/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மழை நாட்களில் தலையில் நீர்க்கோர்வை ஏன்?

தலையைச் சார்ந்த தற்பகம் எனும் கபம் மற்றும் வயிற்றைச் சார்ந்த க்லேதகம் எனும் கபம் இவ்விரண்டும் மழை மற்றும் குளிர்நாட்களில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:44 am

எஸ். சுவாமிநாதன்

மழை மற்றும் குளிர் நாட்களில் ஏற்படும் ஈரவாடையினால் எனக்கு தலையில் நீர்க்கோர்வை ஏற்பட்டு கனத்துக் கொள்கிறது. தலைவலியும் ஏற்படுகிறது. மழைநாட்களில் பசி மந்தமாகிறது, அதனால் வாயுத் தொல்லை, தூக்கமின்மை போன்ற உபாதைகளால் கஷ்டப்படுகிறேன். இவை மாற வழி என்ன?

எஸ்.கோபி, திருவள்ளூர்.

தலையைச் சார்ந்த தற்பகம் எனும் கபம் மற்றும் வயிற்றைச் சார்ந்த க்லேதகம் எனும் கபம் இவ்விரண்டும் மழை மற்றும் குளிர்நாட்களில் ஏற்படும் ஈரவாடையினால் உறைந்துபோகும் தன்மையை அடைகின்றன. உறைந்த இந்த கபங்களை உடல்சூடானது கரைப்பதற்கு எடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. தன் முயற்சியில் சிறிதளவு அது வெற்றி பெற்றாலும் தலையிலுள்ள கபமானது லேசாக உருகுகிறது. உருகும் இந்த கபம் மூக்கில் நீர்க்கோர்வையாக மாறி வெளியேறும்படி தள்ளப்படுகிறது. ஆனாலும் வயிற்றிலுள்ள க்லேதக கபத்தை உருக்குவது என்பது சற்று கடினமான காரியம்தான். அதனால் ஏற்படும் மந்தமான பசித் தீயானது உடலை கனக்கச் செய்யும். உண்ட உணவு நன்றாகச் செரிக்காது. செயல்களில் மந்தமான தன்மையை அது ஏற்படுத்தும்.

இதுபோன்ற ஒரு தர்மசங்கடமான நிலையில் உணவும் மருந்தும் கபத்தை உருக்குவதாகவும், வெளியேற்றக் கூடியதாகவும் பசியைத் தூண்டக் கூடியதாகவும் அமைய வேண்டும். ஆயுர்வேத மருந்துகளில் வரணாதி கஷாயம், குக்குலு திக்தகம் கஷாயம் போன்றவை உதவக் கூடியவை. உடல் தன்மைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட நல்ல பலனை இவை விரைவாக ஏற்படுத்தித் தரும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்பொழுது சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுவது உசிதமானது என்பது பொதுவாக ஆயுர்வேத மருத்துவர்களின் கோட்பாடு. அதற்குக் காரணம் தேன் உட்புற வறட்சியை ஏற்படுத்தி குழாய்களில் பற்றியுள்ள கபத்தைச் சுரண்டச் செய்யும் சிறப்பைப் பெற்றிருப்பதனால்தான். இதில் எதைக் காலையில் சாப்பிடுவது, மாலையில் சாப்பிடுவது என்பது உங்களுடைய உடல் தன்மைக்கேற்ப மருத்துவரால் மட்டுமே கணித்துக் கூற இயலும்.

உணவில் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவை கபத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், வழுவழுப்பு, கொசகொசப்பு, நிலைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தக் கூடியவை. அதிலும் முக்கியமாக பசியையும் மந்திக்கச் செய்யும் இனிப்புச் சுவையானது நிலம் மற்றும் நீரின் மகா பூதங்களின் ஆதிக்கத்தினால் ஏற்படுபவை என்பதால் பசித்தீக்கு அனுகூலமாக அதனை மேலும் மந்திக்கச் செய்யும் தன்மையுடையதால் இனிப்புப் பண்டங்களையும், இனிப்பு சார்ந்த பழங்களையும் நீங்கள் மழை மற்றும் குளிர் நாட்களில் அறவே தவிர்த்திடல் வேண்டும். புளிப்பு, உப்புச் சுவை அடங்கியுள்ள நெருப்பானது பசித் தீக்கு சற்றே அனுகூலமாக இருப்பதால் மிதமாகச் சேர்க்கலாம். காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை அவற்றில் பொதிந்துள்ள

பஞ்சபெளதிக ஆதிக்கத்தினால் கபத்திற்கு நேரெதிரிடையாக வேலை செய்யக்கூடியவை என்பதால் இந்தச் சுவைகளை அளவோடுச் சேர்க்கலாம். மிளகு சேர்த்த சூடான நெய்ப் பொங்கல், கொத்துமல்லி சட்னியுடனும், தேங்காய் சட்னியுடனும் காலை உணவாகச் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துவது நலம். அயங்காயப்பொடி அல்லது தனியா, மிளகு, சீரகப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, பருப்புப் பொடி, எள்ளுப்பொடி போன்றவை ஒன்றிரண்டு தயாரித்து சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து கொண்டு சிறிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித்தழை போன்றவை கடுகு தாளித்து சேர்க்கப்பட்ட தயிர் அல்லது சுட்ட கத்தரிக்காயினால் தயாரித்து அதில் இந்தப் பொடி சாதத்தை தோய்த்து மதிய உணவாகச் சாப்பிட்டு அதன் மேலே அன்னாசி ரசம் அல்லது மைசூர் ரசம் சூடான சாதத்துடன் சாப்பிடுவதும் ஆரோக்கியத்தை உங்களுக்கு மேம்படுத்தித் தரும். ஏற்பட்டுள்ள பிரச்னைகளையும் ஒருவாறு சமாளிக்கலாம்.

இச்சமயங்களில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துவது நல்லது. அதிலும் முக்கியமாக கோரைக்கிழங்கு, சுக்கு சேர்த்து வெந்நீர் அருந்துவது நலம். நெற்றியில் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ மூன்றையும் வெற்றிலைச்சாறு சேர்த்து அரைத்து சூடாக்கி இரவில் பற்றிடவும். இப்படி உணவு, மருந்து, செயல்பாடு ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் மூலம் உங்களுக்கு தீர்வானது கிடைக்கும்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.