திரைக்கதிர்
பாட்ஷா, எந்திரன் ஆகிய இரு படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்ற குழப்பத்தில் ரஜினி இருப்பதாகத் தெரிகிறது.


பாட்ஷா, எந்திரன் ஆகிய இரு படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்ற குழப்பத்தில் ரஜினி இருப்பதாகத் தெரிகிறது. ரஜினியின் வாழ்க்கையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய படம் "பாட்ஷா'. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற சூழலையையும் இப்படம் ஏற்படுத்தியது. அந்த பேச்சு நாளடைவில் அடங்கிப் போனது. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் "பாட்ஷா' படத்துக்கு எப்போதும் பரபரப்பு உண்டு. இந்நிலையில் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கெனவே "எந்திரன் 2' குறித்து இயக்குநர் ஷங்கருடன் ரஜினி தரப்பு பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியை சந்தித்த சுரேஷ்கிருஷ்ணா "பாட்ஷா 2' குறித்து ஆலோசித்தார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. "பாட்ஷா 2' உருவானால் அது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விடும். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு படம் உருவாகாமல் போனால் முதல் பாகத்துக்கான பரபரப்புகள் அடங்கி விடும் என ரஜினி யோசிப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் ரஜினி சம்மதித்தால் "சந்திரமுகி 2' எடுக்க தயார் என இயக்குநர் பி.வாசு தெரிவித்திருத்திருக்கிறார்.
பொங்கல் பட போட்டியில் சத்யராஜ்... "உளவுத்துறை', "ஜனனம்' படங்களின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்ற எஸ்.டி.ரமேஷ்செல்வம் எழுதி, இயக்கியுள்ள படம் "கலவரம்'. சத்யராஜ், சுஜிபாலா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பெரும் போராட்டங்களுக்குப் பின் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. "வீரம்', "ஜில்லா' ஆகிய படங்கள் 10-ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஜன.14-ஆம் தேதி வெளியாக உள்ளது. கதை குறித்து இயக்குநர்... ""ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதிதான் கதை. சக மனிதனுக்கு பிரச்னை எனும் போது கடந்து போகிற ஒரு சின்ன வருத்தம், தமக்கென வரும் போதுதான் அதன் வீச்சு பெரிதாக தெரிகிறது. அப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து ஒருவர் வெளியே வந்தாலும், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். அதைக் கண்டுக் கொள்ளாமல் போவதால்தான் இன்னும் பிரச்னைகளுக்கு வழிகோலாக அமைந்து விடுகிறது. அது போன்ற சம்பவத்தின் பின்னணிதான் கதைக்கரு. அரசியல் நெறிகளின் உண்மை ரூபங்களைக் கருவாக்கி அதை வெளிக் கொண்டு வந்திருக்கும் சினிமாவாக இது உருவாகி இருக்கிறது'' என்றார் இயக்குநர்.
திருமண சர்ச்சை ஓய்ந்த நிலையில் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அனன்யா. கலைந்து போன காதல் கனவு... குடும்பத்தாருடன் மனக் கசப்பு... என ஏக பிரச்னைகளால் ஏற்று நடிக்க இருந்த பல படங்கள் கை நழுவி போனது. ஒப்புக் கொண்ட படங்களிலிருந்தும் வெளியேறினார். மலையாளப் பட வாய்ப்புகள் வந்த போதிலும், தமிழ்ப் படங்களுக்கு தற்போது முக்கியத்துவம் தந்து நடிக்க துவங்கியுள்ளார் அனன்யா. கேரளத்தில் இருப்பதை விட தமிழ்நாட்டில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கவே அவர் விரும்புவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே "இரவும் பகலும்', "புலிவால்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். "புலிவால்' படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது மலையாளத்திலிருந்து ரீமேக் ஆகும் "காக்டெயில்' படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் ஸ்பெல் பௌண்ட் ஃபிலிம்ஸ் ஐஎன்சி நிறுவனம் "அதிதி' என்ற பெயரில் தயாரிக்கிறது. "அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்குகிறார்.
"ஜெய்ஹிந்த்' இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கிறார் அர்ஜுன். இந்தியாவின் தற்போதைய கல்வி சூழல் குறித்த நிலை கதையாகிறது. பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளதையடுத்து பாங்காக்கில் படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு. படப்பிடிப்பில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் ராணுவ முகாம் போன்ற செட் உருவாக்கப்பட்டு சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இதில் அர்ஜுன், வில்லன் பாத்திரம் ஏற்றுள்ள ராகுல் தேவ் சண்டையிடும் காட்சிகள் படமாயின. சண்டை பயிற்சியாளர் பவர் பாஸ்ட் மேற்பார்வையில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ""முதல் பாகம் வேறொரு பயணத்தில் தன் வெற்றியைத் தக்க வைத்தது. இரண்டாம் பாகத்தின் கதை வேறு மாதிரியானது. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் கல்வி முறையை வைத்தே அமைகிறது என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளைத்தான் இந்தக் கதைக்கு மூலமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளேன் என்கிறார் அர்ஜுன்.
ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி கதைகளுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே மவுசு. இந்த வரிசையில் கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி சீனாவில் வெளியான "போலீஸ் ஸ்டோரி 2013' ஹாலிவுட் உலகில் பலத்த வரவேற்பைப் பெற்றது. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் வெளியான இப்படம், இந்தியாவிலும் பல மாநிலங்களில் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாக இருக்கிறது. ""ரிஸ்க் எடுத்து இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை'' என கடந்த ஆண்டு அறிவித்த ஜாக்கிசானின் கடைசி ஆக்ஷன் படம் இது என்பதால் ஹாலிவுட் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது இந்த படம். எதிர்பார்ப்புக்குரிய ஜாக்கிசானின் அதிரடி சாகசங்கள் நிறைந்த இப்படம் இதுவரை காணாத அதிகமான வசூலை வாரி குவித்துள்ளது. "பர்ஸ்ட் ஸ்ட்ரைக்', "கு ஐம் ஐ', "சிஇசட் 12' உள்ளிட்ட ஜாக்கிசானின் வெற்றிப் படங்களைத் தமிழகத்தில் வெளியிட்ட சுரபி பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாக்கிசானுடன் லூ லீ, ஜிங் டைன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபரலங்கள் நடித்துள்ளனர்.
"ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் "வல்லினம்'. இதில் நகுலுக்கு ஜோடியாக மிருதுளா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் அதன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இதன் காரணமாக, படத்தின் நாயகி மிருதுளாவுக்கு படம் வெளிவருவதற்கு முன்பே வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் "மறுமுனை' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய மாரிஸ்குமார் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். ""வல்லினம்' பட டிரெய்லர் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அப்பட வெளியீட்டுக்கு பின்புதான் மற்ற படங்களில் நடிக்கலாம் என்றிருந்தேன். "வல்லினம்' பட வெளியிடு இப்போது உறுதியாகியிருப்பதால், மற்ற படங்களில் நடிக்கிறேன். "மறுமுனை' காதலை அடிப்படையாக கொண்ட கதை. காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சொல்லும் விதத்தில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. காதலோடு, த்ரில்லரும் கலந்துள்ளதால் வித்தியாசமான படமாக இது இருக்கும்'' என்றார் மிருதுளா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...