/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உமிழ்நீர்ச் சுரப்பு குறைந்து போனால்...!

எந்த வகையான உணவுகளால் மேற்குறிப்பிடும் உபாதை ஏற்படுகிறது என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாகவே வயிற்றிலுள்ள பாசகம் எனும் பித்தத்தையும், இரத்தம் எனும் தாதுவையும் கெடுக்கக் கூடிய உணவு வகைகளால்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:17 am

எஸ். சுவாமிநாதன்

எனது மாமாவுக்கு 47 வயதாகிறது. எந்தவித தீய பழக்கங்களும் அவரிடம் இல்லை. சமீப காலமாக பதார்த்தங்கள் சாப்பிடும்போது நாக்கிலும் வாயிலும் திடீரென சிறிய கொப்புளம் தோன்றி பெரிதாகிறது. அதைக் கிள்ளிவிட்டால் இரத்தம் கொட்டுகிறது. சில நாட்களில் அந்தப் புண் தண்ணீர் கூட அருந்த முடியாமல் அவஸ்தைப்படுத்தி, பின் ஆறி விடுகிறது. டாக்டர்கள் இது வேக்காளத்தினால் வரும் கொப்புளம் என்கிறார்கள். இதனால் மிகுந்த அவதியுறுகிறார். இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வு என்ன?

த.லதா, அறந்தாங்கி.

எந்த வகையான உணவுகளால் மேற்குறிப்பிடும் உபாதை ஏற்படுகிறது என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவாகவே வயிற்றிலுள்ள பாசகம் எனும் பித்தத்தையும், இரத்தம் எனும் தாதுவையும் கெடுக்கக் கூடிய உணவு வகைகளால் உடலில் கொப்புளங்கள் எளிதாகத் தோன்றும் என்று ஸூச்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் தான் இயற்றிய "ஸூச்ருத ஸம்ஹிதை' யில் குறிப்பிடுகிறார்.   காரம், புளி, உப்புச் சுவை அதிகம் சேர்ந்துள்ள பண்டங்கள் பித்தத்தையும் இரத்தத்தையும் எளிதாகக் கெடுக்கக் கூடியவை. மேலும், இதுபோன்ற பண்டங்களை உணவாக ஏற்று பகல் நேரத்தில்  உறங்குவது, பால் கலந்த டீ, காபி போன்ற பானங்களைப் பருகுவது, குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம் போன்ற வகையறாக்களை உட்கொள்வது, இதனால் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தும் களேபரத்தினால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையானது நீர்த்தோ அல்லது சீற்றமடைந்தோ இரத்தத்தினுள் ஊடுறுவி தேகமெங்கும் சஞ்சரிக்கும். அந்தச் சமயத்தில் உடலின் வலுவிழந்த பகுதிகளில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தினால் கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தங்களுடைய மாமாவிற்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதையானது ஒருவகையான பித்த ரத்த சம்பந்தமுடையது என்பதை நாம் ஊகித்தறியலாம்.

மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்ப்பதோடு, உணவில் கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்ட பதார்த்தங்களை அவர் உணவாக ஏற்பது நலம் தரும்.

கொப்புளங்கள் வராதிருக்கும் வகையில் செய்யக்கூடிய நன்னாரி வேர்ப்பட்டை, கடுக்காய்த்தோல் மற்றும் சுக்கு ஆகியவற்றை 4:2:1 என்ற வகையில் சேகரித்து எல்லாம் சேர்த்து சுமார் 60 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு 250 மில்லி லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி அது நன்றாகக் குளிர்ந்ததும் காலையில் 125 மில்லி லிட்டரும், மாலையில் 125 மில்லி லிட்டரும் அரை ஸ்பூன் (2.5 ml) சுத்தமான தேன் சேர்த்து வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் வரை சாப்பிட பித்த ரத்தங்களால் ஏற்படக் கூடிய பல உபாதைகளையும் நீக்கிக் கொள்ள முடியும். இரத்தத்தில் ஏற்படக்கூடிய பித்த உபாதைகளை நாக்கில் கொப்புளமாக சந்திக்கக் கூடிய நிலைகளில் கடுக்காய்த் தோல் ஒரு இன்றியமையாத மருந்தாகக் கூறலாம். கடுக்காய்த் தோலை சுமார் 15 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் நன்கு வேக வைத்து 125 மில்லி லிட்டராக அது குறுகியதும், குளிர்ந்த பிறகு வடிகட்டி சிறிது சிறிதாக வாய் கொப்பளித்து வர நாக்கு மற்றும் வாய்ப் பகுதிகளில் ஏற்படக்கூடிய கொப்புளங்கள் மற்றும் இரத்தம் சம்பந்தமான ஏனைய உபாதைகளையும் அது வாயிலிருந்து போக்கிவிடும்.

பற்களின் கூரான தன்மையினாலும், வாயினுடைய உமிழ்நீர் சுரப்பு குறைந்து போவதினாலும் வாயில் ஏற்படும் வேக்காளத்தினால் நீங்கள் குறிப்பிடும் கொப்புள உபாதையானது தலை தூக்கக் கூடும். பல் மருத்துவரிடம் சென்று பற்களின் கூரான தன்மையை நீக்குவதும், வாயினுடைய உமிழ்நீர் சுரக்கும் ஊற்றுக் குழியை மேம்படுத்தும்வகையில் சிறிது பாலில் தேன் கலந்து வாய் கொப்பளிப்பதும், தேனை மட்டுமே வாயிலிட்டுக் கொப்பளிப்பதும் உபகாரமாய் இருக்கும். கருங்காலிக்கட்டை, நால்பா மரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேலம் பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதால் வாய்க் கொப்பளங்கள் ஏற்படாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இவை வாயில் உள்ள பல், மேல் அண்ணம், உமிழ்நீர், நாக்கு ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடிய பல உபாதைகளையும் நீக்கக் கூடிய திறன் உடையது.

இரத்தப்பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, தோல் அலர்ஜி பரிசோதனை போன்றவை இவருடைய விஷயத்தில் செய்து கொள்ளப்பட வேண்டியவை. அவற்றின் மூலமாக ஏதேனும் அணுக்கிருமிகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அழிக்கக் கூடிய சிகிச்சைகள் எல்லாம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆயுர்வேத மருந்துகளாகிய திக்தகம், மஹாதிக்தகம் எனும் நெய்மருந்துகள் அரிமேதஸ் எனும் வாய் கொப்பளிக்கக் கூடிய மூலிகைத் தைலம், அணு தைலம் எனும் மூக்கில் விடக்கூடிய தைல மருந்து, இளநீர்க்குழம்பு எனும் கண்சிகிச்சை மருந்து, வசாலசுனாதி காதில் விட்டுக் கொள்ளக் கூடிய தைல மருந்து போன்றவற்றின் மூலமாக வாயினுள் வரக்கூடிய கிருமித் தொற்று மற்றும் பித்த ரத்த உபாதைகளை இந்த சிகிச்சைகளின் வாயிலாக நம்மால் பெருமளவு குறைக்க முடியும்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.