திரைக்கதிர்


இதுவரை 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளாôர் இளையராஜா. திரைப்படம் தவிர்த்து, இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிகல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது, கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆல்பம் 'ஹவ் டூ நேம் இட்'. வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் பத்து தனி தனி இசை தொகுப்புகள் இருந்தன. இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
------------------------------
சரத்குமாரின் திரைவாழ்வில், அவரது 150-ஆவது படமாக இப்படம் உருவாகிறது 'தி ஸ்மைல் மேன்'. அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது.
சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். 'மெமரீஸ்' படப்புகழ் ஸ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
'8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த நடிகர் வெற்றி நடிப்பில் 'மெமரீஸ்' படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் கூட்டணி இப்படத்தை இயக்குகின்றனர். வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
--------------------------------
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜ் தனது குருநாதர் இயக்குநர் ராமின் ஆசீர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில், இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு மற்றும் திரையுலகத்தைச் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களோடு இயக்குநர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இல்லத்திற்குச் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்வின்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.
------------------------------
'வலிமை' படத்தின் பிரமாண்ட வெற்றியில் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார் ஹுமா குரேஷி. அவர் பேசும் போது...''அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் என்னை வியப்படையச் செய்துள்ளது. இந்நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அஜித்துடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்தை, எனக்கு பரிசளித்த அஜித், போனி கபூர் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகியோருக்கு நன்றி. மேலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு னக்குஒருமுழுமையான ஒரு நல்ல அனுபவத்தை அளித்துள்ளது'' என்றார்.
------------------------------
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தனது தந்தையின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே சர்வதேச பேட்மிண்ட்டன் வீரர். சர்வதேசப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்திய அரசின் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.
இது குறித்து தீபிகா படுகோனே... 'இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பே, இந்தியாவை உலக வரைபடத்தில் வைத்த இந்திய விளையாட்டு வீரர்களில் ஒருவர் எனது தந்தை. குறைந்த வசதிகளுடன் விளையாட்டு பயிற்சி பெற்று சர்வதேச அளவில் விளையாடியவர். இன்று இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் வசதிகள் அவருக்கு கிடைத்திருந்தால், இன்னும் உயர்ந்த இடத்திற்குச் சென்றிருப்பார். அவரது வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...