/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காய்ச்சல் வராமல் தடுக்கலாம்!

தற்சமயம் எங்கு பார்த்தாலும் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்ட், அம்மைக்காய்ச்சல் போன்றவை அதிகம்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:03 am

எஸ். சுவாமிநாதன்

தற்சமயம் எங்கு பார்த்தாலும் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்ட், அம்மைக்காய்ச்சல் போன்றவை அதிகம் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. இவை வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஏதேனும் சிறிய கை வைத்தியமுறையை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறதா?
ராஜேஷ், திருச்சி.

காலத்திற்கேற்ற ஒரு நல்ல கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இதற்கேற்ற கை வைத்தியமுறையை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் பரிந்துரை செய்கிறது. 

சீந்திற்கொடி, கண்டந்திப்பிலி, அரிசி  திப்பிலி, கடுகரோகிணீ, கடுக்காய்த்தோல். சுக்கு, கிராம்பு, வேப்பம்பட்டை, சந்தன சிராய் இவை வகைக்கு 20 கிராம் நிலவேம்பு 90 கிராம்.

இவற்றை நன்கு வெயிலில் உலர்த்தி இடித்து, மெல்லிய கண் உள்ள சல்லடையில் சலித்து பத்திரப்படுத்தவும்.

அளவு: சிறியோர்   - 1/4-1/2  டீ ஸ்பூன் ;  பெரியோர்   - 1/2 - 1 டீ ஸ்பூன்

அனுபானம்: தேன், வெந்நீர், சாத்துக்குடி பழச்சாறு.

மிகவும் கசப்பான ஆனால் நல்ல குணம் தரும் மருந்து. வகையாகச் சாப்பிடாவிட்டால் பல் இடுக்குகளில் தங்கி வெகுநேரம் வாய் கசந்து கொண்டே இருக்கும். வெந்நீரிலோ, சாத்துக்குடிப் பழச்சாறு கலந்த வெந்நீரிலோ, சோடா உப்பு கலந்த வெந்நீரிலோ கலக்கிச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இது எவ்வளவு கசப்பாக இருந்தாலும், குமட்டல் தெரியாது. இதை விரும்பிச் சாப்பிடுபவரும் உண்டு. பொதுவாக எல்லாக் காய்ச்சல்களுக்கும் எல்லா நிலைகளிலும் நல்ல கைகண்ட மருந்து. முறைக் காய்ச்சல், யானைக்கால் வீக்கம், காய்ச்சல் இம்மாதிரி அடிக்கடி குளிருடனும் ஏற்படக்கூடிய காய்ச்சலால் துன்புறுபவர் சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு நல்ல குணம் பெறுகிறார்கள். யானைக்கால் நோயுள்ளவர்க்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் கால்களில் தடிப்பு அதிகமாகிக் கொண்டே போவதை,  காய்ச்சலைத் தடுப்பதன் மூலமும், ரத்தத்தைச் சுத்தி செய்வதன் மூலமும் இது குணப்படுத்துகிறது. டைபாய்ட் முதலிய காய்ச்சல், அவற்றுக்குரிய காலத்தில் இறங்காமல் நீடித்துக்கொண்டே போகும்போதும், காய்ச்சலின் வேகம் தணிந்த பிறகும் உட்காந்தல் குறையாத நிலையிலும் சாப்பிட நல்லது. தாளீஸாதி சூர்ணத்துடன் இதைக் கலந்து சாப்பிடுவது வெகுட்டலை மாற்றுவதுடன் சளி, இருமல் முதலிய உபத்திரவங்களையும் போக்கும். மலச்சிக்கலைப் போக்கி மலத்தை சரியாக வெளியாக்கும். பித்தத்தைக் குறைக்கும். காய்ச்சலின்போது ஏற்படும் வாய் கசப்பு நீங்கும்.

இதைச் சூர்ணமாகச் சாப்பிட இயலாதவர்கள், சூர்ணத்தின் அளவை இரட்டித்துக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இதையே இரண்டு டீ ஸ்பூன் அளவு எடுத்து 240 மில்லி தண்ணீரில் போட்டுக் கஷாயமாகக் காய்ச்சி 60 மில்லி மீதமாகும் போது வடிகட்டி தேன் அல்லது சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.

நாட்டு நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை நிலவேம்பு கிடைக்கின்றது. இரண்டையும் சேர்க்கலாம். குணத்தில் மாறுபாடு இல்லை. நல்ல குளிர் காய்ச்சல் இருக்கும்போது பழச்சாறு அனுபானத்துடன் சாப்பிடுவதைவிட தனி வெந்நீரில் சாப்பிடுவதே நல்லது. காய்ச்சல் தடுப்பிற்காக இதை உபயோகிக்கும் போதும், காய்ச்சல் இல்லாதபோதும் பழச்சாறு அனுபானம் நல்லதே.

மேற்குறிப்பிட்ட இந்த கை வைத்தியமுறை நமக்கு காய்ச்சல் வராமல் ஏற்படக் கூடியதொரு பாதுகாப்பைத் தருவதாக இருப்பினும், மற்றவரிடமிருந்து பரவக் கூடிய  கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க ஒரு சில தடுப்புமுறைகளாகிய முகத்தை மூக்கோடு சேர்த்து மறைத்துக் கொள்ளும் துணியைப் பொதுஇடங்களில் அணிந்து கொள்வது, இருமல் மற்றும் தும்மும் நபரிடமிருந்து இரண்டு அல்லது மூன்றடியாவது தள்ளி நின்றுகொள்வது, பொது இடங்களில் பயன்படுத்தக் கூடிய நாற்காலி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலைகளில் கைகளை நன்றாக சோப்புப் போட்டு தண்ணீரால் கழுவிக் கொள்ளுதல் போன்றவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் தற்சமயம் பரவி வரும் காய்ச்சல்களிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். உடல் வலுவைக் கூட்டக் கூடிய வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடக்கூடிய உணவு வகைகளாகிய மிளகு, சீரகம், பூண்டு போட்டுத் தயாரித்த ரசம், கருவேப்பிலைத் துவையல், மோர்க்காய்ச்சி எனப்படும் மோரை லேசாக சூடுசெய்து மஞ்சள்தூள் சேர்த்து நல்லெண்ணெய்யில் தாளிதம் செய்யப்பட்ட ஓமம் கலந்த மோரை உணவாகக் கொள்ளுதல், சமச்சீரான வகையில் அறுசுவைகளையும் அன்றாடம் உணவில் சேரும்படி அமைத்துக் கொள்ளுதல் ஆகியவை நோய் எதிர்ப்புசக்தியை நமக்கு நன்றாக வளர்த்துத் தரும்.

இவ்வாறு மருந்தையும், உணவையும், நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அரண்களாக நாம் பயன்படுத்தும் விதத்தின் மூலமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்து நீங்கள் குறிப்பிடும் காய்ச்சல்கள் வராமல் தக்க பாதுகாப்பைப் பெறலாம்.

 (தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.