திரைக் கதிர்
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை இயக்கி வந்த அழகுராஜ் சினிமாவில் கால் பதிக்கிறார். தனது முதல் படத்துக்கு ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என பெயரிட்டுள்ளார்.


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை இயக்கி வந்த அழகுராஜ் சினிமாவில் கால் பதிக்கிறார். தனது முதல் படத்துக்கு ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என பெயரிட்டுள்ளார். பிக் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட இத்திரைக்கதை நகைச்சுவை உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களை முதன்மையாகக் கொண்டு உருவாகி வருகிறது. கதாநாயகனாக ஆதவா அறிமுகமாகிறார். மலையாள வரவு அவந்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். லியாண்டர் லீ இசையமைக்கிறார். கலை இயக்குநராக மகி பணியாற்றுகிறார். சண்டைப் பயிற்சி இயக்குநராக ஆக்ஷன் பிரகாஷ் பணியாற்றுகிறார். கடந்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.
பிராந்திய மொழிப் பிரிவில் தமிழின் சிறந்த படமாக "விசாரணை' தேசிய விருது மேடையை அலங்கரித்துள்ளது. அப்படத்தில் பணியாற்றிய கிஷோர் சிறந்த படத்தொகுப்பாளாராகவும், சிறந்த துணை நடிகராக சமுத்திரக்கனியும் தேர்வாகியுள்ளனர். விருது குறித்து வெற்றிமாறனிடம் பேசுகையில்...
""விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் விருதுக்காகப் படம் எடுக்கவில்லை. எனக்குப் பிடித்த விஷயத்தை படமாக மாற்றினேன். உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைத்துள்ளது. இந்த விருதை என் ஊக்கத்துக்கான எரிபொருளாக நினைக்கிறேன். கிஷோரின் கடைசி சிந்தனை இந்த படம். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தான் மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு விருது கிடைத்தது எங்களுக்கு மட்டுமில்லாமல், அவர் குடும்பத்திற்கும் ஆறுதலாக இருக்கும். சமுத்திரக்கனியின் நடிப்பு பெரிய சவால். அதே போன்று இந்தப் படத்தின் பின்னணியில் இன்னும் நிறையப் பேரின் உழைப்பு உள்ளது. அவர்களுக்கெல்லாம் நன்றி. என் ஒவ்வொரு படத்துக்கும் அடையாளம் வேண்டும் என்றுதான் உழைக்கிறேன்.
அடுத்த படத்துக்கும் அப்படித்தான் உழைப்பேன். ஆனால், விருதுக்காக படம் எடுத்தால் விருது கிடைக்காது. அதற்கான அம்சங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும்'' என்றார் வெற்றிமாறன்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெராப் "ஆரண்யகாண்டம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த வித்தியாசமான பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்த போதிலும் வித்தியாசத்துக்காக காத்திருந்தார். ஹிந்தியிலும் தனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கும் ஜாக்கி, தற்போது "ஜிஸ்ம் 3' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் ஜாக்கி. சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிருஷ்ணன், மற்றும் லாவண்யா திரிபாதி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் மாயவன். இப்படத்துக்காக ஜாக்கியின் கால்ஷீட் கேட்கப்பட்டது. கதையைக் கேட்ட பின்னர் தனது கால்ஷீட் தேதிகளை ஜாக்கி உறுதி செய்து தந்துள்ளதாகத் தெரிகிறது. அவர் வில்லன் வேடம் ஏற்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது.
"ஆரண்யகாண்டம்' வெளியாகி சரியாக ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் மீண்டும் ஜாக்கியின் தமிழ் சினிமா வரவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
63 ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் "தாரை தப்பட்டை' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது. இளையராஜா இந்த விருதை ஐந்தாவது முறையாகப் பெறுகிறார். இதற்கு முன் இளையராஜா, 1983 இல் சாகர சங்கமம் (தெலுங்கு), 1985 இல் சிந்து பைரவி (தமிழ்), 1988 இல் ருத்ர வீணா (தெலுங்கு), 2009இல் பழசி ராஜா (மலையாளம்) ஆகிய படங்களுக்காக நான்கு முறை விருது பெற்றிருந்தார். இப்போது ஐந்தாவது முறையாக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நடிகர்களின் அணிகளுக்கு நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதில் நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் அல்லாத பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர். அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள்.
ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு முதல் பந்தை வீசி போட்டியைத் தொடங்கி வைக்க உள்ளார். கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுகிறார். இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. அணிக்கு 6 நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...