திரைக்கதிர்
"பில்லா' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார் நயன்தாரா. சிறிய இடைவெளிக்குப் பின் "ஆரம்பம்' படத்தில் ஓரிரு ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார்.


"பில்லா' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார் நயன்தாரா. சிறிய இடைவெளிக்குப் பின் "ஆரம்பம்' படத்தில் ஓரிரு ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். இந்நிலையில் தமிழில் "ஜெயம்' ரவியுடன் நடிக்கும் புதிய படத்தில் ஆக்ஷன் வேடம் ஏற்கிறார். ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாராவுக்கு போலீஸ் வேடமாம். இதற்காக உடலை ஸ்லிம் தோற்றத்துக்கு மாற்றுவதுடன் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கான பிரத்யேக பயிற்சிகளையும் பெற்று வருகிறார். படம் குறித்து ராஜாவிடம் பேசிய போது, ""என் கதைகளில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இப்படத்திலும் அதுபோல் வலுவான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பது பற்றி பலரும் கேட்கிறார்கள். "பில்லா படத்தில் வந்ததைப் போன்று ஆக்ஷன் காட்சிகளில் நயன்தாராவை பார்க்கலாம்'' என்கிறார் ராஜா.
குருத்துடையார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நாங்கெல்லாம் ஏடா கூடம்'. இயக்குநர் சுப்பிரமணிய சிவாவின் உதவியாளர் ஆர்.விஜயகுமார் இப்படத்தின் மூலம் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர் சொல்வது, ""வட சென்னையின் விருப்பமான விளையாட்டு என்ன? கபடி, கில்லி, ஃபுட்பால் என்றுதானே எல்லோருக்கும் யோசனை போகும். அதெல்லாம் இல்லை. பாக்ஸிங்தான் அவர்களின் நாடி நரம்புகளில் ஊறிய விளையாட்டு. பாக்ஸிங் குழுக்களாக செயல்பட்டு வந்த வட சென்னையில் இப்போது துளிக்கு கூட அந்த விளையாட்டு இல்லை. அதைக் களமாக கொண்டே திரைக்கதை அமைத்துள்ளேன். வட சென்னை இளைஞரான ஹீரோவுக்கு பாக்ஸிங் கற்று தாதாவாக வேண்டும் என்பது ஆசை. காரணம் ஒரு காலத்தில் வட சென்னை தாதாக்கள் பாக்ஸிங் வீரர்களாக இருந்தார்கள். ஆனால் நல்ல குருநாதர் கிடைத்து பாக்ஸிங்கை ஒரு விளையாட்டாக அந்த ஹீரோவுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன் பின் நடந்தது என்ன? வட சென்னை முழுவதும் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்கிறார்.
மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், பாண்டியராஜன், பாக்யராஜ், பாத்திபன் ஆகியோர் இயக்குநராக வெளிப்பட்டதுடன், நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இந்த வரிசையில் அமீர் "யோகி' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இயக்குநர் தம்பிராமையா இப்போது படம் இயக்குவதை விடுத்து முழு நேர நடிகராகி விட்டார். இந்த வரிசையில் "தவமின்றி கிடைத்த வரமே' படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிக்க இருக்கிறார் பிரபுசாலமன். புதுமுகங்கள் நடிப்பில் "கயல்' படத்தை இயக்கி வரும் பிரபுசாலமன் கதாபாத்திரத்தின் அழுத்தம் பிடித்திருந்ததால் அப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். "நம்ம அண்ணாச்சி' படத்தை இயக்கிய எஸ்.ஜே.தளபதிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்குகிறார். தன் காதலனின் மரணத்தில் உள்ள குளறுபடி காதலிக்குத் தெரிய வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை.
