திரைக் கதிர்
அரசியல் சர்ச்சைகளுக்குப் பின் வடிவேலுவின் திரைப் பயணம் வெகுவாக தடைப்பட்டது. காத்திருந்தும் கதை சொல்ல ஆளில்லாத நிலையில் அமைதி காத்தார்.


அரசியல் சர்ச்சைகளுக்குப் பின் வடிவேலுவின் திரைப் பயணம் வெகுவாக தடைப்பட்டது. காத்திருந்தும் கதை சொல்ல ஆளில்லாத நிலையில் அமைதி காத்தார். "தெனாலிராமன்', "எலி' என கதாநாயகனாக அவதரித்த படங்களும் கை கொடுக்காத நிலை. இப்போது மீண்டும் காமெடியனாக களம் இறங்கி விட்டார். "ரோமியோ ஜூலியட்' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "கத்திச்சண்டை.' இப்படத்தில் பிரதான நகைச்சுவைப் பகுதிகளை அலங்கரிக்கப் போகிறார் வடிவேலு. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்காக அவருடன் முதன் முறையாக ஜோடி சேருகிறார் தமன்னா. வடிவேலுவுக்குத் துணையாக காமெடி ஏரியாக்களில் கை கோக்கிறார் சூரி. இப்படத்தின் துவக்க விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். சுராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய சினிமாக்களில் நடன இயக்குநராக கவனம் ஈர்ப்பவர் ஸ்ரீதர். நடன பாணியில் தனக்கென தனி பாணியை உருவாக்கி ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்ற ஸ்ரீதர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். "சாவடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் ஸ்ரீதர். இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பெருகி வருகிற தொழில்நுட்பங்கள், என்னென்ன கலாசார, பண்பாடு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெறாத மோட்டார் சைக்கிள் பந்தயங்களின் பின்னணியில் இதன் கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்று திகழும் படத் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த புது முயற்சி ஆன்லைன் வெளியீடு. இளம் கலைஞர்கள் தங்களுக்கான கனவுகளை எட்டிப் பிடிக்கும் விதத்தில் அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களின் படைப்புகளை ஆன் லைனில் வெளியிடுகிறது திருக்குமரன் நிறுவனம். இதன் முதல் கட்டமாக, அம்சத் மற்றும் லக்ஷ்மி பிரியா நடித்துள்ள "இஃக்லூ' எனும் படத்தை வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன. ஸ்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ & ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரித்து பரத்மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பிரசன்னா. கலை இயக்கம் விஜய் ஆதிநாதன்.
உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகி வரும் படம் "எல்லாமே நீதான்.' மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை புதுமுகம் கே.எஸ்.சிவா இயக்கி நடிக்கிறார். நமரதா, நட்சத்திரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜிந்தா, ஜெயமணி. சின்ராசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி இப்படம் உருவாகி வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
"தெறி' படத்தையடுத்து விஜய் தனது 60-ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், கோடை விடுமுறையாக வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜய். தீபாவளி வெளியீடாக இப்படம் திட்டமிடப்பட்டுள்ளதால், விஜய் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுக்கவுள்ளது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்துக்கான தயாரிப்பு நிறுவனத்தை முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. விஜய்யின் கால்ஷீட்டுக்காக பலரும் காத்திருக்கும் நிலையில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்துக்கான கால்ஷீட்டை தர இருப்பதாக விஜய் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...