திரைக்கதிர்
எந்தவொரு கதாநாயகனையும் மனதில் வைத்து கதை எழுதும் பழக்கம் பாரதிராஜாவுக்கு இருந்ததில்லை. ஆனால் "முதல் மரியாதை' சிவாஜிக்காக


எந்தவொரு கதாநாயகனையும் மனதில் வைத்து கதை எழுதும் பழக்கம் பாரதிராஜாவுக்கு இருந்ததில்லை. ஆனால் "முதல் மரியாதை' சிவாஜிக்காக எழுதப்பட்ட கதை. கதாசிரியர் செல்வராஜுடன் இணைந்து திரைக்கதை அமைத்து முடித்ததும், நேராக "அன்னை இல்லம்' சென்று சிவாஜியை சந்தித்தார் பாரதிராஜா. ""அண்ணே, உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது. மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்க கூட வேணாம். நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்காருங்க, எந்திரிங்க. நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க... அது போதும்'' என பாரதிராஜா சொல்ல குறுகுறுவென பார்த்தார் சிவாஜி. படப்பிடிப்பு தொடங்கியது. ""உனக்கு என்ன வேணுமோ, எடுத்து கொள்'' என்று மட்டும் சொல்லி இயக்குநருக்கு தேவையானதை கொடுத்தார் சிவாஜி. ""ஏன்டா காட்டு பயலே. எப்படிடா இப்படிப் படம் எடுத்த? இப்பதான்டா தெரியுது. ஷூட்டிங்கில் நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம். இது சாதாரணப் படம் இல்லடா... இண்டர்நேஷனல் கிளாக்ஸிக்டா'' படத்தின் பிரிவ்யூ ஷோ அன்று பாரதிராஜாவை இறுக்க கட்டிப்பிடித்து சிவாஜி சொன்ன வார்த்தைகள் இவை.
தங்களால் பயன்படுத்தப்படும் உடைகளின் லேபிள்களில் விலங்கின் தோல் அல்லது பாகம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனித்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நடிகை இலியானா. விலங்குகள் காப்பகத்துக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இலியானா சமீபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக அவர் பங்கேற்றுள்ள விளம்பரத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்து இலியானா பேசியுள்ளார். இதே போல் த்ரிஷா, ஹன்சிகா, அசின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் விலங்குளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தில்லி மிருக காட்சி சாலையில் இரும்பு வேலிக்குள் தவறி விழுந்த வாலிபரை வெள்ளைப்புலி அடித்துக் கொன்றது. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த புலியை அடித்து கொல்ல வேண்டும் என்று பலர் குரல் எழுப்பினார்கள். ஆனால் அந்த புலிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பிரபலங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ""வெள்ளைப்புலியை கொல்வதற்காக ஒலிக்கும் குரல்களை கட்டுப்படுத்த வேண்டும்'' என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நடிகை த்ரிஷா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல் நடிகைகள் அமைரா, லாவண்யா திரிபாதி உள்ளிட்டோர் வெள்ளைப்புலிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
பைசல் சயீப் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் "மெயின் ஹூன் ரஜினிகாந்த்.' ஆதித்யா மேனன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை எதிர்த்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரஜினிகாந்த். ""எனது பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்'' என படத்துக்கு தடை கோரி இருந்தார். இதை ஏற்று ரஜினிகாந்த் என்ற தலைப்புடன் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் ""படத்தைப் பார்க்காமல் வழக்கு தொடர்ந்தது சரியல்ல. ரஜினியின் புகழை வெளியுலகுக்கு சொல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது'' என்று படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை ஏற்ற ரஜினிகாந்த் படத்தை பார்க்க சம்மதம் தெரிவித்ததாகவும், அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தை பார்க்க ரஜினிகாந்த் மறுக்கவே சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. ""ரஜினியோ அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாருமோ படத்தை பார்க்க சம்மதம் தரவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதன் வழிகாட்டுதலை பின்பற்றுவதே சிறந்த வழி'' என விளக்கம் அளித்துள்ளது ரஜினி தரப்பு.
எஸ்.கே.பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கலை வேந்தன்.' கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், நளினி, யுவராணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.கே.பரசுராம் கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்.. ""ஓவினாம் என்ற தற்காப்பு கலையை பின்னணியாக கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஓவினாம் கலையின் மாஸ்டராக பணிபுரியும் நாயகனுக்கு காதல். இதற்கிடையில் காதலி கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ். ஓவினாம் தற்காப்பு கலை என்பது ஜூடோ, குங்பூ, கராத்தே இந்த மூன்றின் கலவையாகும். இந்தக் கலையைப் பயன்படுத்தி வரும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் ஆர்.கே.பரசுராம்.
வேலை, பொருள், தேடல் என சென்னை மாநகர வாழ்க்கையில் தினமும் ஓடிக் கொண்டிருக்கும் ஐந்து நண்பர்கள் கிராமத்து வாழ்க்கையைத் தரிசிக்க இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம் ஒன்றுக்கு வருகின்றனர். தங்குவதற்கு பெரிய வசதிகள் இல்லாத அந்த கிராமத்தில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்கித் தங்குகின்றனர். கிராம மக்களுக்கு அமானுஷ்ய சக்திகள் நடமாடும் பகுதியாக இருக்கும் அந்த இடம், இவர்களுக்கு சர்வ சாதாரணமாகி விடுகின்றன. நாளடைவில் ஊர் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பேய் நடமாட்டத்தை உணர்கிறார்கள். இதையடுத்து நடக்கும் சம்பவங்கள் "மகாராணி கோட்டை' படத்தின் பரபர காட்சிகள். ரிச்சர்டு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனி பிரின்ஷ், நீனா குரூப்பா இருவரும் கதாநாயகிகள். "கும்கி' அஸ்வின், வையாபுரி, பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்க, இத்தனை வருட திரைப்பயணத்தில் முதன் முறையாக வில்லன் வேடம் ஏற்கிறார் நகைச்சுவை நடிகர் செந்தில். புதுமுகம் வினோத்குமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். யு.கே. முரளி இசையமைப்பில் சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தனமலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் "வின்' என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது.
""மணிரத்னம் பட வாய்ப்பு எனக்கு கனவு'' என பேட்டி தரும் ஹீரோயின்களுக்கு மத்தியில் அவர் படத்துக்கான கால்ஷீட் என்னிடம் இல்லை என கூறி மறுத்து இருக்கிறார் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கிய "முகமூடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாவர் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா, ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக "மொகஞ்சாதாரோ' படத்தில் நடித்து வருகிறார். ஹிருத்திக் ரோஷன் படம் என்றாலே வருடக் கணக்கில் படப்பிடிப்பு நடக்கும். அதற்கு ஏற்றவாறு தனது கால்ஷீட்டை வாரி வழங்கி இருக்கிறார் பூஜா. இதனால் புது படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் இருக்கிறார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேயிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் கால்ஷீட் இல்லை என்று மறுத்து விட்டார் பூஜா. ஏற்கெனவே மணிரத்னம் படத்தில் நித்யாமேனன் நடிப்பதாக இருந்தது. திடீரென்று அவரை அப்படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது மணிரத்னத்தின் படத்தில் நடிக்கவுள்ள துல்கர் சல்மானுக்கு ஏற்ற ஹீரோயினை தேடி வருகிறது படக்குழு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...