ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஸ்டெர்லைசேஷனை விட சிறந்த சுத்திமுறை!
எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆகின்றன. குழந்தைக்கு அடிக்கடி தோலில் சிறிதும் பெரிதுமாக சினப்புகள் தோன்றி மறைகின்றன.


எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆகின்றன. குழந்தைக்கு அடிக்கடி தோலில் சிறிதும் பெரிதுமாக சினப்புகள் தோன்றி மறைகின்றன. குழந்தையைப் பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பதற்கான துணிமணிகளைப் பற்றிய குறிப்புகள் ஆயுர்வேதத்தில் உள்ளனவா? தோல் உபாதை குணமாக என்ன செய்ய வேண்டும்?
- மீனாகுமாரி தஞ்சாவூர்.
மலம், சிறுநீர் ஆகியவை கழித்துள்ள குழந்தைத் துணிகளை ஆறு, குளம் வாய்க்கால்களில் கொண்டுபோய் துவைக்காமல், அதற்கென்றே தனியாக எடுக்கப்பட்டுள்ள தண்ணீரில் அலசி, சோப்பு போட்டுத் துவைக்க வேண்டும். நன்றாகத் துவைத்த பிறகு, துணிகளை சுமார் 10 - 20 நிமிடங்கள் கொதிக்கும் வெந்நீரில் வைத்து, அதன் பிறகு நன்றாகப் பிழிந்து வெயிலில் காய வைக்கவும். ஆனால் இந்த சுத்திமுறைகள் போதுமானவையாகாது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. குழந்தைத் துணிகளை தூபத்தினாலும் சுத்தம் செய்துதான் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. உபதூபிதானி என்று ஆயுர்வேதம் தூபத்திற்கான மூலிகைப் பொருட்களைக் கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறது.
வெண்கடுகு, குக்கில், பூலாம்கிழங்கு, ஆளிவிதை, அசோகப்பட்டை, பெருங்காயம், வசம்பு, பிராமி இலை, அருகம் புல், குங்கிலியம், ஜடாமாஞ்சி, பாம்புச்சட்டை, கடுகு ஆகியவற்றைத் தூள் செய்து, நெய் தடவி தணலில் போட்டு குழந்தைக்கு பயன்படுத்தும் துணிகள், படுக்கைகள் விரிப்புகள் ஆகியவற்றின் மீது தூபம் (புகை) போடவேண்டும். இதை எளிதாகச் செய்வதற்கு ஒரு கயிற்றுக் கட்டிலின் மீது குழந்தையின் துணிகளைப் பரப்பி கட்டிலுக்கு அடியில் இந்த தணல் தட்டை வைத்து அதில் தூபசூரணம் போட்டு சிறிது நேரம் வைப்பதே சிறந்தது.
இந்த புகைபோட்ட துணிகளை மடித்து பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டும். தற்காலத்திய ஸ்டெர்லைசேஷன் முறையில் துணிகளைச் சுத்தம் செய்யப்படுவதைப் போல முன்நாட்களில் அழுக்கு, மலங்களில் அணுக்கிருமிகள் வளர்ந்து அவையே குழந்தையின் தோல் நோய்களுக்குக் காரணமாயிருப்பதைக் கண்டுபிடித்து அதை அகற்றுவதற்காக ஒüஷதி மூலிகைளால் புகை போடும் முறையை உபயோகித்து வந்தனர். இது தற்சமயம் செய்யப்படும் ஸ்டெர்லைசேஷன் சுத்தி முறையைக் காட்டிலும் மூலிகைகள் சேர்ந்த சுத்திமுறை அதிகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
இளம் குழந்தைக்கு நாலு துணிகள் ஒரே சமயத்தில் தேவைப்படலாம். படுக்கையின் மேல்விரிப்புக்கு மேல், குழந்தையின் பின்புறம் விரிக்க, இடுப்புக்கு மேல் ஒரு துணி, இடுப்புக்கு கீழ் ஒரு துணி, முன்புறமும் இவ்வாறு இடுப்புக்கு மேலும் கீழும் போர்த்துவதற்கு தனி துணிகள் பயன்படுத்துதல் மிகவும் நல்லது. குழந்தையை வீட்டைவிட்டு வெளியில் எடுத்துச் செல்லும் சமயத்தில் மட்டும் மலம் }சிறுநீர் தங்கும் இடுப்புச் சட்டையை சில நிர்பந்தங்களுக்காக உபயோகிக்கலாமே தவிர, வீட்டில் அவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நலம். சில குழந்தைகள் சிறுநீரின் ஈரம் பட்ட உடனே அழும். அதனால் உடனே புட்டத்தைச் சுத்தம் செய்து துணியை மாற்றிவிடலாம். ஆனால் சில குழந்தைகள் சிறுநீரின் ஈரத்தை உணராமல் அழாமல் இருந்துவிடும். இப்படி மல, மூத்திரத்தில் மணிக்கணக்காய்க் கிடக்கும் குழந்தைக்கு தோலில் சினப்புகள் ஏற்படலாம்.
தாய்ப்பாலை நீங்கள் தருவதாக இருந்தால், திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை லேசாக உருக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் இரண்டு மாதங்கள் சாப்பிடலாம். இம்மருந்தினுடைய வீரியமானது தாய்ப்பாலின் வழியாக குழந்தையைச் சென்றடைவதால் தோல் உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறுவதோடு அவை எதிர்காலத்தில் குழந்தைக்கு வராமலும் ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படும். உங்களுக்கும், குழந்தைக்கும் பசி குறைவாக இருந்தால், ஆரக்வதாரிஷ்டம் எனும் மருந்தை நீங்கள் சுமார் 30 மி.லி. காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டால், பசியும் மேம்படும், தோலில் ஏற்படும் சினப்புகளும் குழந்தைக்குக் குணமாகிவிடும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...