ஜெனி பவர் ஃபுல் மீடியா தயாரிக்கும் படம் "அது வேற இது வேற'. நகைச்சுவை நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சானியாதாரா நடிக்கிறார். பல இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற திலகராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். ""இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் வித விதமான திரைக்கதைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லாஜிக் பார்க்காமல் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிப் படங்களாக மாறியிருப்பது இதுவரைக்கும் எனக்கு விளங்காத விஷயமாகவே இருக்கிறது. அந்த பாணியைத்தான் இந்த திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறேன். தற்போதுள்ள நகைச்சுவை பாணி சினிமாவுக்கு ஏற்ப இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைகள் நிறைய இருப்பினும், காலம் கடந்து கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவே இந்த கதையை தேர்ந்தெடுத்துள்ளேன். தாதாவாகும் நோக்கத்தில் கிராமத்திலிருந்து வரும் ஹீரோ எந்த நிலையை அடைந்தான்? என்பதே கதை'' என்றார் திலகராஜன்.
"துப்பாக்கி' படத்தின் பெரும்பகுதி காட்சிகளை மும்பையில் படம் பிடித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்க்கு பெரும் வெற்றிப் படமாக இப்படம் அமைந்ததால் "தலைவா' படக் கதை மும்பையில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டது. அதே போல் அஜித்தின் "ஆரம்பம்' படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல தமிழ்ப் படங்களுக்கு மும்பை, பிரதான படப்பிடிப்பு தளமாக மாறி விட்டது. பல திரைக்கதைகள் மும்பையை மையமாக வைத்து உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் "ஜில்லா' படத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் முருகதாஸ், முதலில் மும்பையை கவனத்தில் கொண்டுதான் திரைக்கதை அமைத்தார். திரைக்கதையில் அடுத்தடுத்து மாற்றங்கள் உருவாகி வருவதால், முருகதாஸ் தன் உதவியாளர்களுடன் கொல்கத்தா சென்று படப்பிடிப்பை நடத்துவதற்கான பிரதான இடங்களைத் தேர்வு செய்து வருகின்றார்.
சர்ச்சை புகழ் சாமியின் அடுத்த படைப்பு "கங்காரு'. "சிந்து சமவெளி' பட அனுபவத்துக்குப் பின் படம் இயக்குவதில் தாமதம் காட்டிய சாமி, நிதானமாக அடுத்த அடி எடுத்து வைக்கிறார். இந்த முறை சர்ச்சைகளுக்கு வேலை இருக்காது என்பது அவர் தரும் உறுதி மொழி. சரி அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது இந்த கதையில்...? ""ஒரு நல்ல சிறுகதை என்பது பாராட்டப்பட வேண்டும். அல்லது திட்டி தீர்க்கப்பட வேண்டும். இது திரைப்படத்துக்கும் பொருந்தும். சமூகத்தின் காலக் கண்ணாடிதான் சினிமா என்பார்கள். அதற்கு ஏற்பவே சமூகத்தைப் பிரதிபலிப்பதாக என் படங்களை அமைத்துக் கொள்வேன். நிறைய விமர்சனங்கள் என் மீது உண்டு. சில இடங்களில் இருந்து நினைத்ததை படம் பிடிக்கிற தைரியம் உங்களுக்கு இருக்கிறது என்ற பாராட்டு பத்திரங்களும் வந்ததுண்டு. ஆனால் விமர்சனங்களை உடைக்கும் படமாக ஒரு படத்தை எடுக்க ஆசை. அந்த படம்தான் இந்த "கங்காரு'. அண்ணன் - தங்கை இடையேயான பாசம் கதைக்கரு. எத்தனை உயரம் தாண்டினாலும் தன் குட்டியை கீழே விடாது கங்காரு. அதைக் குறிக்கும் விதத்தில்தான் அன்பு நிறைந்த இந்த கதைக்கு "கங்காரு' என பெயர் வைத்திருக்கிறேன். வைரமுத்துவின் பாடல்கள் இந்த கதைக்கு இன்னும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன'' என்கிறார் இயக்குநர் சாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...