/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : தலைக்குக் குளித்தால் காய்ச்சல்!

எனது வயது 37. முதுகெலும்பில் உள்ள வில்லையில் மூன்று இடங்களில் தேய்வு இருக்கிறது. தலைக்குக் குளித்தால் உடனே காய்ச்சல் போல் உடம்பு முழுவதும் வலி ஏற்படுகிறது. மார்புகளில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:26 am

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 37. முதுகெலும்பில் உள்ள வில்லையில் மூன்று இடங்களில் தேய்வு இருக்கிறது. தலைக்குக் குளித்தால் உடனே காய்ச்சல் போல் உடம்பு முழுவதும் வலி ஏற்படுகிறது. மார்புகளில் சாதாரண கட்டி உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர் கூறுகிறார். இவை அனைத்தும் தீர ஆயுர்வேத சிகிச்சை என்ன?

-ஹாஜா மைதீன், தக்கலை.

முதுகு வில்லை தேய்மானத்தால் ஏற்படும் வலிக்கு, ஆயுர்வேத மூலிகை மருந்துகளாகிய நாராயண தைலம், சஹசராதி தைலம், முறிவு எண்ணெய், மஹாமாஷ தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக ஊற்றி வைப்பதும் அல்லது பஞ்சினால் முக்கி தேய்மானம் ஏற்பட்டுள்ள பகுதியில் போட்டு வைப்பதும் நல்லது. உடல் பருமன் இருக்கும்பட்சத்தில் இந்த தைல மருந்துகளின் பயன்பாடானது எடுத்த எடுப்பிலேயே பயன் தராதென்பதால் வில்லைப் பகுதியில் மூலிகை இலைகளைக் கொண்டோ அல்லது மூலிகைப் பொடி மருந்துகளாகிய கோஷ்டம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றைக் கொண்டோ சூடாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தேய்மானம் ஏற்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள கொழுப்பு, நீரடைப்பு போன்றவை விலக்கப்பட்டு அப்பகுதியில் வறட்சியை ஏற்படுத்தி அதன் பின்னர் மூலிகைத் தைலங்களை ஊற விடுவதால் நல்ல பலன் பெறலாம்.

மஹாராஸ்னாதி, சஹசராதி, அஷ்டவர்க்கம், ராஸ்னாசப்தகம், சப்தஸாரம், ப்ரஸாரின்யாதி போன்ற ஆயுர்வேத கஷாய மருந்துகளின் பிரயோகம் வில்லைப் பகுதிகளை வலுப்படுத்தக் கூடியவை. இதில் மருத்துவ ஆலோசனை மிகவும் தேவை. ஆயுர்வேத மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதன்

மூலம் குடல் சுத்திமுறைகளான எனிமா சிகிச்சை மூலம் குடல் வாயுவையும், மலத்தையும் வெளியேற்றுவதால் மேற்கூறிய கஷாய மருந்துகளின் செயல்திறனானது விரைவில் குடல்வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லைகளை வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

இம்மருந்துகளின் உள் பிரயோகத்தில் மிகுந்த கவனம் தேவை இருப்பதால் வில்லைகளை மேலும் மேலும் வலுவிழக்கச் செய்யக் கூடிய வறட்சியும் குளிர்ச்சியும் தரக்கூடிய வாயு பண்டங்களை உணவில் சேர்க்காதிருப்பதும் இதே குணங்களைத் தரக்கூடிய செயல்களையும் தவிர்ப்பது மிகவும் அவசியம். தலைக்கு தண்ணீர் விட்டுக் குளிப்பதால் ஏற்படும் காய்ச்சல் போன்ற உணர்வு, உடல் வலி ஆகியவை மாற உச்சந்தலையில் ராஸ்னாதி சூரணம், ஏலாதி சூரணம் போன்றவை குளித்தபிறகு தேய்த்துக் கொள்வதும் அவற்றையே இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கி நெற்றியில் பற்றிடுவதும் நல்லதே. ஆயுர்வேத மருந்துக்கடைகளில் இந்த சூரண மருந்துகள் விற்கப்படுகின்றன. மார்பகக் கட்டி கொழுப்பினுடைய அடைப்பினால் ஏற்பட்டிருக்கக் கூடும். புலால் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. கடுகெண்ணெய்யை சூடேற்றி அப்பகுதியில் தடவுவதும், சிறிது உள்ளுக்குச் சாப்பிடுவதும் கொழுப்புக் கட்டியை கரைக்க உதவும்.

உச்சந் தலையில் கார்பாஸாஸ்த்யாதி, க்ஷீரபலா, அம்ருதாதி போன்ற தைல மருந்துகளில் ஒன்றை வெதுவெதுப்பாக தேக்கி வைப்பதன் மூலம் முதுகெலும்புப் பகுதிகளின் இடையே அமைந்துள்ள வில்லைகளுக்குத் தேவையான அளவு நெய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்பதால் இந்த சிகிச்சை முறையும் உங்களுக்கு பயனளிக்கக் கூடும். தலைப்பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை நரம்பு மண்டலங்களுக்கு இவை ஏற்படுத்தித் தருவதால் தலைக்குக் குளித்த பின்னர் ஏற்படும் காய்ச்சல் உணர்வு மற்றும் உடல்வலி ஆகியவையும் இந்த சிகிச்சையின் மூலமாக குணப்படுத்தலாம். மூக்கில் விடும் அனு தைலம் எனும் எண்ணெய்யினால் மூளை நரம்புகளில் நீர் பற்றாதவாறு ஒரு பாதுகாப்புத் தன்மையை அது ஏற்படுத்தித் தரும். இப்படி உள்ளும் புறமும் சிகிச்சைகளைச் செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மூன்று உபாதைகளிலிருந்தும் ஒரு நிவாரணம் ஏற்படக்கூடும். உணவு மற்றும் செயல்களில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த சிகிச்சையோடு சேர்த்து மேற்கொண்டால் நிவாரணம் என்பது தற்காலிகம் என்ற நிலை அல்லாமல் நிரந்தரம் என்ற வகையிலும் ஏற்படக்கூடும்.

(தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.