கண் மருத்துவ ஆய்வில் ஆர்வம்!
விண்வெளி ஆய்வுகளில் மட்டுமல்லாது கண் சிகிச்சை ஆய்வுகளிலும் கலாம் ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறுகிறார் மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழும கெளரவத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி.


விண்வெளி ஆய்வுகளில் மட்டுமல்லாது கண் சிகிச்சை ஆய்வுகளிலும் கலாம் ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறுகிறார் மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழும கெளரவத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து:
""கடந்த 1980ஆம் ஆண்டுவாக்கில் டாக்டர் அப்துல்கலாம் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே அதே ஆண்டில் மதுரை லட்சுமிசுந்தரம் ஹாலில் நடந்த கண் மருத்துவர்கள் சங்க மாநாட்டிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைத்துள்ளேன். அப்போது அவர் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.
மாநாட்டுக்கு வந்த அவர் தனது சிறப்புரையில், ""ஒவ்வொரு கண் மருத்துவரும் குறைந்தது 10 பேருக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்'' என்றார். அவரது இந்தப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
கடந்த 2002-இல் அவரை நாங்கள் அரவிந்த் மருத்துவமனையின் ஆலோசகராக அறிவிக்க அனுமதித்தார். பின்னர் 2003-இல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், எங்கள் மருத்துவமனைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க அவர் கேட்டுக்கொண்டதால் விடுவித்தோம்.
அரவிந்த் கண் மருத்துவமனை மட்டுமல்ல. அவர் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அப்பகுதி கண் மருத்துவமனைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டினார். நம்நாட்டு கண் மருத்துவமனைகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆய்வை நடத்தி, கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தீர்வு காணவேண்டும் என அடிக்கடி கூறிவந்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்ற கலாம் அங்குள்ள கண் மருத்துவ ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்த தகவலைச் சேகரித்து எங்களுக்கு அனுப்பிவைத்தார். நாங்களும் கண் மருத்துவ ஆய்வில் சிறந்த விளங்கவேண்டும் என்பதே அவரது விருப்பம். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எங்களிடம், ""அடுத்து என்ன ஆய்வில் ஈடுபட்டுள்ளீர்கள்? புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளீர்களா?'' எனக் கேட்பார். மதுரைப் பகுதிக்கு வரும்போது இரவு 10 மணிக்கு மேலானாலும், திடீரென அரவிந்த் கண் சிகிச்சை ஆய்வு மையத்துக்கு வந்து ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது என்னைக் கூட அனுமதிக்கமாட்டார்.
அவர் கண் நீர் அழுத்த நோய் சிகிச்சையில் ஆர்வம் காட்டினார். அந்நோயைச் சீராக்குவதற்குரிய சிகிச்சை முறையை ஆராய எங்களை கேட்டுக்கொண்டார். ஸ்டெம்செல் மூலம் கண் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டும் என அடிக்கடி கூறுவார்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வெங்கடசாமி இறந்ததைக் கேட்பதற்கு மதுரையிலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் குடியரசுத் தலைவர். வீட்டில் எங்கள் குடும்பத்தினரை உட்காரவைத்து, ""இதில் யாரெல்லாம் டாக்டர்கள்?‘' என கையைத் தூக்கச்சொன்னார். அவர்களிடம், ""டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாது, நோயாளிகளுக்கு ஆசிரியரைப் போல சொல்ல வேண்டியதை சொல்லித் தர வேண்டும்'' என்றார்.
அரவிந்த் கண் மருத்துவமனை மீது அவருக்கு அளவு கடந்த பிரியம். அவர் எங்கள் நிகழ்ச்சிக்கு 19 முறை வந்துள்ளார். குடியரசுத் தலைவராக இருந்தபோது 5 தடவைக்கும் மேலாக வந்துள்ளார். ஒரு முறை, ""இவ்வளவு பெரிய நிறுவனத்துக்குத் தேவையான தலைமைப் பண்புள்ளவர்கள் உருவாக்கப்படுகிறார்களா? அப்படி வரும் தலைமைக்குரியவருக்கு அரவிந்த் மருத்துவமனை பாரம்பரியம் கற்றுத்தரப்படுகிறதா?‘' எனக் கேட்டார். அதற்கு நாங்கள், ""வீட்டில் நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்தே வரும் தலைமுறைகள் தலைமைப் பண்பை வளர்த்து வருகின்றனர். எங்கள் குடும்பத்துக்கு அப்பாற்பட்டு இந்நிறுவனப் பொறுப்புக்கு வருவோரிடமும் அத்தகைய பண்பை வளர்க்கிறோம்'' என்றோம்.
எங்களது பதிலைக் கேட்டபோது அவரது முகத்தில் பெரும் மகிழ்ச்சி பரவியதை உணர்ந்தோம்.
அவர் விண்வெளி ஆய்வு நாயகன் மட்டுமல்ல... கண்ணொளி ஆய்வு நாயகனாகவும் விளங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...