திரைக்கதிர்
அவர் ஹீரோயின்... இவர் ஹீரோயின்... என வழக்கம் போல் எதிர்பார்ப்புகள் எகிறி நிற்க, நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து


அவர் ஹீரோயின்... இவர் ஹீரோயின்... என வழக்கம் போல் எதிர்பார்ப்புகள் எகிறி நிற்க, நித்யாமேனனை ஒப்பந்தம் செய்து சத்தமில்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார் மணிரத்னம். "கடல்' படத்தையடுத்து மணிரத்னம் இயக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கதாநாயகன் இடத்துக்கு பல்வேறு நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, யாரும் எதிர்பாராத வகையில் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து கதாநாயகிக்கான தேர்வு நடந்து வந்தது. "பூ' பார்வதி, பார்வதி ஓமனக்குட்டன், கார்த்திகா உள்ளிட்டோரின் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருந்த நிலையில், "பூ' பார்வதிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று மனம் மாறிய மணிரத்னம் கடந்த சில வாரங்களுக்கு முன் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கினார். காதலை முதன்மைப்படுத்திய கதை என்பதால், படப்பிடிப்பின் முதலாவதாக பாடல் காட்சிகளைப் படமாக்கினார். முதற்கட்ட படப்பிடிப்பை 5 நாள்களுக்கு வகுத்திருந்த மணிரத்னம் பாடல் காட்சிகளைத் தவிர்த்து கதைப்படி துல்கர்சல்மான், நித்யாமேனன் சந்தித்து பேசும் காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளார்.
டாப்ஸி என்றால் "தவம் இருப்பவள்' என்று அர்த்தம். டாப்ஸியின் மூதாதையர்கள் வாரணாசி பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் அதன் நினைவாக இந்தப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டது. ""சவுத் இந்தியா ஹீரோயின்களில் நான்தான் பெஸ்ட் என்று பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தவம் இருக்கிறேன்'' எனவும் வைத்துக் கொள்ளலாம் என பெயருக்கு புது அர்த்தம் கொடுப்பார் டாப்ஸி. படிப்பில் பெரும் சுட்டியாக இருந்த டாப்ஸிக்கும் சினிமாவுக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை. படிப்புக்கு ஏற்ப சாஃப்ட்வேர் வேலை கிடைக்க, ஆர்வமாகப் போய் வந்தார். காலை 9 மணிக்கு போய் மாலை 5 மணிக்கு திரும்புகிற அந்த வேலை டாப்ஸிக்கு சுத்த போர். என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு வந்தது விளம்பர பட வாய்ப்பு. வாய்ப்பை தக்க வைத்து சினிமாவுக்குள் விஜயமானார். இப்போதும் சாஃப்ட்வேர் வேலை பற்றி பேச்சு எழுப்பினால், ""ஆமாம், அதை மட்டும் மிஸ் பண்றேன். மற்றபடி... ஐ லவ் சினிமா'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் டாப்ஸி.
தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்துக்கு போனால் எழுந்து நின்று வரவேற்பார் கவுண்டமணி. இது வயது வித்தியாசங்களை கடந்து அவர் கொடுக்கும் மரியாதை. சிறுவர்களாக இருந்தாலும் கூட நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார். உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் இந்தப் பழக்கத்தை கறாராகப் பின்பற்றி வந்திருக்கிறார். மனைவியின் பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணுக்கு திருமணம் நடந்த போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விஷயமே வெளியில் வந்தது. அந்த அளவுக்கு மீடியா வெளிச்சம் படாதவர். மீடியாக்களோடு தொடர்பே இல்லாமல் இருந்தாலும், இப்போதும் சில பத்திரிகையாளர்களோடு பேசி வருகிறார். அவ்வப்போது அவர்களைத் தொடர்பு கொண்டு எந்த படம் வந்திருக்கிறது? நடிகர்கள் யார்? என்னென்ன அம்சங்கள்? என்பதையெல்லாம் கேட்டு விட்டு, அந்த நேரத்துக்கான டைமிங் காமெடியைத் தட்டி விட்டு சிரிப்பது கவுண்டமணியின் வழக்கம். மூட நம்பிக்கைகளின் தீவிர எதிர்ப்பாளர் கவுண்டமணி. ஆனால் அதைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல மாட்டார். தன் அளவுக்கு மட்டும் பார்த்துக் கொள்வார். உங்கள் பிறந்த நாள் எப்போது? என கேட்டவருக்கு... . ""அவனவன் எங்கு எங்கோ போய் கொண்டிருக்கிறான். இப்போ போய் பிறந்த நாளு. அந்த நாளு... போங்கய்யா. நான் பொறந்த நாளு, எனக்கே தெரியாது'' என்று சாட்டை சுழட்டி இருக்கிறார் கவுண்டமணி.
ஒவ்வொரு படத்திலும் சர்ச்சைக்குரிய கதைகளைத் தொட்டு பிரச்னைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தற்போது அவர் இயக்கி வரும் டோலிவுட் படத்துக்கு "ஸ்ரீதேவி' என பெயரிட்டுள்ளார். இதற்கான விளம்பர போஸ்டரில் ஆசிரியை - மாணவன் இடையேயான உறவைத் தவறாகச் சித்திரிக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆசிரியை ஒருவரைத் தவறான கண்ணோட்டத்துடன் மாணவன் பார்ப்பது போன்ற அந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு சிக்கல்களும் உருவாகியுள்ளன. ஏற்கெனவே இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ""தன் பெயரை கெடுக்கும் விதமாக ஆபாச படத்துக்கு தனது பெயரை தலைப்பாக வைத்தது தவறு. அதற்கு ராம்கோபால் வர்மா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அப்பெயரை நீக்கி விட்டு வேறு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்'' என நடிகை ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி ரசிகர்கள் வர்மாவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ராம்கோபால் வர்மாவின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
"கத்தி' படத்துக்கு "யு' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. படப்பிடிப்பைத் தொடங்கியது முதல் அடுத்தடுத்து சர்ச்சைகளைச் சந்தித்து வந்த "கத்தி' படக்குழு, இப்போது ஒரு வழியாக தீபாவளி ரிலீஸூக்கு தயாராகி உள்ளது. ""படத்தை வெளியிட விடமாட்டோம்...'' என தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புகளைக் காட்டி வந்தது. இதனால் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் பாடல் வெளியீட்டு விழா நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தடைகளை மீறி உரிய பாதுகாப்புகளுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய நடிகர் விஜய், ""நான் தியாகி கிடையாது. ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது...'' என பேசி பரபரப்பை உண்டாக்கினார். இதையடுத்தும் படத்துக்கு தொடந்து எதிர்ப்புகள் இருந்ததால் தணிக்கையில் படத்துக்கு சிக்கல் வரும் என்ற முணுமுணுப்புகள் எழுந்தன. கடந்த வாரம் படத்தை முழுவதுமாக பார்த்த தணிக்கைக் குழு ஒரு கட் கூட இல்லாமல் "யு' சான்றிதழ் கொடுத்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோரின் தரப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
ஆதிலெஷ்மி பிலிம்ஸ் சார்பில் உருவாகி வரும் படம் "ஆக்கம்.' இப்படத்தின் மூலம் சதீஸ்ராவன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக வைதேகி நடிக்கிறார். ரஞ்சித், தருண்குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மு.களஞ்சியத்தின் உதவியாளர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...