போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை இது. குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை, வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் ஆகியவற்றுக்குக் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால் மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டால், உடல் மழமழப்புடன் வலிவு பெறும். சுக்கில விருத்தி ஏற்படும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிடலாம்.