/

திரைக்கதிர்

திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அடூர் கோபாலகிருஷ்ணன் அதிகமாக பார்த்தவை தமிழ் திரைப்படங்கள்தாம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:40 am

ஜி. அசோக்

திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அடூர் கோபாலகிருஷ்ணன் அதிகமாக பார்த்தவை தமிழ் திரைப்படங்கள்தாம். அப்போது எல்லாம் மிக நீளமாகவும், புராணமயமாகவும் இருந்த படங்களுக்கு மத்தியில்  "பராசக்தி' படம்தான் அடூரின் சினிமா மீதான பார்வையை மேலோங்கச் செய்தது. "வழக்கமான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முதல் படம், "பராசக்தி' என்பதை தன் பேட்டிகளில் அடிக்கடி சொல்லுவதுடன் "வீரபாண்டிய கட்டபொம்மன்', ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்', எஸ்.பாலசந்தரின் "அந்த நாள்' ஆகிய படங்கள் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவை' என்பார் அடூர். ""இடையில் மணிரத்னம் வித்தியாசமான ஸ்டைலில் படங்கள் இயக்கினாலும், அவர் சொல்லும் தீர்வுகளில் நான் முரண்பட்டே நிற்கிறேன். ஆனால் இப்போது தமிழ் சினிமா மாறியிருக்கிறது. புத்தம் புது இயக்குநர்கள் நம்பிக்கை தரும் விதமாக படம் எடுக்கிறார்கள்.  நீண்ட நாள்களுக்கு பின் நான் தமிழில் பார்த்த நல்ல படம் "பருத்தி வீரன்'. மதுரை வட்டார மக்களின் வாழ்க்கை இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் படத்தின் முடிவு ஜீரணிக்க முடியாதது. என்னால் அது போன்ற காட்சிகளைக் கனவிலும் படமாக்க முடியாது'' என்பது தமிழ் சினிமா பற்றி அடூர் சமீபத்தில் சொன்ன கருத்துகள்.

முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது போல, நடிகைகள் இணைந்து நடிப்பது தமிழில் அவ்வளவாக இல்லை. அஜித் நடிப்பில் வெளிவந்த "பில்லா, 'ஆரம்பம்' ஆகிய படங்களில் இரு ஹீரோயின்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த வரிசையில் மீண்டும் அஜித் படத்தில் இரு ஹீரோயின்கள். கௌதம்வாசுதேவ்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் ஏற்கெனவே அனுஷ்கா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கதையின் போக்கில் மாற்றங்களை உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகை ஒருவரை நடிக்க வைக்க எண்ணினார் கௌதம்வாசுதேவ்மேனன். பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிட்டியிருக்கிறது. "ஜீ', "கிரிடம்', "மங்காத்தா' என அஜித் படங்களை எப்போதுமே விரும்புவதாலும், கௌதம்வாசுதேவ்மேனனுடன் நெருங்கிய நட்பில் இருப்பதாலும் இரண்டாவது ஹீரோயின் என்பதையெல்லாம் மறந்து இப்படத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்துக்கான போட்டியில் இருந்தவர் சார்மி. அபரிமிதமான கவர்ச்சி, காதல் கிசுகிசுக்கள் என மீடியா வெளிச்சத்தில் இருந்த போதும், சரி வர ஜொலிக்க முடியவில்லை. தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், அவ்வப்போது இடையிடையே தமிழில் வாய்ப்புகள் தேடி வந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தன் இருப்பை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் காட்டி கொள்வதற்காக தன் நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழில் டப் செய்து வெளியிட தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "சேவகுடு'. ஸ்ரீகாந்த், சார்மி, நாசர், "கஜினி' பிரதீப் ராவத், "கோலிசோடா' மதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழில் "இனி ஒரு விதி செய்வோம்' என்ற பெயரில் வெளிவருகிறது. ஒரு நகரத்தையே தன் வசப்படுத்தி வைத்திருக்கும் தாதாவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற நினைக்கிற ஹீரோவுக்கு என்ன நிகழ்ந்தது என்பது கதை. நீண்ட நாள்களுக்குப் பின் தமிழில் தான் நடித்த படம் வெளிவருவதால் இயக்குநர்களின் பார்வை என் மீது படும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சார்மி.

பாலிவுட்டிலிருந்து என்னை விரட்டியடிக்க சதி நடக்கிறது என பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களையடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. தற்போது "ஹம்ஷகல்ஸ்' என்ற படத்தில் சையப் அலிகான் ஜோடியாக நடிக்கும் தமன்னாவுடன் ரிதேஷ் தேஷ்முக், பிபாஷாபாசு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் தன் பாலிவுட்டில் தொடர் வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ள எண்ணி உள்ளார் தமன்னா. ஏற்கெனவே அசின், த்ரிஷா, காஜல் போன்றவர்கள் ஹிந்தியில் தங்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலை தமன்னாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இவரைப் பற்றி கிசுகிசு கிளம்பிய வண்ணம் உள்ளது. சக ஹீரோயின் பிபாசாவுடன் மோதியதாக தகவல் பரவியதுடன், படக்குழுவினரை தமன்னா மதிப்பதில்லை என்றும் கூறப்பட்டது.  இதற்கு பதிலளித்துள்ள தமன்னா, ""என்னை பாலிவுட்டிலிருந்து விரட்ட வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. இந்தப் புரளிகளைக் கிளப்புவது யார் என்று எனக்குத் தெரியும. நான் வளர்ந்து வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் தடைகளை உடைத்து பெரிய இடத்துக்கு வருவேன்'' என முஷ்டியை உயர்த்தியிருக்கிறார்.

இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓர் ஊழலை துப்பறிய போய் அதில் கிரிக்கெட் பிக்ஸிக், சினிமா, அரசியல் என எக்கசக்க விஷயங்கள் வருகிற மாதிரியான கதையைத்தான்  மணிவண்ணன் தனது மரண நிமிஷங்களிலும் திரைக்கதையாக்கி கொண்டிருந்தார். அரசியலை விமர்சிக்கிற எத்தனையோ படங்கள் வந்தாலும், அரசியல்வாதிகளின் ஆன்மாவை  உலுக்குகிற மணிவண்ணன் பாணியிலான கதைதான் அது. "அமைதிப்படை இரண்டாம் பாகம்' பார்த்த பல தயாரிப்பாளர்கள் அதே பாணி கதை ஒன்றை எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஒன் லைன் பிடித்து, நடிகர் சத்யராஜை முதன்மைக் கதாபாத்திரமாக்கி திரைக்கதையில் பாதியளவு கடந்த நிலையில் மரண நிழல் மணிவண்ணனைச் சூழ்ந்து கொள்ள, முற்றுப் பெறாமல் நின்று போனது அந்த திரைக்கதை.   கேமிரா ஆங்கிள் செட் செய்த பின்னரே அந்த காட்சிக்கான வசனங்களை மனதில் தோன்றுகிற மாதிரி பளீச்சென யோசிப்பது மணிவண்ணனின் வழக்கம் என்பதால், வசனங்கள் இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகளாக நிற்கிறதாம் அந்த திரைக்கதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.