/

திரைக் கதிர்

தன் சக நட்சத்திரங்களுடன் இமேஜ் பாராமல் பழகும் இயல்புடைய பிரியா ஆனந்த், தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் வரும் போது அந்தப் பட வாய்ப்புகளை

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:03 am

ஜி. அசோக்

தன் சக நட்சத்திரங்களுடன் இமேஜ் பாராமல் பழகும் இயல்புடைய பிரியா ஆனந்த், தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் வரும் போது அந்தப் பட வாய்ப்புகளை  சக நடிகைகளுக்குப் பரிந்துரை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். என்னதான் நெருக்கமாகப் பழகி நட்பு பாராட்டினாலும் தாங்கள் நடிக்கும் படங்களிலோ, வரக் கூடிய வாய்ப்புகளையோ தன் சக தோழி நடிகைகளுக்கு ஹீரோயின்கள் விட்டுக் கொடுப்பதில்லை. காலம் கடந்தாலும் இயக்குநரைக் காத்திருக்கச் செய்து அந்தப் பட வாய்ப்பை தக்க வைத்து கொள்வர். இதிலிருந்து மாறி தன் சக தோழி நடிகைகளைச் சிபாரிசு செய்யும் குணாதிசயத்துடன் காணப்படுகிறார் பிரியா ஆனந்த். "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இயக்குநர் கண்ணன் பிரியா ஆனந்துக்கு அழைப்பு விடுத்தார். அப்போது வேறு ஒரு படத்துக்கான கால்ஷீட் இருந்ததால், அந்த வாய்ப்பைத் தனது தோழியான விஷாக சிங்கிற்கு பரிந்துரை செய்ததுடன், அவரிடம் பேசி சம்மதமும் பெற்று தந்தார். இந்நிலையில் "தூங்காவனம்' படத்தின் வாய்ப்பை மது ஷாலினிக்கு பெற்றுத் தந்துள்ளார். தனக்கு வந்த அப்பட வாய்ப்பை கை வசம் கால்ஷீட் இல்லாத நிலையில் படக்குழுவினரிடம் மது ஷாலினியை சிபாரிசு செய்துள்ளார் பிரியா ஆனந்த்.

விவேக் கதாநாயகனாக நடித்த "நான்தான் பாலா' படத்தை இயக்கிய கண்ணன் ராஜமாணிக்கும் சிறிது இடைவெளிக்குப் பின் தயாரித்து இயக்கும் படம் "சூது வாது.'

தென் மாவட்ட மக்களின் வாழ்க்கைப் பதிவாக உருவாகும் இப்படத்தில் நகைச்சுவைக்குப் பெரும் பங்கு உண்டு. அதேபோல் காதலுக்கும் வீரத்துக்கும் பங்குண்டாம். சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். சுனு லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அம்பாசமுத்திரம், குற்றாலம், திருநெல்வேலி, சுந்தரபாண்டிபுரம், குற்றாலம் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

Story image

"தோனி', "ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது ரஜினியின் "கபாலி'யில் நடித்து வருகிறார். துணிச்சலான கருத்துக்கள், யாரும் ஏற்கத் துணியாத வேடங்கள் என்பது ராதிகா ஆப்தேவின் தனித்துவ அடையாளங்கள். சமூகப் பிரச்னைகளில் தன் இணைய தளப் பக்கத்தின் மூலமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ராதிகா, எந்தவித கருத்துக்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்து வைப்பார். இவர் "ஆஸ்க் மி எனிதிங்' என்ற இணைய தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் தற்போது உரையாடும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பதிவு செய்துள்ள கருத்து... ""மீடியாக்கள் இன்றைய தினம் சக்தி வாய்ந்தவையாக உருவாகி உள்ளன. அவற்றில் இணைய தளம் என்பது அதிகபட்சமாக ஒரு பொருளின் இமேஜை வளர்த்துக் கொள்ள பயன்படுகிறது. நேரடியாக ஒருவரைத் தொடர்பு கொள்வதற்கான பெரிய வாய்ப்புக் கிடைப்பது லாபகரமான விஷயம். "ஆஸ்க் மி எனிதிங்' பகுதியில் அங்கம் வகிப்பதை எண்ணி பரவசம் அடைகிறேன். ரசிகர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் சாதனமாக இணைய தளம் அமைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார் ராதிகா.

"டார்லிங்', "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படங்களுக்குப் பின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் "ப்ருஸ் லீ.' குழந்தைகளைக் கவரும் விதத்தில் உருவாகவுள்ள இப்படம் ஹாலிவுட்டின் பிரபலமான திரைக்கதையான "ஸ்பைடர் மேன்' பாணியில் அமைக்கப்படவுள்ளது. ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கென கதை சொல்லும் "லாப்ஸ்டர்' பாணியில் இந்தியாவில் உருவாகும் முதல் படம் இது. கதாநாயகியாக கீர்த்தி கர்பந்தனா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்  இப்படத்தை எழுதி இயக்குகிறார். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் 4-ஆவது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்ற இவர், இயக்குநர் பாண்டிராஜின் "இது நம்ம ஆளு', "ஹைக்கூ'  ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். நவம்பர் மாதத்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பெரும்பாலான காட்சிகளுக்கு வெளிப்புற படப்பிடிப்பு இல்லாமல் ஸ்டூடியோக்களில் படமாக்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ஓகே கண்மணி' ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு ஜோடியின் ஆத்மார்த்த உறவை மையப்படுத்தி உருவாகியிருந்த இக்கதைக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பல மொழிகளில் இப்படத்தின் ரீமேக் உரிமை விற்பனையானது. இந்நிலையில் தற்போது ஹிந்திக்குச் செல்கிறது படம். முன்னதாக மணிரத்னம் இயக்கிய "அலைபாயுதே', "ஆயுத எழுத்து', "ராவணன்' போன்ற படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தன. தற்போது "ஓகே கண்மணி' படத்தினை ஷாத் அலி இயக்கத்தில் "ஆஷிக் 2' புகழ் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு சோனாக்ஷி  சின்ஹாவிடம் இதில் நடிப்பதற்கான பேச்சு நடந்து வந்த நிலையில், ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ஷ்ரதா ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு "அலைபாயுதே' ரீமேக் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதால், அதற்கு நேர் மாறான கருப் பொருளைத் திரைக்கதையாகக் கொண்டுள்ள இப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.