/

திரைக்கதிர்

தொடக்கத்தில் பல ஆண்டுகள் ஏ.ஆர்.ரகுமான் என்றுதான் தமிழில் எழுதப்பட்டது. பின்னர்தான் அது ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது. "ரோஜா'

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:52 am

ஜி. அசோக்

தொடக்கத்தில் பல ஆண்டுகள் ஏ.ஆர்.ரகுமான் என்றுதான் தமிழில் எழுதப்பட்டது. பின்னர்தான் அது ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது. "ரோஜா' படத்துக்கு முன்பு ஏ.எஸ்.திலீப்குமார் என்ற பெயரில் அவர் மலேசியா வாசுதேவன் பாடிய ""டிஸ்கோ டிஸ்கோ...'', மால்குடி சுபா பாடிய ""செட் மீ ஃப்ரீ...'' எனும் இரண்டு தனியார் பாடல் தொகுதிகளை வெளிட்டதுதான் ரஹ்மானின் சினிமா பிரவேசத்தின் முதல் அடி. "பஞ்சதன்' என பெயரிடப்பட்ட ரஹ்மானின் முதல் ஒலிப்பதிவகத்தை வடிவமைத்து, அவரது முதல் பாடலான

""சின்னச் சின்ன ஆசை...''யின் ஒலியமைப்பில் அவரை வழி நடத்தியவர் ஒலிப்பதிவு மேதை எம்மி. 1984-88-ஆம் காலகட்டங்களில் வெளிவந்த இளையராஜாவின் பல பாடல்களில் நாம் கேட்ட சிறந்த ஒலி நேர்த்தியை உருவாக்கியவர் இவரே. பின்னர் ஹெச்.ஸ்ரீதரின் ஒலி அமைப்பு வல்லமை ரஹ்மானின் இசைக்குப் பல வண்ணங்களைக் கொடுத்தது. ஆஸ்கர் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்' வரைக்கும் ஸ்ரீதரின் ஒலியமைப்புத் திறன் ரஹ்மானுக்கு உதவியது. ஒலியமைப்பாளர்கள் வேறு வேறாக இருந்த போதும் ரஹ்மானின் இசையொலி எப்போதுமே தனித்துவம் பெற்றதுதான் வியப்புக்குரிய விஷயம்.

தமன்னாவுக்கு சிறு வயது முதலே நாய்க்குட்டிகள் என்றால் பிரியம். ஆனால் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்காது. இதனால் சொந்த வீட்டில் நாய் வளர்ப்பது என்பது அவருக்கு கனவாகவே நின்று விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நேரத்தில் நாய்க்குட்டி வாங்கி வளர்க்க நேரம் இல்லை. இப்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், தன் கனவு நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து விட வேண்டும் என எண்ணினார். இந்த சமயத்தில்தான் "இட்ஸ் என்டர்டெயின்மென்ட்' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இது நாய்க்குட்டியை மையமாக கொண்ட திரைக்கதை. படத்தில் வரும் நாயின் பெயர்தான் "என்டர்டெயின்மென்ட்.' படம் முழுவதும் தமன்னாவுடனே நாய் பயணிப்பதாக கதை வரும். நாயுடன் விளையாடியபடி நடித்த தமன்னாவுக்கு சிறு வயது ஞாபகம் வந்து விட்டது. உடனடியாக சென்று நாய்க்குட்டி வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். அம்மா திட்டினாலும் சரி... என முடிவெடுத்த தமன்னா தன் செல்ல நாய்க்கு "பெபல்ஸ்' என பெயரிட்டுள்ளார்.

குறும்படங்களின் மூலம் கவனம் ஈர்த்து திரைப்பட வாய்ப்புகளை பெறுவது போல், இசை ஆல்பங்களின் மூலமும் திரை வாய்ப்புகளை பெறும் பாணி உருவாகியுள்ளது. 90-க்கு பிந்தைய காலகட்டங்களில் ஆடியோ பதிவை மட்டுமே கொண்ட இசை ஆல்பங்கள் அதிக அளவில் வெளிவந்தன. இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களே இந்த வகை இசை ஆல்பங்களை அதிகமாக வெளியிட்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் "வந்தே மாதரம்' வீடியோ ஆல்பமாக வெளிவந்தது. இந்த வகை ஆல்பங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு எழுந்தது. இந்த பாணியில் வீடியோ பதிவாக வெளிவந்திருக்கும் ஆல்பம் "உருகினேன்.' காதல் உணர்வுகளை யதார்த்தமான முறையில் சொல்லும் இந்த ஆல்பத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. "சாயின் ட்யூன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் குமார் நாராயணன் தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ளார். ஜோடியாக சோபியா அலி நடித்துள்ளார். வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ணமாயா பாடல்களை எழுதியுள்ளார். வந்தனா சீனிவாசன், வாசன், வைசாலி பாடியுள்ளனர். ""26 லட்சம் செலவில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது. ஏற்கெனவே சாய்பாபா குறித்த பாடல்களை வெளியிட்டேன். தற்போது "எதிர்மறை' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்'' என்றார் குமார் நாராயணன்.

