டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அடுத்த தலைமுறைக்கு...

உலகப் புகழ் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையில் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை ஓவியமாக வரைந்து, அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உயிர்ப்புடன் எடுத்துச் செல்ல... 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:49 am

க. தங்கராஜா

உலகப் புகழ் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையில் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை ஓவியமாக வரைந்து, அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உயிர்ப்புடன் எடுத்துச் செல்ல உதவி வருகிறார் கோவையைச் சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ்.

குஜராத் மாநிலத்தில் தொடங்கி, கன்னியாகுமரி வரை அரபிக் கடலோரம் சுமார் 1,600 கி.மீட்டருக்கு நீண்டிருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. உலக அளவில் பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கியத்துவம் கொண்டிருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. அரிதினும் அரிதான உயிர்ச்சூழல் மையமாக இருப்பதால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த மலைத் தொடர் இந்திய நிலப்பரப்பில் 6 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், இந்திய பல்லுயிர்ப் பெருக்கத்தில் 30 சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

5 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 508 வகை பறவைகள், 176 வகை இருவாழ்விகள் உள்ளன. இங்குள்ள 654 வகையான மரங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உலகின் வேறு எந்த பகுதியிலும் காண முடியாது.

தென்னிந்திய நதிகளின் தாய்மடியாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலை, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பெரிய பசுமைப் பரப்பில், இன்னும் மனிதர்களின் பாதம் படாத இடங்களும் உள்ளன. அதேநேரம் பாதம் பட்ட இடங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளினால் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலைப் பாதுகாக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில்தான் அழியும் நிலையில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இருவாழ்விகளை தனது தூரிகையால் ஆவணப்படுத்தியிருக்கிறார் ஓவியர் ராகவன் சுரேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்து, சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்ற ராகவன் சுரேஷ், திரைத்துறை, விளம்பரம், அரசுத் துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது கோவையில் உள்ள இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வகத்தில் ஓவியராகப் பணியாற்றி வருகிறார்.

தனது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடிவு செய்த இவர், அழியும் நிலையில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள், பறவைகளை ஆவணப்படுத்தத் திட்டமிட்டார். இதையடுத்து, 2018-இல் தொடங்கி 4 ஆண்டுகள் ஆராய்ச்சியாளர்கள், வன ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் வனத்தில் பயணம் செய்து, தாவரங்கள், விலங்குகளைக் கண்டறிந்து அவற்றை ஓவியமாகத் தீட்டி வருகிறார்.

இவரின் ஓவியங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமானவை. தான் காணும் தாவரம் எந்த உயரத்தில் இருந்தது, அதன் இலைகள், கிளைகள், நரம்புகள், வண்ணம் முதற்கொண்டு அப்படியே பதிவு செய்து வருவதுதான் இதன் சிறப்பாகும். 5 செ.மீ. உயரமே கொண்ட ஒரு தாவரத்தை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்து அதை பதிவு செய்திருகிறார்.

மேலும் அந்த ஓவியத்தின் அருகிலேயே அந்தத் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் எந்த பகுதியில் உள்ளது, அது எப்போது பூக்கும், அதன் வாழ்நாள் உள்ளிட்ட அதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படியே அவற்றின் அறிவியல் பெயரையும், தமிழ் பெயரையும் இணைத்திருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் 51 விலங்குகள், பறவைகள், இருவாழ்விகளின் உருவங்களை வரைந்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சாம்பல் நெற்றி பச்சைப் புறா, சாம்பல் இருவாட்சி, மலபார் காட்டுக்கீச்சான், கருப்பு ஆரஞ்சு ஈபிடிப்பான், மலை இருவாட்சி, சோலை மந்தி, நீலகிரி மந்தி, வயநாடு சிரிப்பான், பழனி சிலம்பன், மலபார் புனுகுப்பூனை, சருகு மான், வரிக்கழுத்துக் கீரி உள்ளிட்டவையும் அடங்கும் என்று கூறுகிறார்.

சுரேஷ் மேலும் கூறியதாவது:

"" அழியும் நிலையில் உள்ள 138 ஆர்க்கிட் வகை தாவரங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன். ஒரு சில ஓவியங்களை வரைய இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்டது. வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் எனது சொந்த செலவிலேயே பிரேம் செய்து பாதுகாத்து வருகிறேன்.

இவற்றை இளைய தலைமுறையினருக்கும் மாணவர்களுக்கும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அடுத்ததாக அந்தமான் தீவுகளில் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகளை ஆவணப்படுத்தி வருகிறேன். விரைவில், நாடு முழுவதும் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகளை ஆவணப்படுத்துவேன்'' என்றார்.


படங்கள்: வீ.பேச்சிக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.