/

திரைக்கதிர்

நடிப்பதில்தான் ஆர்வம் என்ற போதிலும், சினிமாவில் ஒரு வேலை என்பதுதான் பாரதிராஜாவின் அதிகபட்ச கனவு. வயது முதிர்ந்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

ஜி. அசோக்

நடிப்பதில்தான் ஆர்வம் என்ற போதிலும், சினிமாவில் ஒரு வேலை என்பதுதான் பாரதிராஜாவின் அதிகபட்ச கனவு. வயது முதிர்ந்த இயக்குநர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன், சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர்தான் இளைய வயது இயக்குநர்கள். எவ்வளவு முயன்றும் இருவரிடமும் வேலைக்கு சேர முடியாத நிலையில், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார். இருந்த போதிலும் இயக்குநர் ஸ்ரீதர்தான் தன் சினிமா பயணத்துக்கான முன்னோடி என்பதை மேடைகளில் இப்போதும் சொல்லி நெகிழ்வார் பாரதிராஜா. அந்த காலத்தில்  பிரபல சினிமா பத்திரிகையாக இருந்த பேசும் படத்தில் வெளிவரும் படத்தின் ஸ்டில்களை வைத்து இதுதான் ஸ்ரீதரின் படம் என்று   சொல்லும் அளவுக்கு பாரதிராஜாவின் மனம் கவர்ந்தவர் ஸ்ரீதர். ""ஆமாம், அசையாத தமிழ் சினிமாவை அசைய வைத்த முதல் படைப்பாளி அவர். பத்துக்கும் மேற்பட்ட ஸ்டில்கள் அந்தப் பத்திரிகையில் வெளிவந்தாலும், ஸ்ரீதர் பட ஸ்டில்லை பார்க்கும் போது அதில் ரசனை தெரியும். அதுதான் பிற்காலத்தில் என் சினிமாக்களிலும் வெளிப்பட்டது'' என்பார் பாரதிராஜா.

கதைத் திருட்டு, காட்சித் திருட்டு என சமீபகாலமாக கோலிவுட் பரபரத்து கிடக்க, கதைப் பதிவில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம். அண்மையில் வெளிவந்த "கத்தி' படத்தில் இருப்பது என் கதை'' என உதவி இயக்குநர் கோபி ஆதாரங்களுடன் புகார் மனு வைக்க, இயக்குநர் முருகதாஸ் தரப்பிலிருந்து இதுவரை பதில் இல்லை. இதையடுத்து கதை பதிவில் சில வரைமுறைகள் வேண்டும் என உதவி இயக்குநர்கள் குரல் எழுப்ப, மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது இயக்குநர்கள் சங்கம். ""கதை பதிவதில் மாற்றங்கள் வேண்டும் என தொடர்ந்து குரல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. இப்போது எழுந்திருக்கும் சில விஷயங்களால் அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சங்கத்தின் உறுப்பினர் அட்டையுள்ளவர்கள் யாராக இருந்தாலும், தங்கள் கதையை தலைப்புடன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணங்கள் எதுவும் இல்லை. இலவச சேவையாக இது செயல்படும். கதை குறித்த விவரங்கள் ரகசியமாக காக்கப்படும்'' என இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்  விக்ரமன். இது எந்த அளவுக்கு நம்பகமானது? என்பது உதவி இயக்குநர்களின் அடுத்த முணுமுணுப்பு.

கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொரு பாடலின் உருவாக்கத்திலும் ஒரு சுவாரஸ்யம். "படையப்பா' படத்தின் படப்பிடிப்புக்கு சென்று அடுத்த பாடலை கொடுத்து வந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. "ஓ ஒ... கிக்கு ஏறுதே....' என்பது அந்தப் பாட்டு. அதில் "ஜீவன் இருக்கும் மட்டும்... வாழ்க்கை நமக்கு மட்டும்... இதுதான் ரஜினி சித்தர் பாட்டு...' என எழுதியிருந்தார். எல்லோரும் ""ஆஹா...'' என பாராட்ட கவிஞருக்கு மகிழ்ச்சி. பின் வீட்டுக்கு வந்த கவிஞரை அலைபேசியில் அழைக்கிறார் ரஜினி, ""சார்... எல்லோரும் அந்த பாட்டை பாராட்டுகிறார்கள். ஆனால், எனக்கு என்னமோ, ரஜினி என்கிற பெயர் அந்த பாட்டுக்குள் வர வேண்டுமா... என்று யோசனையாக இருக்கு... என்னை ரஜினி சித்தர் என்று சொல்லலாமா? எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது... தயவு செய்து  மாற்றிக் கொடுங்கள்'' என்றாராம். யோசித்த கவிஞர் உடனே ""ஜீவன் இருக்கும் மட்டும்.... வாழ்க்கை நமக்கு மட்டும்... இதுதான் ஞான சித்தர் பாட்டு....'' என்று வைத்துக் கொள்ளலாமா என கேட்டிருக்கிறார். ""ஆஹா... இதுதான் சிறந்த வழி...'' என்று ரஜினி சம்மதம் சொல்ல பாடல் மாறி பதிவாகி இருக்கிறது. தன் பெயர் பாடலுக்குள் வர வேண்டும் என போராடுகிற ஹீரோக்களுக்கு மத்தியில், என் பெயர் பாடலில் வேண்டாம் என போராடிய ரஜினியின் அந்த குணம் வியக்கத்தக்கது'' என்பார் கவிஞர் வைரமுத்து.

