/

திரைக்கதிர்

நண்பர்களின் வட்டாரத்தில் இப்போதும் அதே குதூகல மனிதராக இருக்கிறார் கவுண்டமணி. தியாகராயர் அலுவலகம் பக்கம் போனால்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:26 am

ஜி. அசோக்

நண்பர்களின் வட்டாரத்தில் இப்போதும் அதே குதூகல மனிதராக இருக்கிறார் கவுண்டமணி. தியாகராயர் அலுவலகம் பக்கம் போனால் சத்யராஜ், அர்ஜூன் என தன் சக நடிகர்களுடன் சகஜமாக கவுண்டமணி கடந்து போவார். மாதத்தின் இரண்டொரு நாள்களில் எந்த வேலைகள் இருந்தாலும், மணிக் கணக்கில் அர்ஜூனை அங்கே பார்க்க முடியும். இருவரும் இணைந்து பேச ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாதாம். கார் டிரைவர் சென்று ""சாப்பாட்டுக்கு நேரமாச்சு...'' என்று சொன்ன பிறகும் இருவருக்குமான சந்திப்பு நீண்டு கொண்டிருக்கும். ""மனசும், உடம்பும் சோர்வாகி விடும் போது கவுண்டரைச் சந்தித்தால் புது உற்சாகம் கிடைக்கும்'' என்று சொல்லுவார்

அர்ஜூன். ""அர்ஜூன் நல்ல நண்பர். அவருடன் இருப்பது எனக்கும் பிடித்தமான ஒன்று'' என்று சொல்லி நட்பு பாராட்டுவார் கவுண்டமணி. தொடர் படப்பிடிப்புகளால் நேரடி சந்திப்பில் இல்லை என்றாலும், அலை பேசியில் வந்து விடுவார் சத்யராஜ். தனியறையில்

அலைபேசியில் பேசும் போது சத்யராஜ் சிரித்துக் கொண்டிருந்தால், தொடர்பில் இருப்பவர் கவுண்டமணியேதான்.

வெளிப்படையாகக் கருத்துக்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவது நடிகைகளின் வாடிக்கையாகி விட்டது. இந்த விஷயத்தில் ஸ்ருதி, சமந்தா இடையேதான் கடும் போட்டி. ""திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்'' என்று ஸ்ருதி அளித்த பேட்டியால் பரபரப்பு உருவானது. பின்னர் அதிலிருந்து பின் வாங்கிய ஸ்ருதி நான் அப்படி சொல்லவில்லை என பல்டி அடித்தார். அதே போல் மகேஷ்பாபு பட போஸ்டர் விவகாரம் சமந்தாவுக்கு சர்ச்சையை உண்டாக்கி விட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடந்த தெலுங்கு பட விழாவில், ""படம் ஓடா விட்டால் அதில் நடித்தவர்களைக் குறை சொல்லக் கூடாது. அந்த கதையையும், இயக்குநரையும் தேர்வு செய்த தயாரிப்பாளர் மீதுதான் தவறு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என பேசி விட்டு போக, தெலுங்கு தயாரிப்பாளர்களின் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் மகேஷ்பாபு - சமந்தா இணைந்து நடித்த படம் தோல்வியடைந்ததை அடுத்து அப்படத் தயாரிப்பாளர் மகேஷ்பாபுவிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை மனதில் வைத்தே சமந்தா இப்படி பேசியிருப்பதாகவும், மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் வாய்ப்பு பிடிக்க அவர் இப்படி கருத்து சொல்லியிருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சில வருடங்களாகவே நடிப்பை நிறுத்திக் கொண்டு படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. அவ்வப்போது நட்பு ரீதியாக வரும் வாய்ப்புகளை ஏற்று "உருமி', "ஏபிசிடி' என இரண்டு படங்களில் நடித்தார். தற்போது அஜய்தேவ்கான் நடிப்பில் "ஆக்ஷன் ஜாக்ஷன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும் அக்ஷய்குமார் நடிக்கும் "சிங்ஈஸ் பிளிங்' என்ற படத்தையும் இயக்குகிறார். இதற்கிடையில் "ஏபிசிடி' ஹிந்தி படத்தில் நடித்த பிரபுதேவா அடுத்து அதே படக்குழு தமிழ், ஹிந்தியில் தயாரிக்கும் "ஏபிசிடி பார்ட் 2'-வில் நடிக்க உள்ளார். முதன் முறையாக வில்லன் வேடத்தில் இதில் தோன்றுகிறார். வருண்தாவன், சாரதா கபூர் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கெனவே பிரபுதேவா தமிழில் நடித்து முடித்திருக்கும் "களவாடிய பொழுதுகள்' விரைவில் வெளியாக உள்ளது.

