத்தான் இருக்கின்றனபொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் இப்படிப்பட்ட ஒரு முன்கதை சொல்லப்படும்போது அதில் ஒரு முன்னணி நடிகையை நடிக்கவைத்து அந்தக் கதாபாத்திரம் கொல்லப்படும் காட்சியைப் படமாக்கி பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படவைப்பது வழக்கம்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் அத்தனையும் இருந்தும், கைதி படத்தில் அதைத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ். 'ஒத்த செருப்பு' படத்தின் திரைக்கதைப்படி ஏற்கெனவே அது ஒருவர் மட்டும் நடிக்கும் படம். அதிலும் இதேபோன்ற மறைவகை முன்கதை சொல்லல் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே வலிய திணிக்கப்படும் எந்தக் கதாபாத்திரத்தையும் எந்தப் பார்வையாளரும் விரும்புவதில்லை.

காதல் காட்சிகளிலும், டூயட் பாடல்களில் சலிப்புத்தட்டும் ஓசை இன்றும் எல்லா திரையரங்கிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. திரைப்படங்களின் மீதிருக்கும் எதிர்பார்ப்பு பார்வையாளர்களின் ரசனையும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ஒரு கதைக்கு நாயகி தேவையில்லை என்றால் தேவையில்லைதான். அந்தத் திடமான முடிவு இயக்குநர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டும்.

இங்கே பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் எந்த ஆண் கதாபாத்திரமும் திணிக்கப்படுவதில்லை. அறம், ஜாக்பாட், கோலமாவு கோகிலா, ராட்சசி, கேம் ஓவர், ஆடை என எந்தப் படத்திலும் நாயகன் இல்லை. அந்தக் கதைகளின் முதன்மைப் பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதுவே திரைக்கதைகளில் இருக்கும். அதை ஓர் ஆண் முதன்மை பெறும் படத்தில் ஏன் செய்வதில்லை என்பதே கேள்வி. அப்படியே வைத்தாலும் அந்தப் பாத்திரத்துக்குத் திரைக்கதையில் குறைந்தபட்ச முக்கியத்துவமாவது இருக்க வேண்டுமல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.