/

திரைக் கதிர்

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வித்தையடி நானுனக்கு.'

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:23 pm

ஜி. அசோக்

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வித்தையடி நானுனக்கு.' இரு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படமாக இது தயாராகி வருகிறது. திரைக்கதை எழுதி இயக்கி கதையின் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார் கே.பி.ராமநாதன். அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பெண்ணான செளரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். த்ரில்லர் பாணியில் அமைக்கப்பட்டுள்ள இத்திரைக்கதையில் காதலுக்கும், நகைச்சுவைக்கும் பிரதான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரு வேறு கதாபாத்திரங்களின் விருப்பத்துக்கும், வெறுப்புக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியதுதான் கதை. மகாகவி பாரதியின் ""பாயும் ஒளி நீ எனக்கு...'' பாடல் கதையின் ஒரே பாடலாக இடம் பெறுவது சிறப்பு.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்த பின், அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வந்தார் மோகன்லால். அதிலும் கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பார். இந்

நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கௌதமி. தெலுங்கில் "மனமன்தா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு தமிழில் "நமது' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.  விஸ்வநாத்  - ஹனிஷா ஆம்ரோஷ் கதையின் மற்றொரு ஜோடியாக நடிக்கிறார்கள். நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.  மூன்று மொழிகளிலும் சந்திரசேகர் ஏலட்டி எழுதி இயக்குகிறார். ரஜினி கோரப்பட்டி தயாரிக்கிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த படம் "சாட்டை.' கல்வியின் முக்கியத்துவத்தையும், கற்றல் மற்றும் கற்றுக் கொடுத்தல் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளையும் உணர்த்தியவிதத்தில் ரசிகர்களிடையே பரவலான பாராட்டுகளைப் பெற்றது இப்படம். அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, யுவன், மகிமா நம்பியார், சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. "சாட்டை' படத்தை தயாரித்திருந்த ஷாலோம் ஸ்டுடியோஸ் "சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமான "சாட்டை 2' படத்தையும்  தயாரிக்கிறது. "ஆடுகளம்', "பொல்லாதவன்' படங்களில் நடித்துள்ள கிஷோர் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கௌதம்.

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பாக ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் "வில்லாதி வில்லன் வீரப்பன்' என்ற பெயரில் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் வீரப்பனாக சந்தீப் பரத்வாஜும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக உஷா ஜாதவ்வும் நடித்துள்ளனர்.  கடந்த சில வாரங்களாகச் சென்னையில் இப்படத்துக்கான புரமோஷன்களில் பேசி வந்தார் ராம்கோபால் வர்மா. ""இரண்டு மாநில காவல்துறைக்கும், அரசுகளுக்கும் பெரும் சவாலாக இருந்த வீரப்பனின் வாழ்வில் கடைசி இரண்டு வருடங்கள் நடந்த சம்பவங்களும், அவரைக் காவல்துறையினர் திட்டமிட்டு எப்படி என்கவுண்டர் செய்தார்கள் என்பதும்தான் இந்த "வில்லாதி வில்லன் வீரப்பன்.' கடந்த இரண்டு வருடங்கள் பல உண்மைகள், கதைகள், தேடல்கள் எனக் கேட்டறிந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். வீரப்பன் குறித்த தேடலின் போது எனக்குப் பல விஷயங்கள் நம்ப முடியாமலும், ஆச்சரியமாகவும் இருந்தன. இந்த ஆபரேஷனில் பங்கேற்ற காவலர்கள், அவர்களின் திட்டங்கள் என அனைத்தையும் இப்படம் விளக்கப் போகிறது'' என்றவர், ""நடிகர் ரஜினிகாந்தை கடத்துவதுதான் வீரப்பனின் திட்டமாக இருந்தது. இறுதியில் அதில் கன்னட நடிகர் ராஜ்குமார் சிக்கி கொண்டார்'' என்ற சர்ச்சையையும் முன் வைத்தார் வர்மா.

சமந்தாவை திருமணம் செய்யப் போகிறவர்
சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதும், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து வருகிறவர் என்றும் இணையதளங்களில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன. ஜனவரிக்குப் பின் திருமணம் என்று சமந்தாவே ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து சமந்தாவை தொடர்பு கொண்டால் அவர் பேச மறுத்து விட்டார். அவரது அலுவலக வட்டாரத்தில் விசாரித்தால், ""சமந்தாவின் திருமணம் குறித்துப் பரவி வரும் அத்தனை செய்திகளும் வதந்தி. எந்த மீடியாவிலும் சமந்தா தனது திருமணம் குறித்துப் பேசவில்லை. தற்சமயம் சமந்தா தனது பட வேலைகளில் இயங்கி வருகிறார்.   திருமணம் இவ்வளவு சீக்கிரம் இல்லை. அப்படி திருமணம் எனில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வரும் இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் தந்து விட்டார். அந்தப் படங்கள் முடிந்த பின்தான் திருமணம் குறித்து அவர் அறிவிப்பார்'' என தெரிவித்தனர். சமந்தா தற்போது தெலுங்கில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.