வட்டு எறித−ல் சாதிக்கும் மாற்றுத்திறனாளி!
அரிது...அரிது...மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி. அப்படி மானிடராய்ப் பிறப்பினும் பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்றும் அவர் நமது பிறப்பை வியக்கவைத்தார்.


அரிது...அரிது...மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி. அப்படி மானிடராய்ப் பிறப்பினும் பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்றும் அவர் நமது பிறப்பை வியக்கவைத்தார்.
பிறக்கும்போது நன்றாகப் பிறந்தும் பேடு எனும் கேடு சூழ்ந்ததால் வாழ்க்கை முடங்கிய பலரின் மத்தியில், அதை எதிர்கொண்டு நாடு போற்ற வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன் போராடுவது சிலரே!
அந்தவகையில் மதுரை வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த கே.ஜே.ஆண்டனியின் சாதனை வியக்க வைக்கிறது.
ஆண்டனி தந்தை காவலர் ஜோசப். தாய் ப்ளோரா. 2 மகன்கள். 1 மகள். ஆண்டனி இளையவர். பிறந்து 2 வயதில் திடீரெனக் காய்ச்சல். சிகிச்சை அளித்த நிலையில் போலியோ பாதிப்பால் அவரது ஒரு கால் பாதிக்கப்பட்டது.
பள்ளிப் படிப்பை முடித்து பி.காம் படித்த நிலையில் தந்தை திடீர் மறைவு அவரை வேலை பார்க்கும் கட்டாயத்துக்குத் தள்ளியது. வழக்குரைஞரிடம் தட்டச்சராக பணிபுரிந்தபோதுதான் அவர் விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
ஏகலைவன் போல தானே ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் சாதிக்க முடிவு செய்தார். நண்பர்கள், தாய் உதவி செய்த நிலையில் வட்டு எறிதல், குண்டு எறிதலை தனது சாதனையின் களமாக்கினார்.
முதன்முதலாக அவர் கடந்த 2004-ல் மதுரை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அப்போட்டியில் அவர் வட்டு எறிதலில் முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வட்டு எறிதலிலும், குண்டு எறிதலிலும் முதலிடத்தையே வகித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் முதுநிலை எழுத்தராகப் பணிகிடைத்த நிலையில் தினமும் ரேஸ்கோர்ஸ் மைதானம் சென்று கடுமையான பயிற்சியை மேற்கொண்டார்.
கடந்த 2009 -இல் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் வகித்தார். அதன்பின் 2012-இல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் 2 வது இடம் வகித்தார்.
தொடர்ந்து தேசிய அளவில் அவர் சாதனை புரிந்த நிலையில் 2014-இல் ஆப்பிரிக்காவிலுள்ள துனிஸ்யாவில் நடந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் வட்டு எறிதலில் 3 ஆம் இடம் வகித்தார். இதையடுத்து 2015-இல் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நடந்த வட்டு எரிதலில் 2 ஆம் இடம் வகித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆண்டனி சாதிப்பதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அவருக்கு ரொக்கப் பரிசளித்துப் பாராட்டினார். விளையாட்டில் சாதித்து வரும் ஆண்டனி வரும் ஒலிம்பிக் போட்டியில் நமது தேசத்துக்காக தங்கப் பதக்கம் பெறுவதே நோக்கம் எனக்கூறி பயிற்சி பெற்றுவருகிறார்.
தந்தை இல்லாத நிலையில், மூத்த சகோதரர், இளைய சகோதரி திருமணமாகி தனியாகச் சென்றுவிட்டனர். வயதான தாயுடன் வசிக்கும் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்கவே அவரது தாய் விரும்புகிறார். ஆனால் அவரோ. திருமணம் வேண்டாம்...தேசத்துக்காக சாதித்து பெருமைப்படுவதே லட்சியம் என விளையாட்டில் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகிறார் 40 வயதை எட்டும் ஆண்டனி.
விளையாட்டைத் தவிர அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஓவியம் வரைவது. இயற்கைக் காட்சிகள், பிடித்த தலைவர்கள் என பல ஓவியங்களை வீட்டில் வரைந்து வைத்திருக்கிறார்.
அரசு வேலை, போதிய வருவாய், விளையாட்டில் இதுவரை கிடைத்த புகழ், எல்லாவற்றையும் விட வயதான தாய் என எதையும் பொருட்படுத்தாமல், தனது லட்சியத்தை மாற்றாமல் தேசத்துக்காக பதக்கம் பெறுவதே தமது லட்சியம் என விளையாட்டை நேசித்துவரும் ஆண்டனி போன்றவர்கள் நிச்சயம் வெல்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...