/

உலகின் முதல் ரயில் மருத்துவ நிலையம்!

இந்தியாவின் முதல் ரயில் மருத்துவ நிலையம் 1991 ஜுலை 16 -இல் மும்பை விக்ட்டோரியா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:53 pm

சுதந்திரன்

இந்தியாவின் முதல் ரயில் மருத்துவ நிலையம் 1991 ஜுலை 16 -இல் மும்பை விக்ட்டோரியா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது. 
மருத்துவவசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக இந்த பயணிக்கும் "ரயில் மருத்துவமனை' தொடங்கப்பட்டது. இந்த நடமாடும் மருத்துவ நிலையத்திற்கு "லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்' என்றும் பெயர் வைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக நகரங்களுக்கு வந்து போக வாய்ப்பும், வசதியும், இல்லாத கிராம மக்களுக்கு தரமான பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் உட்பட பல மருத்துவவசதிகள் கிடைக்க இந்த "லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்' உதவி வருகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சை கூட இந்த ரயில் மருத்துவமனையில் கிடைக்கிறது, 
மும்பையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான "இம்பாக்ட் இந்தியா' நிறுவனமும் இந்திய ரயில்வேயும் சேர்ந்து இந்த ரயில் மருத்துவ மனையை நடத்தி வருகின்றன. இந்திய ரயில், மூன்று பெட்டிகளை கொடுக்கும். தவிர தண்ணீர் வசதி, மின்சாரம் அனைத்தும் வழங்கி ரயிலையும் இயக்கும். "இம்பாக்ட் இந்தியா' மருத்துவ சேவைகளை நல்க டாக்டர்கள், செவிலியர்கள், மருந்துகளை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி, சுமார் இருபத்தேழு ஆண்டுகளாக இந்திய கிராமங்களில் வசிக்கும் பன்னிரண்டு லட்சம் அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை "லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்' நல்கியுள்ளது. 
"லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்'ஸின் நிரந்தர ஊழியர்களாக மருத்துவர்கள் அல்லாத இருபது பேர் உள்ளனர். கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பும் டாக்டர்கள் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது ரயில் மருத்துவ நிலையத்துடன் கிராமங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதம் தங்கி மருத்துவ முகாம்கள், நோய் சிகிச்சைகள் ரயில் பெட்டிகளிலேயே வழங்கப்படுகின்றன. கண் பார்வைக் கோளாறுகள், எலும்பு முறிவு ...உதடுகளைச் சரி செய்தல், பிளாஸ்டிக் சர்ஜரி, போலியோ, காக்காய் வலிப்பு.... இப்படி எல்லா வகை உடல்நல பிரச்னைகளுக்கும் சிகிச்சைகளும் தரப்படுகின்றன. 
இப்போதைக்கு ஒரு ரயில் வண்டிதான் இந்திய கிராமங்களை நோக்கி ஊர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு ரயில் வண்டியை இன்னும் ஆறு மாதத்திற்குள் வழங்குவதாக இப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி தந்துள்ளார். இரண்டாவது ரயில் மருத்துவமனை, வடகிழக்கு மாநிலங்களுக்காக அனுப்பப்படும். 
இந்த ரயில் மருத்துவ நிலையத்தில் உலகத் தரமிக்க ஆய்வுக் கருவிகள், பரிசோதனை நிலையம் அனைத்தும் உண்டு. மருத்துவர்களும், இதர ஊழியர்களும் தங்கவும் வசதிகள் உண்டு. உணவு வசதிகளும் இருக்கின்றன. பெட்டிகளில் "வைஃபை' வசதி உள்ளதால், அவசர தருணங்களில் நகரத்தில் இருக்கும் தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனையும் பெறப்படுகிறது. 
உலகிலேயே முதல் முதலாகத் தொடங்கப்பட்ட இந்த ரயில் மருத்துவமனை, பல நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது. இந்தியாவைப் பார்த்து சீனா நான்கு ரயில் மருத்துவமனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ், கம்போடியாவில் படகுகளில் மருத்துவ மனைகளைத் தொடங்கி சேவைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். கேரளத்தில் நீரில் பயணிக்கும் மருத்துவமனைகள் உண்டு.
"லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்'ஸின் வெற்றியைத் தொடர்ந்து, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், இந்திய மக்களிடம் விஞ்ஞான அறிவு மேம்படவும் ரயிலில் கண்காட்சி அமைத்து இரண்டு ரயில்கள் இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.