திரைக்கதிர்
ஏகப்பட்ட "பில்ட் அப்'கள் கிளம்பினாலும் இந்த வருஷ பிறந்த நாளையும் மிக அமைதியாக கொண்டாடி முடித்து விட்டார் விஜய். "கத்தி' படக் குழுவினருக்கு


ஏகப்பட்ட "பில்ட் அப்'கள் கிளம்பினாலும் இந்த வருஷ பிறந்த நாளையும் மிக அமைதியாக கொண்டாடி முடித்து விட்டார் விஜய். "கத்தி' படக் குழுவினருக்கு மதிய விருந்து அளித்தார். எப்போதும் எழும்பூர் மருத்துவமனையில் தன் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குபவர், இந்த வருடம் அப்படி செய்யவில்லை. சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள், மாணவர்களைச் சந்திப்பதையும் செய்யவில்லை. அறிக்கை, அறிவிப்பு எதிலாவது செய்தி வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம். சென்னை, நீலாங்கரை இல்லத்தில் தன் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கிறார். ஏதாவது பேசலாம் என தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களுக்கு ""இப்போது எதுவும் வேண்டாம். விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது'' என பஞ்ச் வைத்து எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறார் விஜய்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி வரிசையில் இருந்த ஸ்ரேயாவுக்கு, ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா போன்றவர்களின் போட்டியால் மார்க்கெட் குறைந்தது. இதையடுத்து ஹிந்தியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அங்கும் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு பாலா இயக்கும் கரகாட்டக்காரர்களின் வாழ்க்கை சரித்திரப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. திடீரென்று அந்த வாய்ப்பு கை நழுவி, வரலெட்சுமிக்கு மாறியது. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு கன்னடம் மற்றும் தமிழில் "சந்திரா' என்ற படத்தில் நடிக்க கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்த்த அந்தப் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. உபேந்திராவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்பது பற்றி இன்னும் ஸ்ரேயா முடிவெடுக்கவில்லை. ஸ்ரேயா எதிர்பார்க்கும் சம்பளத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
ஹீரோ ஆர்யா தெரியும்... தொழிலதிபர் ஆர்யா? தன் நண்பரும், ஒளிப்பதிவாளருமான நீரவ்ஷாவுடன் இணைந்து, சினிமாவுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை வாடகைக்கு விடுவது, சென்னை அண்ணா நகர் மற்றும் கிரீம்ஸ் சாலையில் இரண்டு அசைவ ஹோட்டல்கள் ஆகியவை ஆர்யாவின் தொழிலதிபர் முகம். இதனிடையே மீண்டும் படத் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படத் தயாரிப்பில் ஆர்வம் செலுத்திய ஆர்யா, இப்போது அதில் வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். "நான்' ஜீவா சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "அமரகாவியம்' ஆர்யாவின் தயாரிப்புதான். தொழில் முகம் குறித்து கேட்கும் போதெல்லாம், ""நடிகன் என்பதை தாண்டி எனக்குள் எப்போதும் ஒரு பிசினஸ்மேன் உள்ளுக்குள் இருக்கிறான். இயக்குநர் ஜீவா மட்டும் என்னை சினிமாவுக்கு அழைத்து வராவிட்டால், இந்நேரம் தொழிலதிபர் என்கிற அடையாளத்தோடுதான் இருந்திருப்பேன். நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது என் கனவு. அது இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் ஆர்யா.
பெய்ஜிங்கில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில், ""இந்தியாதான் உலகில் அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு. அதேபோல் சினிமாவுக்கான மிகப் பெரிய சந்தையும் இந்தியாதான்''! என்று பேச்சை துவக்கிய ஜாக்கிசான், ""இந்திய சினிமாவில் ஆடிப் பாட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியப் படத்தில் நடிப்பேன். எத்தனை காலம்தான் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருப்பது? இந்தியர்கள் சீன நடிகர்களை இந்தியப் படங்களில் நடிக்க வைக்க வேண்டும். இந்தியாவில் கலையும் கலாசாரமும் நிறைவாக இருக்கிறது. நான் இந்தியா போய் வரும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒரு கலாசாரப் பழக்கத்தை சீனாவுக்கு எடுத்து வருகிறேன்'' என்றவர், மல்லிகா ஷெராவத்தைக் கட்டிப்பிடித்து விடை பெற்றிருக்கிறார்.
தானே நடித்து, இயக்கி ஒரு படத்தை உருவாக்கும் திட்டம்தான் இயக்குநர் பாரதிராஜாவின் சமீபத்திய சினிமா கனவு. அந்தப் படம் தனக்கு முழு நிறைவு தரும் வகையில் இருக்கும் எனவும் நம்புகிறார். "16 வயதினிலே', "முதல் மரியாதை', "வேதம் புதிது' என ஏக படங்கள் அவருக்குப் பெருமை சேர்த்தாலும், ""இதுவரை வந்த என் அத்தனை படங்களுமே என்னோட முழுமையான படைப்பு இல்லை'' என்று சொல்லுவது பாரதிராஜாவின் வழக்கம். ""ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பொறுத்தவரை அவரின் எல்லாப் படைப்புகளுமே சிறந்த படைப்புகள்தான். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு படம் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் நான் என்னுடைய படங்களில் இன்னும் திருப்தி அடைந்து விடவில்லை. இன்னொரு நிறைவான படைப்பில் எனது முழுத் திறமையையும் பயன்படுத்தி நானே நடித்து, இயக்கி உங்கள் பார்வைக்கு வைப்பேன். அதுதான் எனக்கு முழு நிறைவு தரும் படமாக இருக்கும்'' என்பதை அதற்குப் பதிலாக வைப்பார் பாரதிராஜா.
மார்டனாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா... "அட்டக்கத்தி', "ரம்மி', "பண்ணையாரும் பத்மினியும்' என மேக்கப் இல்லாமல் முகம் காட்டியவர் "திருடன் போலீஸ்' படத்துக்காக ஆளே மாறியிருக்கிறார். ""நடிப்பு என்றதும் கவர்ச்சி உடை அணிந்து நடிப்பது முக்கியம் என்று சிலர் அட்வைஸ் செய்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை. இயக்குநர்கள் கவர்ச்சியை மட்டும் நம்புவதில்லை என்பது ஏற்கெனவே பல படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அதுபோன்ற வாய்ப்புகளில் நடிக்கத்தான் எனக்கு ஆசை. நல்ல வாய்ப்புகளில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறேன். மார்டன் என்பதற்காக எது எதையோ கற்பனை செய்து கொள்ள வேண்டாம். மேக்கப்பில் மட்டும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்தாலும், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் வேடங்களை ஏற்பேன். "அட்டக்கத்தி' படத்துக்குப் பின் இதில் தினேஷூடன் மீண்டும் நடிக்கிறேன். "திருடன் போலீஸ்' இதுவரை வந்த படங்களிலிருந்து என்னை வித்தியாசப்படுத்திக்காட்டும்'' என்கிறார் ஐஸ்வர்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...