/

திரைக் கதிர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் "நானே என்னுள் இல்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:42 pm

ஜி. அசோக்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் "நானே என்னுள் இல்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போதும், எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் ராகவ லாரன்ஸ் நடிக்கும் "மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் வெளி வந்த "பட்டாஸ்' படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. ""சிறு வயது முதல் எனக்குள் இருந்த இசை ஆர்வம் மேலோங்கி வந்தது. அதன் பாதிப்பில்தான் இப்போது நான் இசையமைப்பாளர். 12 வயதில் இசையமைப்பாளர் மணிசர்மாவின் இசைக் குழுவில் சேர்ந்தது என் முதல் இசை அனுபவம். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றிய சில படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவங்கள்தாம் என்னை இசைக் கலைஞனாக ஆக்கியுள்ளது. இந்த வாய்ப்பு என் வாழ்க்கையில் முக்கியமானது. இனி என் பயணம் இசைக்கானதாக மட்டுமே இருக்கும்'' என்கிறார் அம்ரேஷ்.

பணம் படைத்தவனாகவும், பல தளங்களில் அதிகாரம் மிக்கவனாகவும் வாழும் ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் போராடும் பெண் ஒருவருக்கும் இடையேயான போராட்டங்களை கதைக் களமாக கொண்டு உருவாகி வரும் படம் "பகடி ஆட்டம்.' மரம் மூவீஸ், பரணி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரகுமான், கெüரி நந்தா இருவரும் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். "நிழல்கள்' ரவி, சுதா, ராஜஸ்ரீ, மோனிகா, சஹானா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். இயக்குநர் மகேந்திரனின் உதவியாளர் ராம் கே.சந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

"காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து விதார்த் நடிப்பில் "குற்றமே தண்டனை' என்ற படத்தை இயக்கி வருகிறார் எம்.மணிகண்டன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். டான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரைபல் ஆர்டஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா பாலு, குரு சோமசுந்தரம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். எம்.மணிகண்டனே இப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலையுடன் இணைந்து எம். மணிகண்டன் திரைக்கதை அமைக்கிறார். அனுசரன் படத்தொகுப்பு செய்கிறார். பாலசுப்பிரமணியன், விஜய் ஆதிநாதன் இருவரும் கலை இயக்குநர்களாகப் பணிபுரிகிறார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

"கண்ணெதிரே தோன்றினாள்', "மஜ்னு', "சந்தித்த வேளை', "உற்சாகம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி இயக்கும் படம் "நட்பதிகாரம் 79.' "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த ராஜ் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக "வல்லினம்' அம்ஜத்கான் நடிக்கிறார். ரேஷ்மிமேனன், தேஜஸ்வி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள்.

பள்ளி விடுமுறை காலம் நெருங்கி வருவதால் சிறுவர்களைக் கவரும் விதமாக ஹாலிவுட் படங்கள் வெளிவருவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற "பஸ் 657', அதே பெயரில் வரும் 11-ஆம் தேதி வெளிவருகிறது. தனி மனிதன் ஒருவனால் கடத்தலுக்கு உள்ளாகும் ஒரு பேருந்தைப் பின்னணியாகக் கொண்ட கதை இது. தனி மனிதன் ஒருவர் குறிப்பிட்ட காரணத்திற்காக பேருந்தை கடத்துகிறார். துப்பாக்கி முனையில் கடத்தப்படும் அந்த பயணிகள் என்ன ஆனார்கள்? அந்த தனி மனிதனின் கோரிக்கை என்ன? என்பதை சுவாரஸ்யமாகச் சொல்வதே திரைக்கதை. வெவ்வேறு நோக்கத்திற்காக பேருந்தில் பயணமாகும் பயணிகள் ஒவ்வொருக்குமான சம்பவங்கள் படத்தின் முக்கிய அம்சமாக திகழும். ஹாலிவுட்டின் கிளாசிக் படங்களில் நடித்து கவனம் பெறும் ராபர்ட் டி நீரோ, டீன் மோர்கன், மோரீஸ், டெயிஸன் வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "தி டொர்ன்மென்ட்' படத்தை இயக்கிய ஸ்காட் மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.