திரைக் கதிர்
சூர்யா, விவேக் ஓபராய் நடித்த "ரத்த சரித்திரம்' படத்தை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. மூன்றாவது ஹீரோவாகத் தான் நடித்திருந்த "கம்பெனி' படத்தின் 2-ஆம் பாகத்தை தயாரித்து நடிக்க தற்போது


சூர்யா, விவேக் ஓபராய் நடித்த "ரத்த சரித்திரம்' படத்தை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. மூன்றாவது ஹீரோவாகத் தான் நடித்திருந்த "கம்பெனி' படத்தின் 2-ஆம் பாகத்தை தயாரித்து நடிக்க தற்போது எண்ணியுள்ளார் விவேக் ஓபராய். இதன் பின்னர் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சிறு பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து தயாரிக்க உள்ளார். இது தொடர்பாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள விவேக் ஓபராய்... ""13 வருடங்களுக்கு முன் நான் நடித்த "கம்பெனி' படத்தில் சந்து பாய் என்ற ரவுடி வேடம் ஏற்றேன். இப்போதுள்ள நிலையில் அதுபோன்ற வேடங்கள் எனக்குப் பொருந்தி வரும் என ரசிகர்களும் நினைக்கிறார்கள். எனவே கம்பெனி படத்தின் 2-ஆம் பாகத்தை தயாரித்து நடிக்க உள்ளேன். இப்படத்தின் தயாரிப்பு உரிமைகளைப் பெறுவதற்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல் பாகத்தை வர்மா இயக்கியிருந்தார். இந்தப் படத்தையும் அவர் இயக்குவார? என்பது தெரியவில்லை. அவர் இப்போது எந்த நிலையில் இருப்பார் என்பது எனக்கு தெரியாது'' என பதிலளித்துள்ளார் ஓபராய்.

மறைந்த மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நாளை இசை அஞ்சலி செலுத்துகிறார் இளையராஜா. "என்னுள்ளே எம்.எஸ்.வி' என்ற பெயரில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.வி.யின் சாகாவரம் பெற்ற பாடல்கள் இசைத்து பாடப்படவுள்ளன. ""விசு அண்ணனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லாருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்து செல்கின்ற உணர்வைக் கொண்டு வருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர்'' என அறிவித்துள்ளார் இளையராஜா.

பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கியுள்ள சிம்புவின் "வாலு' படத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே சிம்பு வெளியிட்டிருந்த எஸ்.எம்.எஸ்.ஸில் ""வாலு' கண்டிப்பாக இந்த மாதத்தில் வெளியாகும்'' என நம்பிக்கை தெரிவித்திருந்தார். படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி இருந்த டி.ஆரும் ""படம் கண்டிப்பாக வரும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களோடு சேர்ந்து இன்னொரு ஹீரோவும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வேறு யாரும் இல்லை. சிம்புவின் போட்டியாளராகக் கருதப்படும் தனுஷ்தான். தடை பற்றி செய்தி அறிந்ததும் சிம்புவை தொடர்பு கொண்டு விசாரித்த தனுஷ், அந்த உரையாடல் குறித்த விவரங்களை இணைய தளப் பக்கத்திலும் வெளியிட்டார். ""சிம்புவிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் நம்பிக்கை இழக்கவில்லை. அந்தப் பிரச்னையை அவர் நம்பிக்கையுடன் அணுகுகிறார். அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளேன். ஆண்டவன் அருள் அவருக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். அதே போன்று தனுஷின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறியுள்ளார் சிம்பு.

கோலிவுட் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாக்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் சார்மி. இப்போது அங்கேயும் பின்னடைவு. கடந்த 2 வருடங்களாக அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வருகின்றனர். ""இன்னும் சில படங்களின் வெற்றிகளோடு திருமண வாழ்க்கைக்குத் திரும்புகிறேன்'' என்றவர் நெருங்கிய நண்பரான இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்கிய "ஜோதி லெட்சுமி' படத்தில் நடித்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக திரையுலகில் பேச்சு நிலவி வருகிறது. புரிஜெகந்நாத் இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பதாக இருந்தது. அப்படம் திடீரென கைவிடப்பட்டதால், சார்மி அது குறித்த அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிட்டார். பின் அது தவறான தகவல் என தெரிந்ததும் தயாரிப்பு தரப்பிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் "ஜோதி லெட்சுமி' படம் வெளியாகி தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சார்மி பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். இதனால் இப்போது சார்மியின் திருமணப் பேச்சு சூடு பிடித்துள்ளது.
தன் ஆரம்ப கால சினிமாக்களில் தவறாமல் ஒரு பாடலைப் பாடி விடுவார் விஜய். பின்னர் இந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார். இது "துப்பாக்கி' படம் மூலம் மீண்டும் தொடங்கியது. "துப்பாக்கி' படத்தில் ""கூகுள் கூகுள்...'' பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து "தலைவா', "ஜில்லா', "கத்தி' என வரிசையாக எல்லாப் படங்களிலும் பாடி வருகிறார் விஜய். சிம்புதேவன் இயக்கத்தில் தற்பொழுது நடித்து வரும் அவர் "புலி' படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். திரையில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ஸ்ருதிஹாசனும் அவருடன் சேர்ந்து இந்தப் பாடலை பாடியிருப்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம். கருப்பு - வெள்ளை காலகட்டத்திற்கு பிறகு நாயகன் நாயகி இருவருமே பின்னணிப் பாடலைப் பாடி திரையில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் "3' படத்தில் ""கண்ணழகா...'' பாடலுக்கு தனுஷுடன் இணைந்து பாடியிருந்தார் ஸ்ருதி. அப்படத்துக்குப் பிறகு இப்போது "புலி' படத்துக்காக விஜய்யுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

மில்கி, ஒயிட் என தமன்னாவுக்கும், சுவீட்டி என அனுஷ்காவுக்கும் திரையுலக நண்பர்கள் வட்டாரத்தில் செல்லப் பெயர்கள் உண்டு. தனக்கு நெருக்கமான ஒவ்வொரு ஹீரோயினுக்கும் செல்லப் பெயர் வைத்து நடிகைகள் அழைத்து வருகிறார்கள். இதே பாணியில் ஹீரோக்களுக்கும் செல்லப் பெயர் வைப்பது உண்டு. ஆர்யாவை சக ஹீரோயின்கள் பலரும் ஜானி என்றே அழைப்பார்கள். இந்தப் பெயரை அவருக்கு முதன் முதலில் வைத்தது நயன்தாரா. அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் ஆர்யாவின் நட்பு வட்டத்தில் இருப்பதால் ஆளுக்கொரு பெயரில் ஆர்யாவை அழைக்கிறார்கள். அனுஷ்கா ஆர்யாவை டேனி என்று அழைக்கிறார். இப்போது வேறொரு பெயரில் ஆர்யாவை அழைக்கிறார் த்ரிஷா. ஆர்யாவுக்கு த்ரிஷா மணி என பெயர் சூட்டியிருக்கிறார். தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கங்களில் ஆர்யாவை மணி என்றே செல்லமாக அழைக்கிறார் த்ரிஷா. இதேபோன்று நயன்தாரா, சமந்தா, அஞ்சலி, காஜல் உள்ளிட்டோர் ஒரு சில ஹீரோக்களுக்கு ரகசிய பெயர் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...