30 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்காக சென்னை வாசம் என்றாலும், மாதத்தின் சில நாள்களில் பண்ருட்டிக்கு அருகில் உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தில் தங்கர்பச்சானை பார்க்கலாம். தன் தந்தை வழி கிராமமான அங்கே, இன்னமும் விடாப்பிடி விவசாயியாக தங்கர் வலம் வருகிறார். கண்மாய் தூர் வாருவதில் தொடங்கி, "தானே' புயலில் இருந்து மீண்டு வரும் தன் சக விவசாயிகளின் பாதுகாப்பு வரை மக்களின் குரலாக ஒலிக்கவும் அவர் தவற மாட்டார். செம்மண் பூமியான அந்த நிலப்பகுதியில் சிறு தானியங்கள் முதற் கொண்டு, முட்டைகோஸ் வரையிலான பணப்பயிர் வரை விளைந்த காலங்கள் உண்டு. மாறி விட்ட பருவச் சூழல், எட்டாக் கனியாக மாறிப் போன நிலத்தடி நீர் மட்டம் இவையெல்லாம் இப்போது தங்கரை கரும்பு விவசாயியாக மாற்றி இடம் போட்டு விட்டது. "" ஒரு பவுன் தங்கத்தின் விலையும், ஒரு மூட்டை முந்திரி பருப்பின் விலையும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தது. இப்போது தங்கம் ரூ. 20 ஆயிரத்தை கடந்து விட்டது. ஆனால் முந்திரி பருப்பு மூட்டை விலை அதே ரூ. 2,500-க்குதான் விற்கிறது. மேய்கிற மாடு கொஞ்சம் அழுத்தமாகத் தடம் பதித்தாலும் தண்ணீர் ஊறிய பூமியில், இன்றைக்கு 200 அடியைக் கடந்தாலும் தண்ணீர் இல்லை'' சமீபத்தில் பேச்சுக் கொடுத்த போது தங்கர் ஒரு விவசாயியாக கவலைப்பட்ட விஷயம் இது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "லிங்கா' வரும் டிசம்பர் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இணையதளம் மூலம் வெளியான இந்த டீஸர், ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இதில், இரு மாறுபட்ட தோற்றங்களில் ரஜினி தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கோட் சூட் அணிந்து ஸ்டைலாக ஒரு தோற்றத்திலும், வழக்கம் போல் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் இயல்பான தோற்றத்திலும் நடித்துள்ளார். அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் இந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவ இசை இந்த டீஸருக்கு இன்னும் மெருகேற்றி உள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

எலும்பு முறிவையும் பொருட்படுத்தாமல் வலி நிவாரண ஊசி போட்டு கொண்டு நடித்துள்ளார் அனுஷ்கா. "ருத்ரம்மாதேவி', "மஹாபலி' என சரித்திர பின்னணியிலான இரு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ருத்தரம்மாதேவி படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சிக்காக அவர் வாள் சண்டை காட்சியில் நடித்தார். அப்போது அவரது வலது கை மணிக்கட்டில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அனுஷ்கா வாரக்கணக்கில் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தயாரிப்பு தரப்பு இதற்கு ஒப்புதல் அளித்து படப்பிடிப்பைத் தள்ளி வைக்க முன் வந்தது. ஆனால் நான் நடிக்க தயார் எனக் கூறி படப்பிடிப்புக்கு தயாரானார் அனுஷ்கா. பிறகு, காயம் பட்ட கை மணிக்கட்டில் 5 ரோல் தோல் நிறம் கொண்ட பேண்டேஜ் கொண்டு கட்டு போடப்பட்டது. அதன் பின்னர் வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண ஊசி போட்டு கொண்டு குறித்த நேரத்தில் சண்டை காட்சிகளை முடித்துக் கொடுத்தார் அனுஷ்கா. இந்த தகவலை "ருத்ரம்மாதேவி' படத்தின் இயக்குநர் குணசேகர் தன் இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.