ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: திரிபலையைக் குடிநீராக மாற்றிப் பருகலாம்!
என் வயது 26. தடிமனான மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளேன். திருமணம் 6 மாதத்தில் நடைபெற்றுவிடும்.


என் வயது 26. தடிமனான மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளேன். திருமணம் 6 மாதத்தில் நடைபெற்றுவிடும். நான் தினமும் 60 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை. எண்டோமெட்ரியம் சவ்வு தடித்துள்ளதாக மருத்துவர் கூறுகிறார். நீர்கட்டியும் உள்ளது. 80 கிலோ எடை. ஆனால் உயரம் 166 செ.மீ. மட்டுமே. அதிகச் சோர்வு, தலையில் அதிகமான வியர்வை, மன உளைச்சல், ஆசனவாய் வீக்கம், இரத்தம் வடிதல், எரிச்சல் போன்றவை உள்ளன. இப்பிரச்னைகள் தீர ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைகளுக்கு ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய த்ரிபலை உதவிடக்கூடும். கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் சேர்க்கையே திரிபலை எனப்படும். எல்லா ஆயுர்வேத மருந்துக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. திரிபலையை குடிநீராக மாற்றி நீங்கள் பருகி வரலாம்.
15 கிராம் திரிபலா சூரணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி கால் லிட்டர் ஆகும் வரை குறுக்கி வடிகட்டி அதில் பாதி அளவிலுள்ள பங்கை காலையிலும், மீதியை மாலையிலும் ஆறிய நிலையில் எடுத்து அரை ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை சாப்பிட்டு வர ஏற்பட்டுள்ள பல உபாதைகளும் குணமாகக் கூடும். உடல் எடையைக் குறைக்கக் கூடிய இந்த திரிபலைக் குடிநீரானது நீங்கள் அணிந்துள்ள தடிமனான கண்ணாடியினுடைய பவரையும் குறைத்து, கண் பார்வைக்கும் உதவிடக்கூடும். இதைச் சாப்பிடும்பொழுது சிலருக்கு மலமிளக்கியாக முதல் சிலநாட்கள் வேலை செய்யும். அதன் பிறகு குடல் அதனை நன்கு பழகிக் கொள்வதால் மலம் சாதாரணமாக போகத் தொடங்கும். மேலும் இந்த மருந்தினுடைய தொடர் உபயோகத்தினால் மாதவிடாய் சுழற்சியானதும் சரி வர ஏற்படக்கூடும். கருப்பையின் உள்ளே உள்ள என்டோமெட்ரீயம் சவ்வுப்பகுதி தடிமனான நிலையில் அதனைச் சுரண்டி மெலிதாகச் செய்யக்கூடிய திறன் திரிபலைக்கு உண்டு.
வாய்விடங்கம், சுக்கு, திப்பிலி, லோஹபஸ்மம், தேன் ஆகியவை அனைத்தும் நாட்டுமருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும். லோஹபஸ்மம் ஒரு கிராம் மற்ற மருந்துகள் வகைக்கு ஐந்து கிராம் என்ற விகிதத்தில் எடுத்து பொடி செய்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி வைக்கவும். அதிலிருந்து சுமார் ஐந்து கிராம் எடுத்து 10 மி.லி. சுத்தமான தேன் குழைத்து இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும். உடல் பருமனைக் குறைப்பதால் வியர்வைக் கோளங்கள் தம் பணியினை மட்டுப்படுத்தி தலையில் ஏற்படும் அதிகமான வியர்வையைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
மனஉளைச்சல் என்பது வீடு மற்றும் அலுவல் பணிகளில் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படக்கூடியது. 10 கிராம் இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து சுமார் 125 மில்லி லிட்டர் வெல்லப்பாகுடன் கலந்து அதைச் சிறுகச் சிறுக ஒருநாளில் சுமார் 20 கிராம் வரை சாப்பிட்டு வர மனதைச் சார்ந்த உபாதைகளை அது குணப்படுத்திவிடும் என்ற ஓர் அதிசயமான விஷயத்தை ஆயுர்வேத நூல்கள் எடுத்துரைத்துள்ளன. தங்களுக்கு ஏற்பட்டுள்ள சோர்வானது நீண்டதூரப் பயணத்தினாலா, மனஉளைச்சலினாலா அல்லது மாதவிடாய் சுழற்சி தாமதத்தினாலா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உண்ணும் உணவு நன்றாகச் செரித்து சத்தாக மாறி உடல் உட்புற தாதுக்களை போஷிக்கச் செய்தால் சோர்வு என்பது சாதாரணமாக ஏற்படாது.
ஆசனவாய்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள புண் ஆறுவதற்கும் முன்குறிப்பிட்ட திரிபலையே தங்களுக்குப் பயனளிக்கக் கூடும். முன் குறிப்பிட்ட மாதிரி திரிபலையை 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி கால் லிட்டராகக் குறுக்கி மலம் கழித்த பிறகு சாதாரண தண்ணீரால் கழுவிய பிறகு திரிபலைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் வரை ஆசனவாயில் நன்கு படும்படி நீங்கள் அமர்ந்திருந்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள புண், இரத்தக் கசிவு போன்ற உபாதைகள் நன்கு நீங்கும். இந்த திரிபலைத் தண்ணீரை ஓர் அகலமான பிளாஸ்டிக் டப்பில் ஊற்றி அதனுள்ளே ஆசனவாய் படும்படி அமர்வது நல்ல பலனை அளிக்கும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...