ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூர்யா வர்த்தம் என்ற தலைவ−!
எனக்கு மைக்ரைன் சைனஸ் தலைவலி இருக்கிறது. வலி வந்தால் நெற்றி புருவத்தில் மாறி மாறி வலிக்கும். வலி அதிகமானால் வாந்தி வந்து விடும். இது கடந்த 12 ஆண்டுகளாக உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?


எனக்கு மைக்ரைன் சைனஸ் தலைவலி இருக்கிறது. வலி வந்தால் நெற்றி புருவத்தில் மாறி மாறி வலிக்கும். வலி அதிகமானால் வாந்தி வந்து விடும். இது கடந்த 12 ஆண்டுகளாக உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?
-ச.சீனிவாஸன் கிருஷ்ணா, கோவில்பட்டி.
ஸூஸ்ருத ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் தலைவலி உபாதைக்கான தீர்வுகள் பற்றி மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
வெறும் வாயுதோஷத்தினுடைய ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில், இரவில் பச்சைப்பயிறு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றை காரமும் சூடான வீர்யமும் கொண்ட மிளகு, சீரகம், ஓமம், பட்டை போன்றவற்றுடன் கலந்து வேக வைத்து கஞ்சியாக்கி, நெய் கலந்து சாப்பிட்டு, அதன் பிறகு, சூடான பால் அருந்த வேண்டும் என்று காணப்படுகிறது. அதுபோலவே, இரவில் பாலுடன் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுவதும், எள்ளை அரைத்து உருண்டையாக்கிச் சாப்பிட்டு, மேலே சூடான பால் அருந்துவதும் நலமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்புறமாகச் செய்யும் தாரசேகா எனப்படும் சிகிச்சைமுறை மிகவும் பிரசித்தமானது. வாயுவை மட்டுப்படுத்தும் தசமூலம் எனும் பத்து மருந்துகளின் வேரை, பாலுடன் நன்றாகக் காய்ச்சி, அவற்றின் சத்து, பாலில் நன்றாக இறங்கியதும் தாரையாக நெற்றியில் இளஞ்சூடாக விடும் முறையால் தலைவலி நன்றாகக் குறையும். வரணாதி க்ருதம் எனும் நெய் மருந்தை சிதோபலாதி எனும் இனிப்பான சூரண மருந்துடன் குழைத்து இரவு படுக்கும் முன் சாப்பிட்டால், தங்களுடைய தலைவலி நன்றாகக் குணமாவதற்கு வாய்ப்பிருக்கிறது. பலா தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாகத் தலையில் அரை-முக்கால் மணிநேரம் ஊற வைத்து, சூடு ஆறிய தண்ணீரில் காலையில் குளித்து வருவதும் நலமே.
"தலப்பொதிச்சல்' என்றொரு சிகிச்சை முறை இருக்கிறது. கொட்டம், வேப்பம் விதை, ரேவல் சீனிக்கிழங்கு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, பாலுடன் மைய அரைத்து, நெற்றி மற்றும் உச்சந்தலையில் பற்று இடும் இந்த சிகிச்சை முறையால், தலைக்கு சீரான அளவில் ரத்த நாளங்களின் வழியே ரத்த ஓட்டம் பெருகி, பிராண வாயுவின் வருகையால் மூளைத் திசுக்கள் சுறுசுறுப்படைந்து, தலைவலி உபாதைக்கு நிவாரணத்தை அளிக்கக் கூடியவை.
"ஆவரண வாயு' என்ற ஓர் உபாதையின் மூலமாகவும் தலைவலி வரலாம். அதாவது கபதோஷத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, கனம், நிலைப்பு போன்றவை, வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, நகரும் தன்மை ஆகியவற்றை மூடிமறைத்து அதனுடைய செயல்களை முடக்குவதால் ஏற்படும் தலைவலியானது இந்த ஆவரண வாயுவைச் சார்ந்த வகையாகும். அதில் கபத்தினுடைய குணங்களை அறவே நீக்கக் கூடிய ராஸ்னாதி மற்றும் ஏலாதி சூரணப்பற்று, மூக்கில் விடும் நஸ்யமுறை சிகிச்சை, கண்களில் மை எழுதுதல், தலைக்கும் காதுக்கும் எண்ணெய் விடுதல் மூலிகை மருந்துகளால் வாய் கொப்பளித்தல் போன்றவற்றைச் செய்த பின்னர், விடுபட்டுள்ள வாயுவை சமனம் செய்யும் சிகிச்சை முறைகளால் நல்ல பலனைப் பெறலாம்.
தலைப்பகுதியில் கிருமிகளின் ஆதிக்கத்தினாலும் தலைவலி வரலாம் என்று அந்நூல் கூறுகிறது. மிருகங்களுடைய ரத்தத்தை மூக்கினுள் விட்டு, அதன் வாசனையால், கிருமிகள் கவர்ந்திழுக்கப்பட்டு, அங்கும் இங்கும் நகர்வதால் அவற்றை முருங்கை விதை, வாய்விடங்கம் ஆகியவற்றை பசுவின் சிறுநீர் விட்டு அரைத்து, மூக்கினுள் விடுவதும், புகைப்பதும் செய்வதால் கபம் வெளியேறிவிடும் என்ற ஓர் ஆச்சரியமான சிகிச்சை முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சூர்யாவர்த்தம்' என்ற ஒருவகைத் தலைவலி இருக்கிறது. சூர்யோதயத்தில் தொடங்கும் இந்த வலி சூர்யாஸ்தமனத்தில் விட்டுவிடும். இந்த வகைக்கு, நஸ்யம் எனும் மூக்கினுள் மருந்து விடுதல், தலையில் எண்ணெய் கட்டுதல், நெற்றியில் பற்று இடுதல் ஆகிய சிகிச்சையும், முயல், ஆடு, கோழி போன்ற மாமிச உணவுகளைச் சாப்பிடுதல், பச்சைப்பயிறு, கோதுமை, உளுந்து சேர்த்து கஞ்சியாக்கி பால் நெய்யுடன் சாப்பிடுதல் போன்றவற்றாலும் நிவாரணம் பெறலாம்.
அகஸ்திய ரஸாயனம், தசமூல ரஸாயனம் போன்ற லேகிய மருந்துகள், வரணாதி, இந்துகாந்தம் எனும் நெய் மருந்துகள், தசமூலகடுத்ரயம், குடூச்யாதி எனும் கஷாயங்கள், பலாஹடாதி, மரிசாதி போன்ற தைலங்கள், ராஸ்னாதி, ஏலாதி போன்ற சூரணங்கள், தலைவலிக்கான சிறந்த மருந்துகளாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...