திரைக் கதிர்
"சர்கார்' படத்துக்குப் பின் விஜய் நடிக்கவுள்ள படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் விஜய்யின் 63-ஆவது படமாக உருவாகவுள்ளது.


"சர்கார்' படத்துக்குப் பின் விஜய் நடிக்கவுள்ள படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் விஜய்யின் 63-ஆவது படமாக உருவாகவுள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாகியுள்ளன. அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலாவதாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தொடங்கியுள்ளது. விவேக், யோகிபாபு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே "வில்லு' படத்தில் விஜய் - நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்தனர். "சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நயன்தாரா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - நயன்தாரா இணையும் 3-வது படம் இது. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார். இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளார் விஜய். விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் "விஸ்வாசம்' படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தற்போது இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பிங்க்' படத்தின் ரீமேக் தான் இது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழுவினர் எதையுமே உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், "பிங்க்' படத்தின் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சூஜித் சர்கார் அளித்துள்ள பேட்டியில்.... ""பிங்க் தமிழில் உருவாகப் போகிறது. நான் அதை இயக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். படம் தயாரானதும் என்னிடம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழில் பிங்க் படக்குழுவினர் அதில் செய்துள்ள மாற்றங்களையும் மதிக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் "பிங்க்' ரீமேக்கில் அஜித் - வினோத் - போனி கபூர் இணையவுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
மறைந்த ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை, "என்.டி.ஆர்: கதாநாயகுடு' சினிமாவாக உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை கிரிஷ் எழுதி இயக்குகிறார். தமிழில் சிம்பு, பரத் நடிப்பில் வெளியான "வானம்' படத்தை இயக்கியவர் இவர். இப்படத்தில் என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கிறார். சரோஜாதேவியாக அனுஷ்கா, ஸ்ரீதேவியாக ரகுல் பிரீத் சிங், என்.டி.ஆர் மனைவி பசவதாரமாக வித்யாபாலன், சந்திரபாபு நாயுடுவாக ராணா, நடிகர் கிருஷ்ணாவாக அவரது மகன் மகேஷ் பாபு, டோலிவுட் நடிகை விஜயாவாக ஸ்ரேயா நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரமான சந்திரபாபு நாயுடு மனைவி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சு இருந்து வந்தது. தற்போது அந்த இடத்துக்கு மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தொடர்பான காட்சிகள் விரைவில் எடுக்கப்படவுள்ளன.
தென்னிந்திய சினிமாக்களில் இலியானாவுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர், திடீரென்று பாலிவுட் மோகத்தில் ஹிந்தியில் நடிக்கச் சென்றார். ரன்பீர் கபூருடன் அவர் நடித்த முதல்படம் "பர்பி' சூப்பர் ஹிட் ஆனது. அதேவேகத்தில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். ஆனால் பாலிவுட் ஹீரோயின்களின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினார். பட வாய்ப்புகளும் மெல்ல குறைந்தன. மும்பையிலேயே வீடு எடுத்து தங்கிப்பார்த்தார். அப்போதும் பட வாய்ப்பு குவியவில்லை. இதில் சோர்வடைந்த இலியானா மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினார். 6 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் "அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் ரவி தேஜா ஜோடியாக நடித்தார். தென்னிந்திய ரசிகர்களுக்கு குண்டான உடல்தோற்றம்தான் பிடிக்கும் என்பதால் ஸ்லிம்மாக மாற்றியிருந்த தனது தோற்றத்தை மெனக்கெட்டு பப்ளிமாஸ் தோற்றத்துக்கு மாற்றினார். திரைக்கு வந்த "அமர் அக்பர் ஆண்டனி' எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. இப்படம் வெற்றி அடைந்தால் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிப்பேன் என்று முன்னதாக பேட்டி அளித்திருந்த இலியானா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்கிறார். ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், திருமணம் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
"நாடோடிகள்' படத்தின் மூலம் பரவலான தமிழ் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர் அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர், அந்த சுவடுகளே தெரியாமல் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி நடிப்பதில் தேர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். "ஈசன்', "வீரம்', "குற்றம் 23', "விழித்திரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவருக்கு, தெலங்கான மாநில தேர்தல் ஆணையம் புது கௌரவம் ஏற்படுத்தி தந்துள்ளது. தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தெலங்கானா மாநில தேர்தல் ஆணையமும், தெலங்கானா மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து, அபிநயாவை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக நியமித்துள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு சென்று, அங்கு வசிக்கும் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து, தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அபிநயா ஏற்படுத்துவார். இந்திய அளவில் நடக்கும் தேர்தல்அனைத்திலும் அபிநயாவையே தூதராகப் பயன்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...