/

திரைக் கதிர்

மருத்துவத் துறையின் பின்னணியில் உருவாகி வரும் படம் "சதுரன்.' குபேரன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் "மூடர் கூடம்' ராஜாஜ் கதாநாயகனாக நடிக்கிறார். வர்ஷா மலேத்திரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:53 am

ஜி. அசோக்

மருத்துவத் துறையின் பின்னணியில் உருவாகி வரும் படம் "சதுரன்.' குபேரன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் "மூடர் கூடம்' ராஜாஜ் கதாநாயகனாக நடிக்கிறார். வர்ஷா மலேத்திரியா கதாநாயகியாக நடிக்கிறார். "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கவனம் ஈர்த்த மோனிக் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ராஜீவ் பிரசாத். மருத்துவத் துறையில் மறைமுகமாக நடந்து வரும் முக்கியமான பிரச்னை ஒன்றுதான் இந்த படத்தின் மையக் கரு. அழகு மெருகூட்டும் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் காதல். எதிர்பாரா விதமாக மருத்துவ ரீதியான பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார் காதலி. அந்தப் பிரச்னையில் இருந்து காதலன் காதலியை எப்படி மீட்டெடுத்தார் என்பதே திரைக்கதை. காதல்தான் கதையின் பிரதானம் என்றாலும் இதுவரை சொல்லப்படாத பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது இந்தக் கதை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இம்மாத வெளியீடாக இப்படம் வரவுள்ளது.

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த "ஸ்ரீமந்த்துடு', "செல்வந்தன்' பெயரில் தமிழிலும் வெளியானது. இதைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் "புருஸ்லீ தி பைட்டர்', "புருஸ்லீ 2 தி பைட்டர்' என்ற பெயரில் தமிழிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. ராம்சரண் ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். சீனு வைட்லா எழுதி இயக்குகிறார். இம்மாத வெளியீடாக இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

பொருள் தேடி, பணம் தேடி கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு வருபவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை வீட்டு வாடகைக்கே இழக்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் பெரு நகரங்களில் தங்களது இன்ப, துன்பங்களைக் கழித்து திரும்பி பார்த்தால் ஈட்டிய வருவாய் என்று ஒன்ஹறுமில்லை. இது போல் உள் நாட்டு அகதிகளாகத் தங்களது வாழ்வைத் தொலைத்து நிற்கும் கிராமத்து மனிதர்களின் பதிவாக உருவாகி வருகிறது "கடிகார மனிதர்கள்.' கிரைஸ்ட் பி தி இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கிஷோர், கருணாகரன் இருவரும் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். ஷெரீன், பிரதீப் ஜோஷ், லதாராவ், வாசு விக்ரம், பாலாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் "வைகறை பாலன்.' நடுத்தர மக்கள் வசிப்பது போன்ற 100 மாதிரி வீடுகள் செட் அமைக்கப்பட்டு பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை "சிறுத்தை' சிவா இயக்கி வந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வந்த இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமிமேனன் நடிக்கின்றனர். அஜித்தின் 56-ஆவது படமாக உருவாகி வந்த இப்படத்துக்கு தலைப்பிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் அஜித்-56 என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்துக்கு "வேதாளம்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை ஏற்கெனவே ராகவ லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்ததால், அவரது ஒப்புதலைப் பெற்று வேதாளம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. படப் பெயர் வெளியான அதே நாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதில் அஜித் ரெட் பட பாணி தோற்றத்தில் இடம் பெற்றுள்ளார். தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

படம் தொடர்பான விழாக்களில் பங்கேற்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் நயன்தாரா படங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த "மாயா' தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சிகளில் வழக்கம் போல் நயன்தாரா பங்கேற்கவில்லை. இதையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு நயன்தாரா மீது புகார் தெரிவித்துள்ளது. அதில் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கு கொள்ளாதது எங்களுக்குப் பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ள அந்த தரப்பு, ஹீரோயின்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக ஒப்பந்தத்திலேயே நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

"பாகுபலி', "ருத்ரமாதேவி' என இரு பெரிய படங்களில் ஆண்டுக் கணக்கில் நடித்து வந்தார் அனுஷ்கா. இதில் "பாகுபலி' வெளியாகி விட்டது. "ருத்ரமாதேவி' படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சரியான தருணம் பார்த்து வந்தனர். "பாகுபலி' படத்துக்கு எழுந்த எதிர்பார்ப்புகளையடுத்து "ருத்ரமாதேவி' படத்தை தள்ளி வைத்தது தயாரிப்பாளர் தரப்பு. அடுத்து கமல், மகேஷ்பாபு ஆகியோரது படங்கள் வெளிவந்ததால் "ருத்ரமாதேவி' மீண்டும் தள்ளிப் போனது. இதற்கிடையில் அனுஷ்கா நடித்து வந்த "இஞ்சி இடுப்பழகி' படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்குத் தயாராகி விட்டது. இப்படமும் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்போது இந்த இரண்டு படங்களில் எது முதலில் வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வரும் 9-ஆம் தேதி இரு படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா நடித்த இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போதிலும் இரு படத் தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டப்படி படம் வெளியாகும் என அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.