ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு உப்புதலும்... மது, புகைப்பழக்கமும்!
ஒரு சில மதுபானங்கள் உதாரணத்திற்கு பீர், பிராந்தி போன்றவை வயிற்றுப் பகுதியில் சதையை அதிகம் சேர்க்கக் கூடியவை.


வயது 67. அங்கஹீனம் உள்ளவன். வயிற்று சதை அதிகம். காலையில் வெறும் வயிறே கனமாக உள்ளது. பசி உள்ளது. ஆனால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிவிடுகிறது. அடிக்கடி வாயு பிரிகிறது. மாலை நேரம் மட்டும் சிலசமயம் மூச்சிரைப்பு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வயதான காலத்தில் மதுபழக்கத்திற்கு ஆளாகியுள்ளேன். சுமார் 30 ஆண்டுகளாக புகைபழக்கமும் உண்டு. என் உபாதைகள் தீருமா?
ந.ஓ.முரளிதரன்,வேங்கைவாசல், சென்னை.
ஒரு சில மதுபானங்கள் உதாரணத்திற்கு பீர், பிராந்தி போன்றவை வயிற்றுப் பகுதியில் சதையை அதிகம் சேர்க்கக் கூடியவை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்ட தங்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய வழிமுறைகளையும், மருந்துகளையும் இன்று பல மருத்துவமனைகளிலும் ஆலோசனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு தரப்படுகின்றன. அதுபோன்ற ஆலோசனைக் கூடங்களை நீங்கள் நாடலாம். மதுபானமும் புகைப் பழக்கமும் உள்ள நண்பர்களை நீங்கள் அவசியம் தவிர்த்திடல் வேண்டும். வயோதிகத்தில் அவை மிகப்பெரிய ஆபத்துகளை உள்ளுறுப்புகளில் ஏற்படுத்தலாம்.
பசியிருந்தும் சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிவிடுவதன் காரணம் - வயிற்றிலுள்ள அமிலச் சுரப்புகள் நீர்த்த தன்மையையோ அல்லது அவை ஏற்படுத்திய புண்ணினாலோ ஏற்படக்கூடும். மதுபானமும், புகைப் பழக்கமும் இந்த உபாதைக்கு வித்திடுகின்றன. புண்ணிலிருந்து ஏற்படும் வாயுவானது கீழ்நோக்கி அடிக்கடி பிரியக்கூடும். அதுவே மேல்நோக்கி மூச்சிரைப்பாகவும் வெளியேறலாம். வயிற்றுப்பகுதியின் ஆதிக்கத்தை பாசகம் எனும் பித்தமும், க்லேதகம் எனும் கபமும் சமானன் மற்றும் அபானன் என்ற வாயுவும் தம் வசம் வைத்துள்ளன. இவற்றினுடைய சீரிய செயல்பாடுகள் மதுபழக்கத்தால் கேடடைந்து அவை பெரும் சீற்றம் அல்லது மந்தமான தன்மை தங்களுக்கு இதுபோன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
ஆறு வகையான விஷயங்கள் மனிதர்களுக்கு உணவு செரிமானம் ஆவதற்காக உதவுபவை.
1. இரைப்பை முதலியவற்றின் உட்சூடு - இது இயற்கையாக இரைப்பை முதலியவற்றின் இடைவிடாத அசைவினால் பாதுகாக்கப் பெறுகிறது. மதுபானத்தினால் இந்தச் சூடானது பலம் பெற்று வயிற்றுப் புண்களை ஏற்படுத்திவிடும்.
2. வாயுவின் சஞ்சாரம் - இடைவெளியிருக்கும்வகையில் இரைப்பையை நிரப்புதல் அவசியம். இடைவெளி இல்லையேல் நெகிழ்ந்த உணவு கீழ் இறங்காது. காற்று எளிதில் இடம் விட்டு இடம் மாற வாய்ப்பிருந்தால் உணவும் இடம் மாறும். எளிதில் செரிக்கும் உணவும்.
3. திரவக்கசிவு - உணவின் இறுக்கமான தன்மை நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்போது ஜீரணத் திரவங்கள்
ஒரே சீராக பரவி அவற்றை பக்குவப்படுத்த முடியும். இதற்கு திரவப்பொருட்களாகிய தண்ணீர், மோர் போன்றவற்றை உணவின் தன்மைக்கு ஏற்ப சூடாகவோ அல்லது உடல் சூட்டினுடைய தன்மைக்கேற்பவோ சாப்பிட வேண்டும். இதனுடைய சீரான சேர்க்கையானது சீரணத்திற்கு பெரும் உதவியைச் செய்கிறது.
4. நெய்ப்பு - வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும், மென்மை ஏற்படவும் நெய்ப்பு தேவை. நெய்ப்பின்றி செல்லும் உணவும் செரிமானத்திற்கு கெடுதலே. நெய், தயிர், எள், தேங்காய் போன்றவற்றால் இதை நாம் பெறுகிறோம்.
5. காலம், நேரம் - உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஒதுக்கப்படவேண்டும். ஆறு மணிநேரம் வரை செரிமானம் ஆகும் உணவுப் பொருட்கள் உண்டு. நேரம் தராமல் மேன்மேலும் உணவு உட்கொள்ள நோய் வருகிறது. அதனால் செரிமானம் செய்யும்.
6. உணவின் சீரிய அமைப்பு - சீரான உணவினுடைய சேர்க்கையானது அதிலிருந்து பிரியும் சத்தான பகுதி தாதுக்களுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
மேற்குறிப்பிட்ட ஆறு விஷயங்களும் தங்களுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது நன்கு புலப்படுகிறது. இவை அனைத்தையும் சாதாரண நிலைக்குக் கொண்டு வர தீயபழக்கங்களாகிய மதுபானம் மற்றும் புகைபழக்கத்திலிருந்து நீங்கள் விடுபடவேண்டும். வயதிற்கேற்ற திடஉணவுகளை உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். De-Addiction Centre மூலமாக மதுபான, புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு நீங்கள் நிச்சயமாக உடல்நலனைப் பெறலாம்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...