இந்தியா - பாகிஸ்தான் யுத்த சமயத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நிதி கொடுப்பதற்காக தமிழ் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்கு சென்றிருந்தார்கள். அந்த குழுவில் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டதும் ஜனாதிபதி -தமிழ்க் கலைஞர்கள் சந்திப்புக்கு ஏற்பாடானது. தமிழ்க் கலைஞர்களுடன் அன்போடு பேசிக் கொண்டிருந்த டாக்டர்.ராதாகிருஷ்ணன் முன்னால்  ""பிறக்கும் போதும் அழுகின்றான்... இறக்கும் போதும் அழுகின்றான்...'' பாடலை ராகத்தோடு தனக்கே உரிய பாணியில் பாடிக் காட்டினாராம் பாபு. டாக்டர் ராதாகிருஷ்ண்ன் பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில்... பாடிக் கொண்டிருந்த சந்திரபாபு அப்படியே சர்ருன்னு தாவிப் போய் அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடித்து ""நீ பெரிய ஞானஸ்தன்...'' என சொல்லி விட்டாராம். கொஞ்சமும் முகம் சுளிக்காத டாக்டர் ராதாகிருஷ்ணன் சந்திரபாபுவை சிரித்துக் கொண்டே அரவணைத்துக் கொண்டாராம்.

அரசியலில் ரீமா கல்லிங்கல்? சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிப்பதை பலர்  தவிர்த்து விடுவார்கள். "என்ன கேள்வி கேட்க போகிறீர்கள்? என்பதை எனக்கு முதலில் அனுப்பி வையுங்கள்' என பேட்டி தருவதற்கு நிபந்தனைகள் வைக்கும் நடிகைகளும் உண்டு. ஒரு சிலர்தான் விளைவுகள் என்ன வந்தாலும் வெளிப்படையாக தங்கள் பதில்களை பதிவு செய்வதுண்டு. அந்தப் பட்டியலில் இப்போது ரீமா கல்லிங்கல். முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து உருவான "டேம் 999' படத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது, அந்த படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது முதல் பல சிக்கலான அரசியல் தீர்வுகளுக்கும் அவர் தன் இணையத் தள பக்கத்தில் பதிலளித்து வருகிறார். சமூக பணிகளில் ஆர்வம் கொண்டிருக்கும் ரீமா எதற்கும் ஒளிவு மறைவின்றி பதில் சொல்லுவார். இது அரசியல் பிரவேசத்துக்கான முயற்சி என கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரீமா... ""பிரபலங்களின் ஒருத்தியான என் பதில்களால் சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது எனக்கு தெரியும். இளைஞர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே என் கருத்துக்களை முன் வைக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டை பக்கம் ராராபுரம் கிராமத்துக்காரர் தம்பி ராமையா. மூன்று தம்பிகள், ஒரு தங்கை என மொத்த குடும்பத்தையும் சுமக்க வேண்டிய பொறுப்பு  ராமையாவின்

தோள்களில் உட்கார்ந்து கொள்ள, பிழைப்புத் தேடிச் சென்னை வந்தவருக்கு பல முனைகளிலும் பலத்த அடி. சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டே குடும்பத்தைக் காப்பாற்ற லாட்டரி சீட்டு கம்பெனி, சாப்பாட்டு மெஸ்,

டீக்கடை என பார்த்த வேலைகள் ஏராளம். எதுவும் கை கொடுக்காத நிலையில் சினிமாதான் வாழ்க்கை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர். மனைவி பொன்னழகு என்கிற சாந்தி. மகள் விவேகா. மகன் உமாபதி. பள்ளிக் காலத்திலிருந்தே விவேகனாந்தர் மீது அத்தனை ஈடுபாடு. முதல் பிள்ளை கண்டிப்பாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். அதற்கு விவேகானந்தர் பெயரை வைக்கலாம் என காத்திருந்தவருக்கு, பெண் குழந்தை பிறந்ததும் பயங்கர குழப்பம். விவேகானந்தரையே சுருக்கி விவேகா என வைத்து விட்டார். மகனின் உமாபதி என்கிற பெயர் தன் தம்பிகள் மீது கொண்ட அன்பால் வைத்தது என்பார். கதை எழுதுவதிலும், நடனம் ஆடுவதிலும் உமாபதி கை தேர்ந்து விட்டதால் விரைவில் சினிமாவில் பார்க்கலாம் என்கிறார் தம்பி ராமையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.