டி.எம்.எஸ்ஸோடு இசைப் பயணம்!
தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் பின்னாளில் தங்கள் திரையுலக வெற்றியை அரசியலுக்கும் முதலீடாக்கிக்கொண்டு மக்களை சந்தித்தனர்.


தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் பின்னாளில் தங்கள் திரையுலக வெற்றியை அரசியலுக்கும் முதலீடாக்கிக்கொண்டு மக்களை சந்தித்தனர். இதில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றி அபாரமானது. அந்த வெற்றியில் அவரது திரையுலக சகாவான டி.எம்.செளந்தரராஜனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. உண்மையில் திராவிட இயக்கத்தின் நீட்சியாகக் கருதப்படும் அதிமுக என்ற கட்சி மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்பட்ட, வெளியுலகம் தெரியாத ஆளுமை என்றும் செளந்தரராஜனை குறிப்பிடலாம்.
மதுரையில் இசைப்பின்னணி அல்லாத ஒரு எளிய குடும்பத்தில் 1923-ஆம் ஆண்டு பிறந்த செளந்தரராஜன் பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப்பயிற்சி பெற்றவர். இளம்வயதில் கோவில் பஜனைகள், சிறுசிறு கச்சேரிகள் என தம் இசைஞானத்தை இன்னும் பெருக்கிக்கொண்டார்.
அரை நூற்றாண்டு கடந்தும் தமிழர்களின் செவிகளின் இன்றும் இசைராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார் டி.எம்.செளந்தரராஜன். இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு "இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவரான விஜயராஜ். தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் செய்திப்பிரிவுதான் அவரது முதல் அனுபவம். இந்த அடிப்படைதான் தனி ஆளாக ஒரு மாபெரும் திட்டத்தை எடுத்துச் செய்ய துணிவைத் தந்தது என்று சொல்கிறார் விஜயராஜ்.
""சாதனையாளரோ, சாமானியனோ யாராக இருந்தாலும், ஒருவர் உயிரோடு இருக்கும்போது, அவரை கொண்டாட மறுக்கிறோம். மறைந்த பிறகு அவரின் புகழைப் பற்றிப் பேசிக் கொள்கிறோம். இதை வாழ்வின் முரணாகவே பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
மிகப் பெரும் சாதனையாளரை நாம் கொண்டாடாமல் இருக்கிறோம் என உணர்ந்தேன். அது மட்டுல்லாமல் எனது இளம் பருவத்தில் அவரின் தீவிர ரசிகன் நான். அதுவரை வெறும் ரசிகராக இருந்த நான் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
ஒருநாள் அவரை வீட்டில் சந்தித்து இதுபற்றி சொன்னபோது, மறுத்துவிட்டார். பல நாள்கள் தொடர்ந்து வற்புறுத்தலுக்குப் பின்னர்தான் ஒப்புக்கொண்டார். மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறோம் என்பதால் சிறப்பானதொரு தொடராக இருக்கவேண்டும் என ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக்கொண்டேன்.
எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த கதை எங்கேயும் இல்லை. டி.எம்.எஸ்ஸின் அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தத் தொடரைப் பிரிக்கவே முடியாது. அப்படியே திட்டமிட்டோம். அதன் படி வந்திருக்கிறது.
தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் டி.எம்.எஸ்ûஸ ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா... இப்படி எந்தப் பாராட்டுக்கும் தகுந்தவர் அவர்.
டி. எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று. அதை செய்ததில் எனக்கு மகிழ்ச்சி.
கடந்த 2001-ஆம் ஆண்டு மதுரையில் அவரது பிறந்த வீட்டில் முதற்காட்சி எடுக்கப்பட்டது. அவரது கச்சேரிகள், மற்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு இடையுறு இன்றி படப்பிடிப்பை வைத்துக்கொண்டேன். டி.எம்.எஸ் . பிறந்த வீடு முதல் அவர் இளம்வயதில் கச்சேரிகள் செய்த இடங்கள் முதல் பாடல் பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்னையில் அவர் வாழ்ந்த இடங்கள்.... திரையுலக வாழ்வில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இடங்கள் என அத்தனை இடங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று அவரை பேட்டி எடுத்து பதிவு செய்திருக்கிறோம். லதா மங்கேஷ்கர், சிவாஜி குடும்பத்தினர், நாகேஷ், எஸ்.எஸ்.ஆர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், இளையராஜா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பி.சுசீலா, ஜானகி, சோ என திரையுலகின் அத்தனை ஆளுமைகளுடனும் அவரை சந்தித்து உரையாட வைத்து பதிவு செய்திருக்கிறோம்.
இந்தத் தொடர் டி.எம்.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் திரையுலக வரலாற்று ஆவணமாகவும் இருக்கும். இதுவரை காண கிடைக்காத பாடல்களின் விடியோக்களையும் இதில் இணைத்துள்ளோம்.
150 வாரங்கள் ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2001-ஆம் ஆண்டு எடுக்கத்துவங்கி 2013-ஆம் ஆண்டுவரை சுமார் 13 ஆண்டுகள் இதற்கென உழைத்திருக்கிறோம். சமயங்களில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தபோது இந்தத் திட்டத்தை கைவிடும்படி பலர் யோசனை சொன்னார்கள். ஆனால் தளராமல் போராடி எடுத்து முடித்திருக்கிறேன். மக்களின் பார்வைக்கு விரைவில் வரும்.'' சாதித்த தெம்பில் பூரிக்கிறார் விஜயராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...