"கத்தி' படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு "விஜய் 58' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கும் இப்படம் வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. ராணி வேடத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. அவரது மகளாக இளவரசி வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அரண்மணை போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு விஜய், ஹன்சிகா பங்கேற்கும் பாடல் காட்சிகள் படமாகி வருகின்றன. விஜய்க்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற மனிஷ் மல்ஹோத்ரா ஒப்பந்தமாகியுள்ளார். "எந்திரன்', "சிவாஜி' ஆகிய படங்களில் ரஜினிக்கு இவர்தான் ஆடைகளை வடிவமைத்தார். ஷாரூக்கானின் அநேக படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் இவர். ஹாலிவுட்டில் உருவான "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' பாணியில் இப்படம் உருவாகிறது.

முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார் அஞ்சலி. சித்தி பாரதிதேவி, இயக்குநர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல்களையடுத்து தமிழ்ப் படங்களை விட்டு விலகினார். இதையடுத்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அங்கேயும் வாய்ப்புகள் குறையவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பினார். கோலிவுட்டில் தக்க வைத்திருந்த முன்னணி இடமும் போக, டோலிவுட்டில் அதிகரித்துள்ள போட்டியால் அங்கேயும் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.  சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் "அப்பா டக்கர்' படத்தில் தற்போது அஞ்சலி நடித்து வருகிறார். இதையடுத்து விமல் ஜோடியாக மற்றொரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார். தமிழில்  முழுக் கவனத்தையும் திருப்ப முடிவு செய்திருக்கும் அஞ்சலி, தன் இருப்பிடத்தையும் சென்னைக்கு மாற்ற உள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த "கயல்' ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அஞ்சலி,  பொது விழாக்களில் இதுவரை வராத அளவுக்கு கவர்ச்சியாக வந்திருந்தார். அதே போல் வந்திருப்பது நமீதாவா? என உற்றுப் பார்க்கும் அளவுக்கு எடை கூடியிருந்தார்.

தான்தான் எல்லாம் என்பதில் துளியும் கர்வம் இல்லாதவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பெசன்ட் நகர் வீட்டுக்கு தெரியாத முகமாக யார் போனாலும் இப்போதும் எழுந்து நின்று வணங்குவது அவரது உயர்ந்த இயல்பு. அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை ""ஆபீஸ் பையன் அவர்களே...'' என மரியாதை வார்த்தைகளில்தான் அழைப்பார்.  அதே போல் இவர் ஒன்றும் தெரியாமல் வந்தார் நான்தான் கற்றுக் கொடுத்தேன் என எந்த இடத்திலும் சொல்லவே மாட்டார். அவரிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டேன் என குறிப்பிட்ட நபருக்கே தெரியாத ஒரு குணத்தை வெளிப்படுத்தி பேசி புகழ் சேர்ப்பார். கண்ணதாசன் - வாலி - வைரமுத்து ஒப்பிடுங்களேன்? என சமீப கேள்வி ஒன்றுக்கு... ""என் இசையில் பாடல் எழுத வந்த அத்தனை பேருமே ஜாம்பவான்கள்தான். அவர்களின் தமிழுக்கு எப்போதுமே நான் தலை வணங்குவேன். என் டியூன்தான் உயர்ந்தது... நான் போட்டதுதான் பிரமாதமான இசை என்று சொல்ல மாட்டேன். அது ஒரு டீம் வொர்க். அந்த மேதைகள் கூட, வேலை பார்த்ததால்தான் நான் ஜெயித்தேன். யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது. நீங்கள் கேட்ட மூன்று பாடலாசிரியர்களைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்... கண்ணதாசன் - இனிமை. வாலி - எளிமை. வைரமுத்து - புதுமை'' என அடக்கமாக பதில் உதிர்த்தார் எம்.எஸ்.வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.