/

"பிரியமானஸம்' உருவாக்கியிருக்கும் சர்ச்சை!

இந்தியாவில் சமஸ்கிருத மொழியில் இதுவரை மூன்றே மூன்று திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:59 pm

பிஸ்மி பரிணாமன்

இந்தியாவில் சமஸ்கிருத மொழியில் இதுவரை மூன்றே மூன்று திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில், பிரபல இயக்குநர் ஜி.வி.அய்யர் ஆதி சங்கராச்சாரியார், என்ற முதல் சமஸ்கிருதப் படத்தைத் தயாரித்து 1983இல் வெளியிட்டார். அவர் இயக்கி 1993இல் வெளிவந்த "பகவத் கீதா' தான் இரண்டாவது சமஸ்கிருதப் படம். இரு படங்களும் தேசிய விருதினைப் பெற்றது.

சமஸ்கிருத மொழியில் 2015இல் வெளிவந்த மூன்றாவது படம் "பிரியமானஸம்'. கேரளத்தைச் சேர்ந்த விநோத் மன்கரா இயக்கியிருக்கும் "பிரியமானஸம்' சமஸ்கிருத மொழியில் சிறந்த படம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்று சென்ற வாரம் அறிவிப்பு வந்துள்ளது. கேரளத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, "உன்னாயி வாரியர்' என்ற கவிஞரின் வாழ்க்கையை விவரிப்பதுதான், பிரியமானஸம்.

கோவாவில் சென்ற ஆண்டு நடந்த திரைப் பட விழாவில் "பிரியமானஸம்' திரையிடப்பட்டது. அது தவிர, வெளிநாட்டு குறிப்பாக ஜெர்மனியில் நடந்த திரைப்பட விழாக்களில் "பிரியமானஸம்' பல முறை திரையிடப்பட்டுள்ளது.

ஆனால், விநோத் மன்காரா இயக்கத்தில் வெளியாகியிருக்கும், "பிரியமானஸம்', இந்துத்துவ சித்தாந்தத்தின் புகழ் பாடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டதினால், கேரளத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்கப்படவில்லை.

"பிரியமானஸம்' ஒன்றரை மணி நேரம் ஓடும் பீரியட் திரைப்படம். அந்தக் காலத்தில் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த புலவர் உன்னாயி வாரியர், நள சரித்திர ஆட்டக்கதா என்ற கதகளி நாட்டியத்திற்கான கவிதை வரிகளைப் படைக்கும்போது அவருக்கு ஏற்பட்ட மனப் போராட்டங்கள், மனக்கிலேசங்களின் உருவகம்தான் "பிரியமானஸம்'. இந்தப்படம் எனது ஆறு ஆண்டுகால உழைப்பில் பிறந்தது. வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் "பிரியமானஸம்' திரையிடப்பட்டு பாராட்டுகள் பல கிடைத்தன; கிடைத்தும் வருகின்றன. ஆனால், இங்கே இந்தப் படத்திற்கு எதிர்ப்பு மட்டுமே கிளம்பியுள்ளது. இங்கே எனது கடும் உழைப்பினை உதாசீனப்படுத்திவிட்டார்கள்.

உன்னாயி குறித்த தகவல்களைத் திரட்ட, கேரளம் முழுதும் சுற்றி வந்தேன். கிடைத்ததெல்லாம் உறுதிப்படுத்த முடியாத செவிவழிச் செய்திகள்தான். கடைசியில், உன்னாயி எழுதிய நள சரித்திரத்தின் ஓலைச்சுவடி கிடைத்தது. 1893இல் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் நள சரித்திரம் கதகளி ஆட்ட நிகழ்ச்சியாக நடந்தது என்று சான்றுகளும் கிடைத்தன. அதன் மூலம் உன்னாயியை அவரது வாழ்க்கையைச் சென்றடைய முடிந்தது.

பதினேழாம் நூற்றாண்டில், பழமையான திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் கடவுளுக்குச் சார்த்தும் பூ மாலைகளைப் பின்னும் தெய்வீகப் பணி ஆற்றிய பண்டிதர் ஒருவரைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதுதான் "பிரியமானஸம்'. இது ஒரு காதல் கதை. அதனால் கோயில் படத்தின் முதன்மை பின்னணிக் களம் ஆகிறது.

கதை சம்பவங்களைப் படமாக்கும் போது, கதையின் களம் மற்றும் தளமாக அமையும் கோயில், கோயிலில் நடக்கும் பூஜை புனஸ்காரங்கள் படத்தில் இடம்பெறும். இவற்றைக் காட்டாமல் உன்னாயியின் கதையைச் சொல்ல முடியாது. கோவில், அங்கு நடக்கும் வழிபாட்டு முறைகளைக் கதையின் ஓர் அம்சமாகப் பார்க்க வேண்டும். அவற்றை இந்து மதத்தின் குறியீடாக, அடையாளமாகக் காட்டுவதாகக் கருதக் கூடாது.

"பிரியமானஸம்' பட இயக்குநர் விநோத், சுமார் அறுநூறு (600) செய்திப் படங்களை இயக்கியுள்ளார். தற்சமயம், தமிழில் ஒரு செய்திப் படம் தயாரித்து வருகிறார்.

படத்தில் அன்றைய கலாசாரத்தின்படி, முண்டு, ஜாக்கெட்டுடன் வரும் பிரதீக்ஷô, மீரா ஸ்ரீநாராயணன் இருவரும் நடனங்களை முறையாகக் கற்றவர்கள்.

விநோத் தற்சமயம் மலையாளத்தில் காம்போஜி என்னும் பெயரில் 1940 வாக்கில் மலபார் பகுதியில் புகழ் பெற்ற காதல் குறித்து படம் தயாரித்து வருகிறார். படத்தில் இசையும், கதகளியும், மோகினி ஆட்டமும் சங்கமிக்கின்றன. காதலர்களாக, நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான லட்சுமி கோபாலசுவாமி மோகினியாட்டக் கலைஞராகவும், நடிகர் மனோஜ் கே.ஜெயன் கதகளி கலைஞராகவும் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.