/

திரைக் கதிர்

குறைந்த பட்ஜெட்... அதிக வசூல்... இதுதான் மலையாள சினிமாவின் தனித்துவம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:50 am

ஜி. அசோக்

குறைந்த பட்ஜெட்... அதிக வசூல்... இதுதான் மலையாள சினிமாவின் தனித்துவம். ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாம் கலந்த ஜனரஞ்சகம் என்பதற்கே பேச்சு இல்லாமல், கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் உருவாக்கப்படுவதுதான் மலையாள சினிமாவின் இயல்பு. இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள படம் "புலி முருகன்.' படத்துக்குச் செலவான தொகையை விட பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளதாக படக்குழுவினரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை பல்வேறு மொழிகளில் பெறுவதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. தமிழிலும் போட்டி நிலவி வந்த நிலையில், மலையாளத்தில் படத்தை உருவாக்கிய முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது. மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் வசனத்தை ஆர்.பி.பாலா எழுதியுள்ளார். கதை மற்றும் திரைக்கதை உதயகிருஷ்ணா. இயக்கம் வைஷாக். தெலுங்கில் "மன்னியம் புலி' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழில் "புலி முருகன்' என்ற பெயரிலேயே வெளியாகவுள்ளது இப்படம்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையின் பதிவாக உருவாகி வரும் படம் "முப்பரிமாணம்.' சாந்தனு, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, ரவிபிரகாஷ், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அதிரூபன். ராசாமதியின் ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கதிர், நிஷா ஆகிய இரு கதாபாத்திரங்களின் பள்ளிப் பருவத்தில் இருந்து 22 வயது வரை நடக்கும் சம்பவங்களே திரைக்கதை. பொதுவாக பள்ளி, கல்லூரி என்றால் காதல் மட்டுமே பிரதானமாக இருக்கும் திரைக்கதை போன்று இல்லாமல், அதிலுள்ள உளவியலைப் படம் பிடிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னணி இசைக்கு மட்டும் 55 நாட்கள் ஆனது. ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன்பு பின்னணி இசைக்கு இத்தனை நாள்கள் எடுத்துக் கொண்டதில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை இதில் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒரு பாடலில் 27 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார், ஆனால், நடிக்கப் போவது தமிழ்ப் படத்தில் அல்ல. தெலுங்கு படத்தில்... த்ரி விக்ரம் எழுதி இயக்கும் இப்படத்துக்காக 9 ஆண்டுகளுக்குப் பின் நடிக்க இருக்கிறார். பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் குஷ்பு. பவன் கல்யாணுக்கு வில்லியாக குஷ்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது. இப்படம் மூலம் தமிழிலும் கால் பதிக்க உள்ளார் பவன் கல்யாண்.

பொதுவாக ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. உண்மையான வயது குறித்து ரசிகர்களுக்குத் தெரிய வந்தால் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்ற எண்ணம் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. படங்களில் கூட மனைவி, குழந்தைக்கு அம்மா போன்ற வேடங்களைத் தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வரும் வாய்ப்புகளை அநேக ஹீரோயின்கள் உதறி விடுகின்றனர். திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்த பிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். விதி விலக்காக தனது வயதுகேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் ஸ்ரேயா. ""சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. எந்த வயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.

சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவுக்காக "துருவ நட்சத்திரம்' என்றொரு கதையை உருவாக்கினார் கௌதம் வாசுதேவ்மேனன். இப்படத்தில் சூர்யா நடிப்பதாகவும் ஒப்பந்தமானது. ஆனால், இப்படத்திலிருந்து திடீரென்று விலகினார் சூர்யா. கதையம்சத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளால் இந்தப் படம் அப்படியே நின்று போனது. இதையடுத்து அஜித்துக்கு இக்கதை சொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வேறு கதையில் நடித்தார் அஜித். அதுதான் "என்னை அறிந்தால்' என்ற பெயரில் உருவானது. இந்நிலையில் "துருவ நட்சத்திரம்' கதையை தூசு தட்டி எடுத்தார் கௌதம் வாசுதேவ்மேனன். விக்ரம் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையடுத்து இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் "என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம் வாசுதேவ்
மேனன், இதைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்' படத்தை இயக்குகிறார். தற்போது விஜய் சந்தர் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வரும் விக்ரம், அப்பட பணிகள் முடிந்ததும் இப்படத்துக்கு திரும்புகிறார். ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.